சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

தென்னாப்பிரிக்க குற்ற விசாரணை அமைப்பின் முதல் பெண் தலைவராக இந்தியர் நியமனம்

DIN | Published: 06th December 2018 12:49 AM


தென்னாப்பிரிக்க நாட்டின் தேசிய குற்ற விசாரணை அமைப்பின் முதல் பெண் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷமிலா படோஹி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் தேசிய குற்ற விசாரணை அமைப்பின் தலைவராக இருந்த செளன் ஆபிரஹாம்ஸ், தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து அவரைக் காப்பாற்றும் வகையில் விசாரணையை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதை அடுத்து, அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதையடுத்து 11 மாதங்களாக காலியாக இருந்த அந்த அமைப்பின் இயக்குநர் பதவிக்கு படோஹி நியமிக்கப்பட்டுள்ளார்.
படோஹியின் நியமனம் தொடர்பான அறிக்கையை அந்நாட்டின் அதிபர் சிரில் ராமபோஸா வெளியிட்டார். இவ்வளவு காலமாக தலைமையின்றி இயங்கிய விசாரணை அமைப்பில் இருந்த குறைகள் குறித்து விளக்கிய அவர், அதை மாற்றி சிறப்பாக பணியாற்றுமாறு படோஹிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தேசிய குற்ற விசாரணை அமைப்பின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து படோஹி கூறுகையில், அதிபரும், தென்னாப்பிரிக்க மக்களும் என்மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதைக் காப்பாற்றும்படி நடந்து கொள்ள வேண்டியது எனது கடமை. முழு அர்ப்பணிப்புடனும், உத்வேகத்துடனும் இந்த பணியில் செயல்படுவேன் என்று கூறினார்.
மாவட்ட நீதிமன்றத்தில் உதவி வழக்குரைஞராக தனது பணியைத் தொடங்கிய படோஹி, 1995 -ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் நெல்சன் மண்டேலா அமைத்த விசாரணைக் குழுவில் பணியாற்றினார். அதன்பின்னர், சிறப்பு விசாரணைக்குழுவின் பிராந்தியத் தலைவராக பணியாற்றினார். நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களுக்கு சட்ட ஆலோசகராக கடந்த 9 ஆண்டுகளாக படோஹி பணியாற்றி வந்த நிலையில், தற்போது தென்னாப்பிரிக்க நாட்டின் தேசிய குற்ற விசாரணை அமைப்பின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

More from the section

இந்தியா உபரி நதிநீரை நிறுத்துவதால் கவலை இல்லை: பாகிஸ்தான்
பயங்கரவாதத்தை ஒழிக்க இணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் அழைப்பு
சிரியாவில் அமைதிக்காக 200 வீரர்கள்: அமெரிக்கா
நிலவில் ஆய்வு: விண்ணில் செலுத்தப்பட்டது இஸ்ரேலின் தனியார் விண்கலம்
காங்கோ: டேங்கர் லாரி - பேருந்து மோதி விபத்து: 18 பேர் பலி