வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

பாரசீக வளைகுடாவில் எண்ணெய் கப்பல்களை தடுப்போம்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

DIN | Published: 06th December 2018 12:49 AM


ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை தடுக்க நினைத்தால், பாரசீக வளைகுடா வழியாக செல்லும் அனைத்து எண்ணெய்க் கப்பல்களையும் தடுப்போம் என்று அமெரிக்காவுக்கு ஈரான் அதிபர் ஹசன் ரெளஹானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மாதம் ஈரான் மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது. ஏற்கெனவே, ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையுடன், 600 ஈரானிய தொழிலதிபர்கள் மற்றும் அந்நாட்டு நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா தடை விதித்தது. மேலும், ஈரானில் இருந்து எண்ணெய் ஏற்றுமதியே கிடையாது என்ற நிலையை உருவாக்கப்போவதாகவும் அமெரிக்கா கூறியது.
இந்நிலையில் ஈரானிய தொலைக்காட்சிக்கு புதன்கிழமை பேட்டியளித்த அந்நாட்டு அதிபர் ரெளஹானி கூறியதாவது:
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியைத் தடுத்து நிறுத்த அமெரிக்காவால் முடியாது. அவ்வாறு அவர்கள் முயற்சித்தால் பாரசீக வளைகுடா வழியாக நடைபெறும் அனைத்து எண்ணெய் ஏற்றுமதியையும் நாங்கள் நிறுத்துவோம். அப்பகுதியில் எந்த எண்ணெய்க் கப்பலையும் அனுமதிக்க மாட்டோம். புலியின் வாலைப் பிடித்து அமெரிக்கா விளையாடக் கூடாது. அது எந்த நேரத்திலும் அவர்களுக்கு ஆபத்தாக முடியும்.
அமெரிக்கா ஏற்கெனவே விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் ஈரானில் எவ்வித பெரிய பாதிப்புகளும் ஏற்படவில்லை. எங்கள் நாட்டில் வேலைவாய்ப்பு குறையவில்லை. அமெரிக்காவின் தடைகளால் ஈரான் வெகுவாக பாதிக்கப்படும் என்பதை ஊடகங்கள் மட்டுமே கூறி வருகின்றன என்பதுதான் நாட்டு மக்களின் கருத்து.
நாட்டில் பணவீக்கம் உள்ளிட்ட சில பிரச்னைகள் உள்ளன. அதனைத் தடுக்க அடுத்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும். அத்தியாவசியப் பொருள்கள்களுக்கு மானியம் அளிக்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
பாரசீக வளைகுடா என்பது ஈரானுக்கும், அரேபியாவுக்கும் இடையே உள்ள கடல் பரப்பாகும். எண்ணெய் வள நாடுகள் அனைத்தும் பாரசீக வளைகுடா வழியாகத்தான் எண்ணெய்க் கப்பல்களை அனுப்பி வருகின்றன. அப்பகுதியில் தடை ஏற்பட்டால் சர்வதேச அளவில் எண்ணெய் ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்படும். அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளால் நெருக்கடி ஏற்படும் காலகட்டத்தில் பாரசீக வளைகுடாவில் எண்ணெய் வர்த்தகத்தை தடுப்போம் என்று ஈரான் இதற்கு முன்பும் பலமுறை கூறியுள்ளது. ஆனால், இதுவரை அத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டதில்லை.
 

More from the section

வங்கதேசத்தில் இரசாயன குடோனில் பயங்கர தீவிபத்து: 69 பேர் பலி
உலகக் கோப்பை: இந்திய-பாக். ஆட்ட டிக்கெட்டுகளை வாங்க 4 லட்சம் பேர் விண்ணப்பம்
மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதை எதிர்க்கவில்லை: சவூதி அரேபியா அறிவிப்பு
தண்டனைக்கு தடை கோரி நவாஸ் மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு
திபெத் புரட்சி தினம்: வெளிநாட்டினர் வருகைக்குத் தடை