இலங்கையில் ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதலுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை முடிவுக்கு வந்துள்ள நிலையில், அந்த நாட்டில் பர்தா அணிந்து வர விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியதா என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அனைத்து இலங்கை ஜாமியாதுல் உலாமா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஃபாசில் ஃபரூக் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
அவசரநிலை முடிவுக்கு வந்துள்ள நிலையில், பெண்கள் பர்தா அணிந்து பொது இடங்களுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் முடிவுக்கு வந்ததா என்பது குறித்து இலங்கை முஸ்லிம் தலைவர்களிடையே குழப்பம் நீடித்து வருகிறது.
அதையடுத்து, இந்த விவகாரம் குறித்து இலங்கை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக தெளிவான அறிவிப்பு வெளியாகும் வரை, முகத்தை முழுமையாக மறைக்கும் பர்தாவை அணிந்து வெளியே செல்ல வேண்டாம் என்று முஸ்லிம் பெண்களை தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் என்றார் அவர்.
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது, 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுவெடிப்பில் 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) ஆதரவு பயங்கரவாத அமைப்பான தேசிய ஜவ்ஹீத் நடத்திய அந்தத் தாக்குதலுக்குப் பிறகு, அதிபர் மைத்ரிபால சிறீசேனா அவசரநிலை அறிவித்தார்.
பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கும், தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் போலீஸாருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் அந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
மேலும், பொது இடங்களில் பெண்கள் தங்கள் முகத்தை மறைத்து பர்தா அணிந்து வரவும் தடை விதிக்கப்பட்டது.
தற்கொலைத் தாக்குதலுடன் நேரடியாக தொடர்புடைய அனைவரும் கொல்லப்பட்டோ, கைது செய்யப்பட்டோவிட்டதாக போலீஸார் அறிவித்தனர்.
இந்த நிலையில், 4 மாதங்கள் கழித்து கடந்த 22-ஆம் தேதியுடன் அவசர நிலை முடிவுக்கு வந்ததாக அதிகாரிகள் அறிவித்தனர்.
எனினும், பர்தா தடை நீக்கம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால் முஸ்லிம் தலைவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.