பாகிஸ்தானில் பேருந்தில் சென்ற 14 பேர் சுட்டுக் கொலை: தீவிரவாதிகள் கொடூரம்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பேருந்துகளில் சென்று கொண்டிருந்த பயணிகள் 14 பேரை, பாதி வழியில் கீழே இறக்கிவிட்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.


பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பேருந்துகளில் சென்று கொண்டிருந்த பயணிகள் 14 பேரை, பாதி வழியில் கீழே இறக்கிவிட்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
கராச்சியில் இருந்து குவாடருக்கு 6 பேருந்துகள் சென்றன. பலூசிஸ்தானின் ஓர்மரா பகுதியில் பேருந்துகள் வந்தபோது, சுமார் 20 பயங்கரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து தடுத்து நிறுத்தினர்.
அதன்பின்னர் பேருந்தில் இருந்தவர்களை கீழே இறக்கிவிட்டு, அவர்களின் அடையாள அட்டைகளை பயங்கரவாதிகள் சோதித்தனர். இதையடுத்து, பயணிகளில் 16 பேரை மட்டும் குறிவைத்து சரமாரியாக பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 14 பேர் துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்து பலியாகினர். அதில் பாகிஸ்தான் கடற்படை மற்றும் கடலோரப்படையைச் சேர்ந்த 2 பேரும் அடங்குவர். இருப்பினும், பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டபோது, சுதாரித்துக் கொண்ட 2 பயணிகள், அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வி, பிரதமர் இம்ரான் கான், பலூசிஸ்தான் மாகாண முதல்வர் ஜாம் கமால் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 20 பேரும், துணை ராணுவப் படை வீரர்கள் அணியும் உடைகளை அணிந்திருந்தனர். அவர்கள் எந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. அதேபோல், தாக்குதல் சம்பவத்துக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. 
பலூசிஸ்தான் மாகாணம் ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளையொட்டிய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. பாகிஸ்தானின் மிகப்பெரிய மற்றும் ஏழ்மையான மாகாணமாக பலூசிஸ்தான் கருதப்படுகிறது. அந்த மாகாணத்தில் இனம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com