உலகம்

ஐக்கிய அரபு அமீரக லாட்டரிச் சீட்டில்  கேரளத்தைச் சேர்ந்தவருக்கு ரூ.1.90 கோடி பரிசு

11th Aug 2019 12:59 AM

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓட்டுநராக பணியாற்றும் கேரளத்தைச் சேர்ந்த அப்துல் சலாம் ஷாநவாஸ் (43) என்பவர் வாங்கிய லாட்டரிச் சீட்டுக்கு 2,72,260 டாலர் (ரூ.1.90 கோடி) பரிசு கிடைத்துள்ளது.
கேரளத்தின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷாநவாஸ் இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள கலீஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
பரிசுச் சீட்டில் எனக்கு ரூ.1.90 கோடி கிடைத்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான் 50 ஆண்டுகள் கடுமையாக உழைத்தாலும் கூட, இவ்வளவு பெரிய தொகையை சம்பாதிக்க முடியாது.
கடந்த 1997-ஆம் ஆண்டு வெறும் கையுடன்தான் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்தேன். ஆனால், மனதில் ஆயிரம் விதமான எதிர்பார்ப்புகள் இருந்தன. ஓட்டுநர் உரிமம் பெற்று ஓட்டுநர் வாழ்க்கையை ஷார்ஜாவில் தொடங்கியபோது கூட என்னால் பெரிய அளவில் சேமிக்க முடியவில்லை. அதன் பிறகுதான் அபுதாபிக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்து வந்தேன். தற்போது மாதந்தோறும் 650 டாலர் (ரூ.45,500) வருவாய் ஈட்டி வருகிறேன். அண்மையில் அபுதாபி கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் வெளியிடப்பட்ட லாட்டரிச் சீட்டை 54 டாலருக்கு (ரூ.3,780) வாங்கினேன். இதில் சுமார், ரூ.2 கோடி பரிசு கிடைத்துள்ளது.
குலுக்கலில் வெற்றி பெற்றது குறித்து எனக்கு கடந்த 5-ஆம் தேதியே தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை அந்தச் செய்தியை ரகசியமாக வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. இதனால், கேரளத்தில் உள்ள எனது குடும்பத்தாரிடம் கூட தெரிவிக்கவில்லை.  எனினும், எனது மனைவியிடம் மட்டும் ஒரு
இன்ப அதிர்ச்சி காத்திருப்பதாக மட்டும் சொல்லி வைத்திருந்தேன்.
இந்த நிகழ்வையடுத்து எனது சொந்த ஊருக்கு திரும்பத் திட்டமிட்டுள்ளேன். என்னுடைய சிறுசேமிப்பில் அண்மையில் காலிமனை ஒன்றை மட்டும் வாங்கியிருந்தேன். அந்த மனையில், வரும் 2021-க்குள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தேன். அந்த நேரத்தில் இறைவன் கொடுத்த வரமாக இந்தப் பணம் எனக்கு கிடைத்துள்ளது என்று ஷாநவாஸ் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT