திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

போலீஸார் தடையை மீறி ஹாங்காங்கில் ஊர்வலம்

DIN | Published: 11th August 2019 12:37 AM
ஹாங்காங்கில் தடையை மீறி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக போலீஸார் வீசிய கண்ணீர்ப்புகை குண்டு.

ஹாங்காங்கில் போலீஸார் விதித்த தடையை மீறி ஜனநாயக ஆதரவாளர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர்.
மேலும், நகரின் பல்வேறு இடங்களில் முக்கிய சாலை சந்திப்புகளை அவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: ஹாங்காங் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்கப்போவதில்லை என்று அந்த நகர அரசின் தலைவர் கேரி லாம் தெரிவித்துவிட்டதையடுத்து, ஆயிரக்கணக்கானவர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதற்காக, நகரின் டாய் போ பகுதியில் அவர்கள் கூடி, அங்கிருந்து ஊர்வலமாகச் செல்ல முற்பட்டனர். எனினும், அவர்களது ஊர்வலத்துக்கு ஏற்கெனவே போலீஸார் அனுமதி மறுத்திருந்தனர். அந்தத் தடையையும் மீறி டாய் போ பகுதிக்கு வந்த ஆர்ப்பாட்டக்காரர்களை எச்சரிக்கும் வகையில், "கலைந்து சென்றுவிடுங்கள்; இல்லையென்றால் நாங்கள் பலப் பிரயோகம் செய்ய வேண்டியிருக்கும்' என்ற வாசகம் அடங்கிய பதாகையை போலீஸார் ஏந்தியிருந்தனர்.
இதனால், போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. எனினும், அத்தகைய சம்பவங்கள் எதுவும் நடப்பதற்கு முன்னரே அங்கிருந்து வேறு பாதை வழியாக நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாக சென்றனர். அவர்களில் ஒரு பிரிவினர், கடந்த வாரம் கலவரத் தடுப்பு போலீஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் மோதல் வெடித்த ஷா டின் பகுதியில் கூடினர். மற்றொரு பிரிவினர் டாய் வாய் பகுதிக்குச் சென்று அங்கு தடுப்புகளை ஏற்படுத்தினர்.
போலீஸாருடன் மோதலில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிட்டு, நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதும், அந்தப் பகுதிக்கு போலீஸார் வந்தால் அங்கிருந்து மற்றொரு பகுதிக்கு நகர்ந்துவிடுவதும்தான் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட உத்தி என்று போராட்டக்காரர்கள் பின்னர் தெரிவித்தனர். எனினும், சில இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர்.
இதற்கிடையே, தங்களது போராட்டத்துக்கு சர்வதேச அளவில் ஆதரவு திரட்டுவதற்காக ஹாங்காங் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடங்கிய போராட்டங்கள், அந்த மசோதா காலாவதி ஆன பிறகும் 2 மாதங்களுக்கும் மேல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஆப்கன் திருமண நிகழ்ச்சியில்  தற்கொலைத் தாக்குதல்: 63 பேர் பலி
பிரதமர் மோடி-பூடான் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு
ஹாங்காங்: ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்ட ஊர்வலம்
காஸா: 3 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொலை
வங்கதேச குடிசைப் பகுதியில் தீவிபத்து: 10,000 பேர் வீடுகளை இழந்து தவிப்பு