வெள்ளிமணி

தோஷங்களை நீக்கும் பெருமாள் 

8th Sep 2023 04:41 PM | ஆர்.வேல்முருகன்

ADVERTISEMENT

 

நின்ற திருக்கோலம், இருந்த திருக்கோலம், கிடந்த திருக்கோலம் ஆகிய மூன்றும் மகாவிஷ்ணுவின் திருக்கோலங்கள். அவரது கிடத்தல் திருக்கோலம் அனைவரையும் கவரும் ஆற்றல் படைத்தது. இந்தக் கோலத்துடன் வீற்றிருக்கும் அனந்த நாராயணப் பெருமாளைத் தரிசித்தால், அனைத்துத் தோஷங்களும் நீங்கப் பெறும் என்பது ஐதீகம்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆபரண தாரி எனும் ஊரில் சர்வ ஆபரணங்களையும் அணிந்து இருக்கும் அனந்த நாராயணப் பெருமாள் கோயில் என்பதால், இந்த ஊருக்கு ஆபரண தாரி என்கிற பெயர் வந்து, பின்னர் ஆவராணி என்று மருவியுள்ளது. சுமார் 17 ஆயிரத்து 10 சதுர அடியில் அமைந்துள்ள இக்கோயிலில் அலங்காரவல்லித் தாயார் தனி சந்நிதியில் அருள் பாலிக்கிறார். தலைவாயிலைக் கடந்து கோயிலுக்குள் சென்றால் மகாமண்டபத்துக்குச் செல்லும் முன்புறம் கருடனைக் காண முடியும்.  அர்த்த மண்டபத்தின் வலது புறம் ஆஞ்சனேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

மகாமண்டபத்தையும், அர்த்த மண்டபத்தையும் தாண்டி உள்ள கர்ப்பக் கிரகத்தில் மூலவரான ஸ்ரீ அனந்த நாராயண பெருமாள் துயில்கொள்ளும் மூர்த்தியாக அருளுகிறார். திருமால் 21 அடி நீளத்தில் ஏழு தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது சயனம் கொண்டுள்ளார். ஏழு தலை ஆதிசேஷனின் பாயலில் மீது பெருமாள் ஒரு கை தலையைத் தாங்க மற்றொரு கை முழங்கால் வரை நீண்டு கன்னங்கரிய தைலக் காப்புக்குள் இருக்கிறார் பெருமாள்.   இந்தக் காட்சியை வேறு எந்தக் கோயிலிலும் காண முடியாது. 

ADVERTISEMENT

இந்த பெருமாள் அனைத்து ஆபரணங்களையும் அணிந்து கொண்டு இருக்கிறார். சிரத்தின் மேல் மணிமகுடம், காதுகளில் குண்டலம், புஜங்களில் கடகம், மார்பில் நலம் கிளர் ஆரம், உத்தரியம் தண்டை அணிந்து சாந்த ஸ்வரூபியாக காட்சி தருகிறார் சயனக் கோலத்தில் இருக்கும் பெருமாள்.  அவருடைய நாபிக் கமலத்திலிருந்து பிரம்மா எழுந்தருளியுள்ளார். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் விளங்கும் பெருமாளை பிருகு முனிவர், மாட்டரர் என்ற வேத வியாசர் ஆகியோர் பெருமாளின் தலைப்பகுதியிலும் கால் பகுதியிலும் அமர்ந்து சேவிக்கிறார்கள்.

இங்குள்ள அனந்த புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி அச்யுதா, அனந்தா, கோவிந்தா என மும்முறை ஜெபித்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். இத்திருக்கோயிலில் 11 கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் 9 சோழர் காலத்தைச் சேர்ந்தவை. பாண்டியர் காலக் கல்வெட்டு 1, விஜயநகர மன்னர் கல்வெட்டு 1.  கி.பி. 1150}ஆம் ஆண்டுக் கல்வெட்டு மிகவும் பழையது.

இரண்டாம் ராஜராஜ சோழனின் கல்வெட்டு இந்த ஊரை "திரு ஆபரணதாரி சதுர்வேதி மங்கலம்'  என்று அழைக்கிறது. 300 ஆண்டுகளுக்குப் பின்னர், விஜயநகர மன்னர் திப்பய்ய தேவ மகாராயரின் கல்வெட்டு இவ்வூரை "ஆபரணதாரி ஆன உத்தானந்தபுரம்'  என்று கூறுகிறது. இவ்வூர் பெருமாள் கோயிலை "ஆபரணதாரி ஆன உத்தரானந்தபுரம் பெருமாள்- பள்ளிக் கொண்ட பெருமாள்' என்று குறிப்பிடுகிறது. இந்த ஊர் சிக்கல் என்ற ஊரின் தெற்கே அமைந்திருப்பதை மற்றொரு கல்வெட்டு தெரிவிக்கிறது.

ஆழ்வார்களின் பாசுரங்கள், கல்வெட்டு, பத்திரப்பதிவுச் சான்றுகள் அடிப்படையிலும் பெரிய திருமொழி ஒன்பது பத்து முதல் திருமொழி முதல் பாசுரம்  இத்திருத்தலத்தில் உள்ள அனந்தநாராயணப்  பெருமாளையும் இப்பகுதி சதுர்வேதிகள் வாழ்ந்த ஸ்தலமாக இருந்ததையும் குறிப்பிடுவதால் திருமங்கை மன்னனால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற முதல் பாட்டு ஆபரணதாரி அனந்தநாராயணனுக்காகத்தான் என்பதை மறுக்க முடியாது.

திருமணத் தடை இருப்பவர்களும், வேலைவாய்ப்புக்கு முயற்சிப்பவர்களும், குழந்தைப் பேறு வேண்டுபவர்களும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க முயற்சிப்போரும் பெருமாளை வேண்டிக் கொண்டு இத்தலத்துக்கு செல்கின்றனர்.  அனைத்து வகையான தோஷங்களையும் நீக்குபவராகவும் இப்பெருமாள் விளங்குகிறார்.

நாகப்பட்டினம் - திருவாரூர் சாலையில் சிக்கல் நிறுத்தத்தில் இருந்து சுமார் 4 கி.மீ.தொலைவில் ஆவராணி உள்ளது. இந்தக் கோயில் கும்பாபிஷேகம் செப்.10-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தொடர்புக்கு - 94434 22011. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT