இருதரப்பு பேச்சு மூலம் இந்தியாவுடனான பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை: இம்ரான் கானிடம் டிரம்ப் வலியுறுத்தல்

இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம், இந்தியாவுடனான பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இருதரப்பு பேச்சு மூலம் இந்தியாவுடனான பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை: இம்ரான் கானிடம் டிரம்ப் வலியுறுத்தல்

இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம், இந்தியாவுடனான பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபரின் பத்திரிகையாளர் தொடர்புத் துறை துணைச் செயலாளர் ஹோகன் கிட்லி கூறியதாவது: காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 15 நாடுகளைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம், நியூயார்க்கில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு முன்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இம்ரான் கானிடம், ஜம்மு-காஷ்மீர் நிலவரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பதற்றத்தை இந்தியாவும், பாகிஸ்தானும் தணிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை டிரம்ப் எடுத்துரைத்தார். பிராந்திய விவகாரங்கள் குறித்தும், இம்ரான் கான் கடந்த மாதம் அமெரிக்கா வந்தது குறித்தும் அவருடன் டிரம்ப் பேசினார். வெள்ளை மாளிகையில் இருவரும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் நட்புறவை எப்படி தொடர்வது என்பது குறித்தும் டிரம்பும், இம்ரான் கானும் பேச்சுவார்த்தை நடத்தினர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டிரம்ப் மற்றும் இம்ரான் கான் தொலைபேசியில் பேசியது குறித்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியும் செய்தியாளர்களுக்கு விளக்கினார். அப்போது அவர், "ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்காவின் நம்பிக்கையை (ஆதரவை) பெறும் நோக்கில், டிரம்புடன் இம்ரான் கான் தொலைபேசி மூலம் பேசினார். காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற சம்பவங்கள் மற்றும் அதனால் தெற்காசியா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்த பாகிஸ்தானின் கவலைகளை டிரம்பிடம் இம்ரான் கான் தெரிவித்தார். தலைவர்கள் இடையேயான தொலைபேசி உரையாடல் நல்ல முறையில் அமைந்திருந்தது. காஷ்மீர் விவகாரத்தில் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் தலைவர்கள் ஒப்புக் கொண்டனர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் 4 நாடுகளின் தலைவர்களையும் பாகிஸ்தான் தொடர்பு கொண்டு பேசியது. பிரான்ஸ் அதிபரையும் தொடர்பு கொண்டு, தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்க பாகிஸ்தான் முயற்சித்தது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com