அனைவராலும் சிறப்புமிக்க ஆன்மிகக் காவியமாகப் போற்றப்படுவது "கம்பராமாயணம்'. ஆன்மிகத்தைத் தாண்டி கம்பர், தமிழில் கையாண்ட சொற்களின் அணிவகுப்பு நயம் படிப்போரை வியக்க வைக்கிறது.
"கவிச்சக்ரவர்த்தி', "கல்வியில் பெரியோன் கம்பன்',
"கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடும்'... என்றெல்லாம் புகழப்படுபவர் கம்பர்.
ராமாயணத்தை கம்பர் எழுத மூலகாரணமாக அமைந்தவர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த,சடையப்ப வள்ளல். ராமாயணம் படைக்க அனைத்து உதவிகளையும் செய்து கடையேழு வள்ளல்களுக்கு இணையாக வாழ்ந்து காட்டியவர் இந்த வள்ளல். இவரின் காலம் எட்டு, ஒன்பது, பன்னிரண்டாம் நூற்றாண்டுஎனப் பலவாறு கூறுகின்றனர்.
கம்பர் பிறந்த ஊர் சோழநாட்டின் "திருவழுந்தூர்' என்றாலும், சோழ மன்னர் ஆதரிக்காத நிலையில் நடுநாடு வந்த கம்பரை ஆதரித்து அரவணைத்தவர் சடையப்ப வள்ளல். அதனால்தான், கம்பரும் நன்றிக்கடனாக ராமகாதையின் பத்து பாடல்களில் சடையப்பரின் கொடைத்திறனை நன்றிப்பெருக்குடன் பதிந்துள்ளார்.
கம்பரின் எழுத்தாற்றலுக்கு பேருதவி புரிந்த தெய்வமாகவும், விருப்பமான வழிபாட்டு தெய்வமாக விளங்கியவள் அன்னை காளி. இவள் அளித்த ஞானத்தாலேயே கம்பரும் ராமாயணத்தை இயற்றினார்.
கம்பர் வழிபாடு செய்த காளி கோயில் இன்று திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் வயல்காட்டின் நடுவில் அமைந்துள்ளது. சிலர் மட்டுமே வழிபடும் தெய்வமாகவும், வரங்களை அள்ளித்தரும் வள்ளலாகவும் இன்றும் விளங்குகிறாள் கம்பனின் காளி.
திருவெண்ணெய்நல்லூர் புராணகால சிறப்புடையது. தென்பெண்ணை ஆற்றின் தெற்கே, மலட்டாறு கரையில் அமைந்த தலமாக விளங்குகிறது.
அன்னை பார்வதி வெண்ணெய்க்கோட்டை அமைத்து இறைவனை நோக்கி தவம் இயற்றிய தலமாகவும், சிவ பெருமான் சுந்தரரை ஆட்கொண்டு முதல் பதிகம் பெற்ற தலமாகவும், சைவ சித்தாந்தத்தில் முதன்மையான சிவஞானபோதத்தை இயற்றிய சந்தானக் குரவர்களில் முதல்வராகத் திகழும் மெய்கண்டார் வாழ்ந்து அடைக்கலமான தலமாகவும் இத்தலம் விளங்குகிறது.
பரந்து விரிந்ததாக விளங்கிய இந்தக் கோயிலின் கட்டுமானங்கள் ஏதும் இதுவரை தென்படவில்லை. இந்தப் பகுதியில் காணப்படும் பழைமையான காளி "சிலா' வடிவம் மட்டுமே என்பதும், இதையே காளியாக பெயரிட்டு வழிபடுவதும் வழக்கத்தில் உள்ளது.
திருவெண்ணெய் நல்லூர் கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழாக்களுக்கு முன்னதாக, இந்தக் காளி கோயிலுக்கு தமிழறிஞர்களோடு இங்கு வந்து அன்னை காளியை வழிபடுகின்றனர். "பண்ணை வெண்ணெய் சடையன்" என்ற நூல் கம்பரும், வள்ளலும் இங்கு வாழ்ந்ததை உறுதி செய்கிறது.
இக்கோயில் திருவெண்ணெய்நல்லூர், சின்னசெவலை கிராம எல்லையில் வயல்களின் நடுவில் சரியான பாதைகளின்றி அமைந்துள்ளது. விநாயகர், முருகன் சந்நிதிகள், இரு நாகப்புற்றுகள் அமைந்துள்ளன. இவற்றின் நடுநாயகமாக கம்பனுக்கு அருள்புரிந்த அன்னை காளி வானம் பார்த்த பூமியில் சிறிய மேடைமீது கிழக்கு முகமாய் திருவெண்ணெய்நல்லூர் தலத்தை நோக்கியபடி காட்சி தருகிறாள். காளி, துர்க்கை ஆகிய திருமேனிகள் வடக்கு நோக்கி காட்சி தருவதே வழக்கம்.
அன்னை காளி நான்கரைஅடி உயரம் கொண்டு, நின்றகோலத்தில் எண்கரங்களோடு காட்சி தருகிறாள். இந்தச் சிலா வடிவம் சுமார் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பல்லவர்கால துர்க்கை என்றும் பலகைக் கல்லில் உருவான புடைப்புச் சிற்பம் இது என்றும் தொல்லியல் அறிஞர் மா.சந்திரமூர்த்தி கூறுகிறார்.
விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட திருவெண்ணெய்நல்லூர்} திருக்கோவிலூர் செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் சின்னசெவலை கிராமத்தில் இந்தக் கோயில் உள்ளது.
கல்வி, ஞானம், மகப்பேறு உள்ளிட்ட பாக்கியங்களை அருளும் காளி கோயிலின் திருப்பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
தொடர்புக்கு - 9344232229.