திருஞான சம்பந்தர் காலத்தில் செங்கற்கோயில்களாக இருந்த பலவும் சோழ மன்னர்கள் காலத்தில் கருவறை, அர்த்த மண்டபம், முக மண்டபம், நந்தி மண்டபம் என்பவற்றோடு விளங்கும் கற்கோயிலாக விரிவடைந்தன. அத்தகைய கோயில்களில் ஒன்று திருப்பாம்புரம் அருள்மிகு வண்டுசேர்குழலி உடனாய அருள்மிகு பாம்புரநாதர் கோயில்.
"தென்காளஹஸ்தி' என அழைக்கப்படும் இந்தக் கோயில் ராகு, கேது தலமாகவும் கருதப்படுகிறது. காளஹஸ்தி, குடந்தை, திருநாகேஸ்வரம், நாகூர், கீழப்பெரும்பள்ளம் ஆகிய 5 தலங்களின் பெருமையும் ஒருங்கே அமையப்பெற்ற திருப்பாம்புரம் சுமார் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என இங்கு கிடைத்த கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
கிழக்கு நோக்கிய கம்பீரமான ராஜகோபுரத்தின் எதிரில் ஆதிசேஷ தீர்த்தம் உள்ளது. கிழக்கு நோக்கிய விநாயகர், திருமலை ஈஸ்வரன் மாடக்கோயில், வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் உள்ளார். சுமார் 250 வயதுடைய தல விருட்சமான வன்னிமரத்தின் அடியில் வன்னீசுவரர் அருள்பாலிக்கிறார்.
சுவாமி சந்நிதிக்கு இடப்புறத்தில் வண்டுசேர் குழலி உள்ளார். சட்டநாதர், கிழக்கு பிரகாரத்தில் பைரவர், சூரியன், திருமால், பிரம்மன், பஞ்சலிங்கங்கள், ஆதிசேஷன், ராகு, கேது, சனீஸ்வரன், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரைத் தரிசிக்கலாம்.
கோயில் கருவறையைச் சுற்றிலும் அகழி உண்டு. ஈசனை நெஞ்சில் நிறுத்தி ராகுவும் கேதுவும் அருள் பெற்றது புராண வரலாறு. எனவே இத்தலத்தின் ஈசன் - அம்மை, ராகு கேதுவை வணங்குவோரின் பாவங்கள் நீங்குகின்றன. நினைத்த காரியம் கை கூடுகிறது. ராகு காலத்தில் ராகு, கேதுவை அபிஷேகம் செய்வோர் தோஷங்கள் விலகி நலம் பெறுகின்றனர்.
பாம்புரத்தில் பூசை பண்ணி பதம் பெற்றோர் பன்னிருவர் என தலபுராணம் கூறுகிறது. ஆதிசேஷன், பிரம்மன், பார்வதி, அகத்தியன், அக்னி, கங்கை, சந்திரன், சூரியன், தட்சன், சுனிதன் எனும் வடநாட்டு மன்னன், கோச்செங்கட்சோழன் ஆகியோர் இறைவனை வணங்கிய பன்னிருவர்.
ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள், 18 ஆண்டு ராகு தசை நடப்பவர்கள், 7 ஆண்டு கேது தசை நடப்பவர்கள், ராகு கேது புத்தி நடப்பவர்கள், களத்திரத் தோஷம் உள்ளவர்கள், புத்திர தோஷம் இருப்பவர்கள், திருமணம் தடைபட்டவர்கள், கனவில் அடிக்கடி பாம்பை காண்பவர்கள், கடன் தொல்லை இருப்பவர்கள் உள்ளிட்டோருக்கு உரிய பரிகாரத் தலமாக இக்கோயில் விளங்குகிறது.
இக்கருவறையில் நாகம் வந்து வணங்குவதாகவும் குறிப்பாக ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இதைக் காண முடியும் எனவும் கூறப்படுகிறது.
உலகைக் காக்கும் ஆதிசேஷன் உடல் நலிவுற்று வருந்தியபோது, ஈசனின் ஆணைப்படி சிவராத்திரி இரவு முதல் காலம் குடந்தையிலும் இரண்டாம் காலம் திருநாகேஸ்வரத்திலும் வழிபட்டு மூன்றாம் காலத்தில் இங்கு வந்து வழிபட்டு விமோசனம் பெற்றதாகவும், அதனால் இந்த ஊரில் பாம்புகள் யாரையும் தீண்டுவதில்லை. அத்தி பூப்பதில்லை. ஆலம் விழுது தரை தொடுவதில்லை என்பது வியப்பூட்டும் செய்திகள்.
இந்தக் கோயில் மூலவரின் திருமேனியில் நல்ல பாம்பு மாலையாகக் கிடந்துள்ளது. 2002}ஆம் ஆண்டு மார்ச் 21}இல் அம்பாள் சந்நிதியில் சுமார் 7.5 அடி நீளமுள்ள பாம்பு தனது சட்டையை அம்பாள் மீது திருமாலையாக அணிவித்திருந்ததை சிவாச்சாரியர் கண்டார். அதன்பின்னர், சுவாமி மீது நல்ல பாம்பு சுற்றியிருந்ததையும் கண்டனர்.
இந்தக் கோயிலில் மகாசிவராத்திரி மற்றும் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அக். 8}ஆம் தேதி இந்தக் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.
கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் சாலையில் கொல்லுமாங்குடிக்கு மேற்கில் கற்கத்தி எனும் ஊரிலிருந்து திருப்பாம்புரம் வரலாம்.
தொடர்புக்கு - 8754756418.