உலகம்

மேலும் 2 ஏவுகணைகளை சோதித்தது வட கொரியா

11th Aug 2019 12:38 AM

ADVERTISEMENT

அமெரிக்க - தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலும் இரு ஏவுகணைகளை வட கொரியா சனிக்கிழமை சோதித்தது.
இதுகுறித்து தென் கொரிய கூட்டு ராணுவ தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வட கொரியாவின் வடக்குக் கடலோரப் பகுதியிலிருந்து இரு ஏவுகணைகள் சனிக்கிழமை ஏவி சோதிக்கப்பட்டன. நடுத்தர தொலைவு வகையைச் சேர்ந்த அந்த ஏவுகணைகள், சுமார் 48 கி.மீ. உயரம் வரை சென்று, 400 கி.மீ. தொலைவில் ஜப்பானுக்கும், கொரிய தீபகற்பத்துக்கும் இடையே கடலில் விழுந்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 3 வாரங்களுக்குள் வட கொரியா மேற்கொள்ளும் 5-ஆவது ஏவுகணை சோதனை இதுவாகும்.
முன்னதாக, வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னிடமிருந்து அருமையான கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அந்த நாடு அணு ஆயுதங்களைக் கைவிடுவது தொடர்பாக மேலும் பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்று நம்புவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். மேலும், நடுத்தர மற்றும் குறுகிய தொலைவு ஏவுகணைகளை வட கொரியா சோதித்து வருவது அந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படாது என அவர் மீண்டும் தெளிவுபடுத்தினார்.
இந்தச் சூழலில், ஐந்தாவது முறையாக வட கொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சி குறித்த தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துவது மட்டுமன்றி, தாங்கள் புதிதாக மேம்படுத்தியுள்ள ஏவுகணைகளின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ளவும் வட கொரியா இந்த ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதாக தென் கொரிய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக வட கொரியா கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், அந்த நாட்டுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் ஆகியோர் சிங்கப்பூரிலும், வியத்நாம் தலைநகர் ஹனோயிலும் இரு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், கொரிய எல்லைப் பகுதியில் கிம் ஜோங்-உன்னை அதிபர் டிரம்ப் கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி திடீரென சந்தித்து பேசினார்.
எனினும், வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளை உடனடியாகத் தளர்த்த அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இதன் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வட கொரியா கடுமையாக எதிர்த்து வரும் கூட்டு ராணுவப் பயிற்சியை அமெரிக்காவும், தென் கொரியாவும் மீண்டும் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கின. இதற்கான எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், 3 வாரங்களுக்குள் 5-ஆவது முறையாக வட கொரியா தற்போது ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT