பாகிஸ்தானிலுள்ள பல்வேறு பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி அளித்த விவகாரத்தில், ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு அந்நாட்டின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு லாகூர் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்ட லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், கடந்த 2008-ஆம் ஆண்டு கடல்வழியாக ஊடுருவி, மும்பையில் திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் அப்பாவி மக்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 166 பேர் பலியாகினர். லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்புக்கு, ஜமாத்-உத்-தாவா அமைப்பு நிதியுதவி அளித்து வருவதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகள் பலவற்றுக்கு நிதியுதவி அளித்தது தொடர்பாக, ஹபீஸ் சயீது உள்ளிட்ட ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்கள் மீது அந்நாட்டின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு 23 வழக்குகளைப் பதிவு செய்தது. இதையடுத்து, கடந்த மாதம் 17-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
அவரைக் காவலில் வைத்து விசாரிக்க குஜ்ரன்வாலா பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், லாகூரிலுள்ள கோட் லக்பத் சிறைக்கு அவர் மாற்றப்பட்டார். அவருக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ஜமாத்-உத்-தாவா அமைப்பைச் சேர்ந்தவர்கள், பல்வேறு சொத்துகளைப் பயன்படுத்தி பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியுள்ளனர். இதற்காக, சட்டவிரோத பணப் பரிவர்த்தனையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தான் கைது செய்யப்பட்டதற்கு எதிராக லாகூர் உயர்நீதிமன்றத்தில் ஹபீஸ் சயீது உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் மஜாஹிர் அலி நக்வி, முஷ்தாக் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, ஹபீஸ் சயீது தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஏ.கே. டோகர் வாதிடுகையில், மனுதாரருக்கும் (ஹபீஸ் சயீது) ஜமாத்-உத்-தாவா அமைப்புக்கும் எந்தத் தொடர்புமில்லை. தடை செய்யப்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்புக்கு அவர் நிதியுதவி அளித்ததாகக் கூறப்படுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. மும்பை தாக்குதல் சம்பவத்துக்கும், மனுதாரருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், அவருக்கு எதிராக இந்தியத் தரப்பினர் பொய்ப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ஹபீஸ் சயீது உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும். அவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக, அப்பிரிவின் உயரதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.