உலகம்

ஹாங்காங் போராட்டம்: வகுப்புகளை புறக்கணிக்க மாணவர்கள் முடிவு

23rd Aug 2019 01:11 AM

ADVERTISEMENT


ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்வதற்காக, கல்லூரி வகுப்புகளை 2 வாரங்களுக்கு புறக்கணிக்க அந்தப் பகுதி மாணவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
இதுகுறித்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள மாணவர் குழு தலைவர்கள் கூறியதாவது:
கல்லூரிகளில் புதிய பருவ வகுப்புகள் அடுத்த மாதம் 2-ஆம் தேதி தொடங்குகின்றன.
எனினும், ஜனநாயக ஆதரவுப் போராட்டங்களில் பங்கேற்கவும், எங்களது கோரிக்கைகளை ஏற்க ஹாங்காங் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலும் அந்த வகுப்பைகளைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
அடுத்த மாதம் 13-ஆம் தேதி வரை எங்களது புறக்கணிப்புப் போராட்டம் தொடரும்.
எங்களது ஐந்து கோரிக்கைகள் தொடர்பாக உரிய பதிலளிக்க ஹாங்காங் அரசு தவறினால், வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தை நீடிப்பது பற்றி பரிசீலிப்போம்.
எனினும், அரசின் பதிலைப் பெறுவதற்கு 2 வார கால போராட்டமே போதுமானதாகக் கருதுகிறோம்.
எங்களது கோரிக்கைகளை அரசு செவிமடுக்கவில்லை என்றால், இந்தப் போராட்டத்தில் மேலும் அதிக மாணவர்களை ஈடுபடுத்துவோம் என்று மாணவர் குழு தலைவர்கள் தெரிவித்தனர்.
ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவை அந்த நகர பேரவையில் நிறைவேற்றுவதற்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், 2 மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஹாங்காங் அரசின் தலைமை அதிகாரி கேரி லாம் பதவி விலக வேண்டும், ஜனநாயக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் மீது விசாரணை நடத்த வேண்டும் 
என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தன்னாட்சிப் பிரதேசமான ஹாங்காங்கை சீனாவிடம் பிரிட்டன் ஒப்படைத்ததற்குப் பிறகு அங்கு சீன ஆளுகைக்கு விடுக்கப்பட்ட மிகப் பெரிய சவாலாக இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சூழலில் போராட்டத்தின் தீவிரத்தை அதிகரிக்கும் வகையில் வகுப்புகளைப் புறக்கணிக்கப் போவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT