உலகம்

ஈரான் வெளியுறவு அமைச்சரை சந்திக்க விரும்பவில்லை: அதிபர் டிரம்ப்

27th Aug 2019 12:56 AM

ADVERTISEMENT


ஈரான் வெளியுறவு அமைச்சரை சந்திக்க விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸின் பியாரிட்ஸ் நகரில் ஜி-7 நாடுகளின் உச்சிமாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவீத் ஷெரீஃப் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். அணுஆயுதங்கள் பயன்பாடு தொடர்பாக, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பிரச்னை நிலவி வரும் சூழலில், அதிபர் டிரம்ப் பங்கேற்றிருக்கும் உச்சிமாநாட்டுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் அழைக்கப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 
இது தொடர்பாக, அதிபர் டிரம்ப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
ஈரான் வெளியுறவு அமைச்சர், மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பது எனக்கு முன்கூட்டியே தெரியும். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்தான் இந்த ஏற்பாட்டைச் செய்தார். அணு ஆயுதங்கள் பயன்பாடு தொடர்பாக, ஈரான் மற்ற நாடுகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் முயற்சியாக மேக்ரான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
இது குறித்து, அதிபர் மேக்ரான் முன்கூட்டியே என்னிடம் அனுமதி கோரியிருந்தார். அதற்கு நானும் ஒப்புதல் அளித்தேன். எனினும், தற்போதைய சூழலில் ஈரான் வெளியுறவு அமைச்சரை நான் சந்திக்க விரும்பவில்லை. அவரைச் சந்தித்துப் பேச வேண்டிய சூழல் எதுவும் ஏற்படவில்லை.
ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பமல்ல. அந்நாடு அணு ஆயுதங்கள் அற்ற பிராந்தியமாக மாற வேண்டுமென்பதே எங்களின் விருப்பம் என்றார் அதிபர் டிரம்ப்.
மீண்டும் பேச்சுவார்த்தை: சீனாவுடனான வர்த்தகப் போர் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது: 
வர்த்தக விவகாரத்தில், அமெரிக்காவுக்கு சீனா பல இன்னல்களை ஏற்படுத்தி வந்தது. அதன் காரணமாகவே அந்நாட்டின் பொருள்கள் மீது வரி விதிக்கப்பட்டது. அதை சீனா நன்கு புரிந்துகொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது. எனவே, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கவுள்ளது. 
பிரச்னைகளை எப்படித் தீர்க்க வேண்டும் என்பதை சீன அதிபர் ஷி ஜின்பிங் நன்கு புரிந்துவைத்துள்ளார். அதன் காரணமாகவே அந்நாட்டின் சிறந்த தலைவர்களில் ஒருவராக அவர் திகழ்கிறார். இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் என நம்புகிறேன். இது சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும், உலக நாடுகளுக்கும் சிறப்பானதாக அமையும் என்றார் அதிபர் டிரம்ப்.
ரஷியா, சீனா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஈரான் கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டது. ஆனால், அதிலிருந்து விலகுவதாக அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார். இதையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதனால், கடும் பொருளாதார நெருக்கடியில் ஈரான் சிக்கியுள்ளது.
இரு நாடுகளுக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியை அதிபர் மேக்ரான் மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக, ஜி-7 உச்சிமாநாட்டின்போது, ஈரான் அமைச்சர் முகமது ஜாவீத் ஷெரீஃபுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT