ஹாங்காங்கில் போராட்டம் நடத்தி வரும் ஜனநாயக ஆதரவாளர்களுடன் அந்த நகர அரசின் தலைமை அதிகாரி கேரி லாம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஹாங்காங்கில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், போராட்டக் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரை ஹாங்காங் அரசின் நிர்வாகத் தலைவர் கேரி லாம் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
முன்னறிவிப்பின்றி, ரகசியமாக நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, போராட்டக்காரர்களின் 5 கோரிக்கைகள் குறித்த அரசின் நிலைப்பாட்டை கேரி லாம் விளக்கினார்.
எனினும், அந்தக் கோரிக்கைகளில் ஒன்று கூட ஏற்கப்படும் என்பதற்கான அறிகுறியை அவர் வெளிப்படுத்தவில்லை.
போராட்டக்காரர்களை அலட்சியப்படுத்துவதாகவும், போலீஸ் படைபலத்தை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதாகவும் தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டை கேரி லாம் மறுத்தார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவை அந்த நகர பேரவையில் நிறைவேற்றுவதற்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், 3 மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஹாங்காங் அரசின் தலைமை அதிகாரி கேரி லாம் பதவி விலக வேண்டும், ஜனநாயக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் மீது விசாரணை நடத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்து, 80-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், போராட்டக்காரர்களுடன் கேரி லாம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.