சுதந்திர பலூசிஸ்தான்? மேலோங்கும் மக்கள் போராட்டம்

பலூசிஸ்தான் தனி நாடு கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அந்நாட்டில் மிகப்பெரிய அளவிலான மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.
சுதந்திர பலூசிஸ்தான்? மேலோங்கும் மக்கள் போராட்டம்

பலூசிஸ்தான் தனி நாடு கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அந்நாட்டில் மிகப்பெரிய அளவிலான மக்கள் போராட்டங்கள் அப்பகுதியில் மட்டுமல்லாமல் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. 2019 உலகக் கோப்பையின் போது இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தின் போது பலூசிஸ்தான் சுதந்திரம் தொடர்பான பதாகைகளுடன் பலர் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி பலூசிஸ்தான் பகுதி பிரிட்டீஷிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. இதையடுத்த 1947, டிச.16-ஆம் தேதி காலத் பகுதி கான் அப்பகுதியை பாகிஸ்தானுடன் இணைப்பது தொடர்பாக பொது மற்றும் மேல்சபை ஆகியவற்றில் தீர்மானம் முன்மொழிந்தார். ஆனால், இதனை இரு சபைகளும் நிராகரித்தன. இந்நிலையில், பலூசிஸ்தான் மீது பாகிஸ்தான் படையெடுப்பு நடத்தியது. காலத் பகுதி கான் மற்றும் அவரது குடும்பத்தினரை சிறை வைத்தது. அப்பகுதியின் முழுக் கட்டுப்பாட்டையும் கைப்பற்றியது. எனவே 1948-ஆம் ஆண்டு முதல் அப்பகுதி பாகிஸ்தானின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. பின்னர் 1996-ஆம் ஆண்டு பலூசிஸ்தான் சுதந்திர நாடு போராட்டம் ஹிர்பியார் மர்ரி என்ற தேசப்பற்றாளரால் தொடங்கப்பட்டது. மேலும் தற்போதைய சூழலில் சர்வதேச அளவில் இந்தியா முன்னணி நாடாக திகழ்வதால் பாகிஸ்தானில் இருந்து பிரித்து பலூசிஸ்தான் தனிநாடாக அமைக்க இந்தியா உதவ வேண்டும் என இந்த இயக்கம் விரும்புகிறது. இதனிடையே பலூசிஸ்தானில் ஏற்பட்டு வரும் அசம்பாவிதங்கள் தொடர்பாக ஐ.நா. சபையில் இந்தியா கண்டனம் தெரிவித்து வருகிறது. 

பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டத்துக்கு இந்தியர்கள் பங்களிப்பு செய்தனர் என்று பலூசிஸ்தான் விடுதலை மன்றமான 'ஹிந்த் பலூச்' தெரிவித்தது. இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனர் ஜிதேந்திரானந்த் சரஸ்வதி கூறுகையில், 'பலூசிஸ்தான் தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. பலூசிஸ்தான் சுதந்திரம் பெற்றபோதிலும், 1948-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானுடன் இணைந்தது. சுதந்திரப் போராட்டத்தின்போது இந்தியர்கள் பங்களிப்பு செய்தனர். தங்களது அடையாளம், கலாசாரம் ஆகியவற்றின் மீது பலூசிஸ்தான் மக்கள் அதிக மரியாதை கொண்டுள்ளனர்' என்றார்.

இந்நிலையில் பலூசிஸ்தான் சுதந்திரம் மற்றும் தனி நாடு தொடர்பாக பலூசிஸ்தான் சுதந்திர மன்றம் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதில் அந்நாட்டைச் சேர்ந்த பலூசிஸ்தான் ஜனநாயகக் கட்சி, பலூசிஸ்தான் தேசிய இயக்கம், பலூசிஸ்தான் மக்கள் கட்சி, நாடு சாரா தேசிய அமைப்பு, அல்வாஸ் அரபு முன்னணி மற்றும் ஏப்ரல் 15 அல்-அவாஸ் உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள் கலந்துகொண்டுள்ளன. இதில் காலத் பகுதி கான் சுலேமான் தௌத், தாஹீர் கரீம், ஷாஸவார் கரீம்ஸாதி, ரஹிம் பந்தோய் பலூச், இஸ்மில் அமிரி, முகமது அல்ஹஸ்பாவி, டெஸ்மன்ட் ஃபெர்னான்டஸ், ஷபீர் பலூச், கிரஹாம் வில்லியம்ஸன் உள்ளிட்ட பலூசிஸ்தானின் பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது பலூசிஸ்தான் சுதந்திர நாட்டை பாகிஸ்தான் அபகரித்து அடிமைப்படுத்திவிட்டதாக அனைவரும் கடுமையாகச் சாடினர். பலூசிஸ்தானின் நவாப்களும், சர்தார்களும் பாகிஸ்தானுடன் சேர்ந்து இறையாண்மை எதிராக செயல்பட்டதாக சுலேமான் தௌத் குற்றம்சாட்டினார். அதுமட்டுமல்லாமல், பலூசிஸ்தான் விடுதலைப் படை பயங்கரவாத அமைப்பு கிடையாது. அவர்கள் தங்களின் உரிமைக்காக போராடுபவர்கள். அந்நிய படையெடுப்புகளில் இருந்து தங்கள் நிலத்தை பாதுகாப்பவர்கள். ஆனால், அதனை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது என்று கூறினார். 

பிரட்டனை ஜெர்மனி ஆக்கிரமிக்க முயற்சித்திருந்தாலும் பிரிட்டன் இவ்வாறு தான் செயல்படும். எங்கள் நிலத்தில் உள்ள வளங்களை கொள்ளையடிக்க நினைக்கும் சீனாவுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். அதனால் தான் அரசியல் காரணங்களுக்காக பலூசிஸ்தான் விடுதலைப் படையை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அறிவித்துள்ளது. அல்-கய்தா போன்ற மிகப்பெரிய பயங்கரவாத அமைப்புகளும், பயங்கரவாதிகளும் பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்படுவது யாருக்கும் தெரியததில்லை. ஒவ்வொரு நாட்டுக்கென ஒவ்வொரு அடையாளம் உண்டு. ஸ்விட்சர்லாந்தை ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என்றழைக்கிறோம், ஜப்பானை சூரிய உதயத்தின் பகுதி என அழைக்கிறோம், அதுபோன்று தான் பலூசிஸ்தானும் கலாசாரம் மிகுந்த மற்றும் தைரியமான மனிதர்கள் உள்ள பகுதியாகும். அதனை தான் பாகிஸ்தான் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளது. 

பலூசிஸ்தானில் மனித உரிமைகள் அடியோடு பறிக்கப்பட்டுவிட்டன. சிறுமிகள் முதல் பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இளைஞர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் அத்துமீறல் நடவடிக்கைகளால் இப்பகுதி சுடுகாடாகி விட்டது. இங்குள்ளவர்களை யாரும் மனிதர்களாகவே நினைப்பதில்லை. ஒருவேளை இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் அப்போது பாகிஸ்தான் வீழ்வது உறுதி. அந்த நிமிடம் முதல் பலூசிஸ்தானுக்கும் சுதந்திரம் கிடைக்கும். அதுபோன்ற சூழல்களுக்கு பலூசிஸ்தான் மக்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இதுபோன்ற சூழநிலையில் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும். எனவே இந்த போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மத்தியக் கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டு வரும் அரசியல் பரபரப்புகளில் ஈரான் கிட்டத்தட்ட தனது வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதேநேரம் பலூச், குர்த், அரபு, அசேரி உள்ளிட்ட அடிமைப்பட்ட நாடுகள் தங்கள் சுதந்திர முழக்கத்தை முன்வைத்துள்ளது. எனவே இதில் வேகமாகவும், தீவிரமாகவும், ஒன்றிணைந்தும் போராட வேண்டியது அவசியமாகும். 

பலூசிஸ்தான் மக்கள் மீது இனப்படுகொலை நடத்தப்பட்டு வருகிறது. இப்பகுதி முழுவதும் பாகிஸ்தான் ராணுவத்தின் அராஜகம் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. ராணுவத்தால் திடீரென நடத்தப்படும் குண்டுவெடிப்புகளால் நூற்றுக்கணக்கானோர் அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர். தேர்தலுக்கு முன்பாக பலூசிஸ்தானில் அரங்கேறும் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என இம்ரான் கான் வாக்குறுதி அளித்தார். ஆனால், அவர் பதவியேற்ற பிறகு இவை மேலும் அதிகரித்துள்ளன. இளைஞர்கள் திடீரென காணாமல் போகின்றனர் மற்றும் கொடுமைப்படுத்தப்படுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர். எனவே அதை எதிர்த்துப் போராட இந்த ஒற்றுமை அவசியமாகிறது. சந்தர்பமும் அதற்கு ஏற்றமாதிரி அமைந்து வருகிறது என்று போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்ரனர்.

இந்நிலையில், பலூசிஸ்தானில் நடைபெறும் கொடுமைகளை, மக்கள் விரோத நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் விதமாகவும், அதற்கு எதிரான மற்றும் தனிநாடு போராட்டங்களை தீவிரப்படுத்தும் விதமாகவும் ட்விட்டரில் #BalochistanSolidarityDay #14AugustBlackDay #BalochistanIsNotPakistan போன்ற ஹேஷ்டேக்குகள் ஆகஸ்ட் 14-ஆம் தேதி ஆக்கிரமித்தன. அவற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான பலூசிஸ்தான் மக்களின் கோஷங்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com