உலகம்

இலங்கையில் போர்க் குற்றம் நடைபெறவில்லை: புதிய ராணுவத் தளபதி

27th Aug 2019 12:57 AM

ADVERTISEMENT


இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது போர்க் குற்றங்கள் ஏதும் நிகழவில்லை என்று அந்நாட்டின் புதிய ராணுவத் தளபதி சாவேந்திர சில்வா கூறியுள்ளார். இவர் கடந்த வாரம்தான் அதிபர் சிறீசேனாவால் இலங்கையின் ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின்போது அதனை முன்னின்று நடத்திய 58-ஆவது படைப் பிரிவின் தலைவராக சில்வா பணியாற்றினார். இறுதிப் போரில் நடைபெற்ற போர்குற்றம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சில்வாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், கண்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இறுதிப் போரின்போது விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளை கிடைக்கவிடாமல் தடுத்தனர். ராணுவம் மனிதாபிமான ரீதியில் பல உதவிகளைச் செய்தது. விடுதலைப் புலிகளிடம் பிடிபட்டிருந்த மக்களை மீட்கவே முயற்சித்தோம். போர்க் குற்றம் எதையும் நடத்தவில்லை. ஒரு ராணுவ வீரராக நாட்டுக்காக எதைச் செய்ய வேண்டுமோ அதை மட்டுமே நான் செய்தேன். தமிழர்களும் எங்கள் நாட்டு மக்கள்தான், அவர்களைக் காப்பதும் எனது கடமைதான். தமிழர்களைக் காப்பதில் நாங்கள் எவ்வாறு செயல்பட்டோம் என்பது அவர்களுக்கே தெரியும் என்றார்.
முன்னதாக, இலங்கையின் ராணுவத் தளபதியாக சில்வா நியமிக்கப்பட்டதற்கு இலங்கைத் தமிழர்கள் அமைப்புகள், அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஆகியவை கண்டனம் தெரிவித்திருந்தன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT