வெள்ளிமணி

குறைகள், நோய்களை நீக்கும் யாகம்

22nd Sep 2023 05:56 PM | இரா.இரகுநாதன்

ADVERTISEMENT

 

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் பக்தர்கள் சிலர் தங்கள் பகுதியில் அங்காளம்மனை  பிரதிஷ்டை செய்து கோயில் கட்ட விரும்பி, மேல்மலையனூரிலேயே  அம்மன் வடிவத்தை பூஜை செய்து உருவாக்கிக் கொண்டு சென்றனர்.  வழியில் பவானி நதிக்கரையில் கோயில் கொள்ள நினைத்த அம்மன் நடுவழியில் மேலே நகராமல் குடிகொண்டாள்.

அப்போது அருள் வந்த பெண்,  ""இந்தப் பகுதி மக்களின் வாழ்க்கை செழிக்கத் திருவுள்ளம் கொண்டுள்ளோம்.  வணிகர்கள் உங்கள் குடும்பத்துடன் இவ்விடம் குடியேறி பூஜை,  புனஸ்காரம் செய்துவருவதுடன் வனப் பகுதிகளைச் சீரமைத்து, விளைச்சல் பெருக்கி சமூகத்துக்கு உதவுங்கள்'' எனக் கூறி சாந்தம் அடைந்தாள்.

அது முதல் சக்தி குடிகொண்டதால் சத்திமங்கலமான சத்தியமங்கலத்தில் அம்மன் சிலைக்கு முறைப்படி வழிபாடு நடத்தி,  கோயில்  அமைக்கப்பட்டது. அப்போதிலிருந்து இந்தக் கோயில் மக்களின் அபிமானம் பெற்றதாக விளங்குகிறது.

ADVERTISEMENT

பக்தர்கள் நலன் வேண்டியும், உலகம் சுபிட்சம் பெற்று வளரவும், ஆண்டுதோறும் புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமை இந்தக் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது. சாகத வழிபாட்டில் சண்டிதேவி மகா சக்தி வாய்ந்த தெய்வம்.  காளி, லட்சுமி,  சரஸ்வதி ஆகிய மூவரும் இணைந்த வடிவமே சண்டிதேவியாகும். சக்தி வழிபாட்டாளர்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் ஆதியிலிருந்து அளிக்கக் கூடிய ஒரு தெய்வம்.

தேவி உலகில் உள்ள தன்னுடைய குழந்தைகளைக் காத்து,  அவர்களுக்குத் தீய சக்திகளால் வரும் தீமையை நீக்கி நன்மை தருபவள். அசுரர்களைஅழிக்க, பல்வேறு வடிவங்களை எடுத்து பக்தர்களைக் காத்தவள் சண்டி.
இவளுக்கு உரித்தான சமஸ்டி மந்திரங்கள் "சப்தசதி மாலா மந்திரம்'என்று அழைக்கப்படுகின்றன. "உலகின் ஒரேவழி நான். என்னைத் தவிர வேறு இல்லை'  என ஒரே தெய்வமாக பராசக்தியை உயர்த்திக் கூறுகிறது தேவிமகாத்மியம்.

மைசூரு மன்னர்கள் ஹைதர்அலி,  திப்பு சுல்தான் ஆகியோர் ஆச்சாரியர்களைக் கொண்டு சண்டி யாகம் நடத்தி பயன் பெற்றனர் என குறிப்பிடப்படுகிறது.

தேவியின் சக்தியை விளக்கும்  சப்தசதியை 10 முறை பாராயணம் செய்தவுடன் சப்த சதியால் ஒருமுறை ஓதி யாகம் செய்வது சண்டி ஹோமம் ஆகும்.  இதனை "தசாம்சபக்ஷஹோமம்' என்றும் "சதசண்டிஹோமம்' என்றும்அழைப்பர். 
சப்தசதியை 100 முறை பாராயணம்செய்து 10 பேர் 10 ஹோமம் செய்வது சதசண்டி ஹோமம் ஆகும்.

சண்டி யாகம் என்பது  சாதாரண யாகம் இல்லை. இதுஅனுபவம் வாய்ந்த 9 வேத விற்பன்னர்களைக் கொண்டு செய்யப்படுகின்ற, மார்கண்டேயரால் சொல்லப்பட்ட 700 மந்திரங்களால் இந்த யாகம் நடைபெறும்.  13 அத்தியாயங்களைக் கொண்ட மந்திரங்களைத் தொடர்ந்து சொல்ல வேண்டும். 13}ஆவதுஅத்தியாயத்தில் வழிபாடு நிறைவு பெறும்.  ஒவ்வொரு அத்தியாயமும் "சண்டிகை' எனப்படும்.

காளி,  லட்சுமி,  சங்கரி,  ஜெயதுர்கை,  சரஸ்வதி,  பத்மாவதி, ராஜமாதங்கி, பவானி, அர்தாம்பிகை, காமேஸ்வரி,  புவனேஸ்வரி, அக்னி துர்கை, சிவதாரிகை ஆகிய  13 சக்திகளும் இணைந்த சக்தி "மகா சண்டிகா பரமேஸ்வரி'யாகும்.

"உலக நன்மை, சத்ரு பயம் நீக்கும், தைரியம் உண்டாகும், லட்சுமி தேவியின்அனுகிரகம் கிட்டும், குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம்,  திருமணம் கைகூடல், மழலைப் பாக்கியம், தொழில் முன்னேற்றம், அனைத்துக் காரியங்களும் வெற்றி அடையும்..'' என்பது ஐதீகம்.
யாகம் நடக்கும்பொழுது மந்திரங்களைக் கேட்டாலே அனைத்துக் குறைகள்,  நோய்கள் நீங்கி நிவர்த்தியாகி விடும் என்றும் சொல்லப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அங்காள பரமேஸ்வரி கோயிலில் இந்த ஆண்டு சண்டி யாகம் செப்.  22 (வெள்ளி) மாலை தொடங்குகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்கிறது.

தொடர்புக்கு: 98422 92044, 99441 00700.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT