நூற்று எட்டு திவ்ய தேசங்களில் 26}ஆவது திவ்ய தேசமான திருக்கண்ணங்குடி அருள்மிகு தாமோதர நாராயணப் பெருமாள், தாயார் அரவிந்த நாயகியுடன் வீற்றிருந்து பிள்ளைப் பேறு அருளும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.
சோழ நாட்டு திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்தத் தலம் பஞ்சகிருஷ்ண ஷேத்திரங்களில் ஒன்று. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. ஊறாக்கிணறு, உறங்காப் புளி, தேரா வழக்கு திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேச சிறப்புப் பழமொழி பெற்ற தலம்.
"தல விருட்சமான மகிழ மரத்தின் நிழலில் அமர்ந்தால் குஷ்ட நோய்கள் அகலும். அவர்கள் உடல் பொன்போல் மின்னும்' என்கிறது புராணம்.
இந்தக் கோயில் கிழக்கு நோக்கி 5 அடுக்குகள் கொண்ட ராஜகோபுரத்துடன் அழகுறக் காட்சி தருகிறது. 9 ஆழ்வார்கள் சந்நிதியுடன் மணவாள மாமுனிகள், திருமங்கையாழ்வார், மதுர கவிகளும் எழுந்தருளியுள்ளனர். இங்குள்ள வகுள விருட்சம் பூத்துக் குலுங்கினாலும் அதன் விதை முளைப்பதில்லையாம்.
பெருமாள் சந்நிதிக்குப் பின்புறத்தில் உள்ள சிரவண புஷ்கரணியின் தென்புறத்தில் வீற்றிருந்த பெருமாள் உபய நாச்சியார்களுடன் காட்சி தருகிறார். இங்கு எழுந்தருளியுள்ள கருடன் இரு கைகளையும் கட்டிக் கொண்டு தரிசனம் தருகிறார்.
இக்கோயில், சிரவணப் புஷ்கரணி குறித்து கருட புராணத்தின் 5}ஆவது அத்தியாயத்தில் 320 செய்யுள்களில் பாடப்பட்டுள்ளது.
வசிஷ்ட மகரிஷிஆராதனை செய்த திருத்தலம். வசிஷ்டர் கிருஷ்ணனை நினைத்து தவம் செய்தார். வெண்ணெய் மயமான கிருஷ்ணனை இளகிப் போகாமல் கட்டி ஆவாஹனம் செய்து தியானம் செய்தார். காமதேனுவின் பாலை அமுது செய்விப்பார். வெண்ணெய்க் கண்ணனை பகவான் கோபால உருவம்கொண்டு அமுது செய்வதை வசிஷ்டர் பார்த்துவிட்டார். கோபாலனைப் பிடிக்க முயன்றும் முடியவில்லை. திருக்கண்ணங்குடியில் மகிழ மரத்தடியில் தவம் செய்து கொண்டிருந்த மகரிஷிகள் கண்ணன் வருவதை பார்த்துவிட்டனர். பக்தியால் கண்ணனைக் கட்டினர். இத்தலத்தில் கோயில் கொண்டு உலகைக் காக்க வேண்டும் என்று கேட்ட வரத்தைத் தந்தான் கண்ணன். திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்கத்தை அடைந்தவுடன் திருப்பணிகளைச் செய்யக் கட்டளையிடப்பட்டது. நாகப்பட்டினத்தில் இருந்து விக்ரகத்துடன் திருக்கண்ணங்குடி வந்தார். புளியடி என்ற நெல் வயலின் சேற்றில் விக்ரகம் மறைத்து வைக்கப்பட்டது. அங்கிருந்த புளியமரத்திடம், " நீ உறங்க வேண்டாம்' என்று சொல்லிவிட்டு தூங்கினார். இதனால் அது உறங்காப்புளியானது.
நிலத்தை உழ உழவன் வந்தபோது புளியமரம் இலைகளை ஆழ்வார் மீது உதிர்த்தது. விழித்தெழுந்த ஆழ்வாருக்கும் - உழவனுக்கும் தகராறு உண்டானது. உழவனிடம் நிலத்துக்கான உரிமைப் பட்டயத்தைக் காட்டச் சொன்னார். உழவன் தனது ஓலைச் சுருளைக் காட்டினான். ஆழ்வாரோ தனது ஓலைச் சுருள் திருவரங்கத்தில் இருப்பதால் எடுத்து வர கால அவகாசம் கேட்கிறார்.
ஆழ்வார் களைப்புற்று அங்கிருந்த கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்டார். தண்ணீர் தர மறுத்ததுடன் கோபத்துடன் பார்த்து, "இனி கிணற்றில் தண்ணீரே ஊற வேண்டாம்' என்று சபித்தார். உடனடியாகக் கிணற்றில் தண்ணீர் வற்றி அது ஊறாக் கிணறானது. இக்கிணற்றருகே இருந்த மகிழ மரத்தடியில் சிறிது கண் ணயர்ந்தார். பெருமாளே வந்து ஆழ்வார்க்கு தீர்த்தம் , பிரசாதம் கொடுத்தாராம். இதனால் மகிழ்ந்த ஆழ்வார் மகிழ மரத்தை என்றும் காயாமல் இருக்கும்படி மங்களாசாசனம் செய்ததால் இதற்கு "காயா மகிழ்' என்று பெயர்.
வைணவ, சைவ நல்லிணக்கத்துக்கு இக்கோயில் மிகச் சிறந்த உதாரணமாய் விளங்குகிறது. பிரம்மோற்சவத்தின் போது மூன்றே முக்கால் நாழிகை பெருமாள் விபூதியுடன் காட்சியளிக்கிறார்.
கிருஷ்ண ஷேத்திரங்களில் ஒன்றாக இருப்பதால் குழந்தைப் பேறு வேண்டுவோரும், வழக்குகளில் வெற்றி பெறவும் திருக்கண்ணங்குடி தலத்தில் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் தாங்கள் வேண்டிக் கொண்டதை இங்கு வந்து நிறைவேற்றியும் செல்கின்றனர்.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் நாகப்பட்டினம்} திருவாரூர் சாலையில் ஆழியூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
தொடர்புக்கு- 99431 38591.