வெள்ளிமணி

நரசிம்மசமுத்திரம்: சனப்பிரட்டி சிங்கம்!

26th May 2023 06:09 PM

ADVERTISEMENT


சமுத்திரம் என முடியும் ஊர்ப் பெயர்கள் பெரிய நீர்நிலையோடு பக்தர்கள் வசிப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும்.  அந்த நீர்நிலை இறைசக்தியால் உருவானதாகக் கூறப்படும்.  அந்த வரிசையில் அமைந்துள்ளது கரூர் மாவட்டத்தில் உள்ள நரசிம்மசமுத்திரம் என்ற திருத்தலம்.  தற்போது 'சனப்பிரட்டி'  என்று அழைக்கப்படுகிறது. 

வரலாறு: அக்காலத்தில் ஆந்திரத்தில்  உள்ள கிருஷ்ணா நதிக்கரையில் சாம வேத பண்டிதர்கள் வசித்துவந்தனர். இருபுறமும் எதிரெதிரே அமர்ந்து சாம வேதத்தை நிறுத்தாமல் தொடர்ச்சியாக மாறி மாறி பாராயணம் செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.  அதனால் அவர்கள் "ஜடாவல்லபர்'  என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் சிவ வழிபாட்டுடன் ஸ்ரீந்ருஸிம்மனையும் ஆராதிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். 

இந்த நிலையில் வடக்கில் வெற்றி கொண்டு திரும்பிய கங்கை கொண்ட சோழன் தமிழ்நாட்டில் கெடிலம்  நதிக்கரையில் அமைந்துள்ள விருதாசலேஸ்வரர் கோயிலை நிர்ணயித்த நேரத்தில் மேற்படி ஜடாவல்லபர் எனப்படும் அந்தணர்களை விருத்தாசலத்தில் குடியேற்றினார்.

பிற்காலத்தில் இங்கு கடும் பஞ்சம் நிலவியதால் அந்தணர்கள் அமராவதி நதிக்கரையில் கரூர் அருகே ஓர் கிராமத்தில் அக்ரஹாரம் அமைத்து சாமகான முழக்கத்துடன் 32 நித்ய  அக்னி ஹோத்திரங்களை (தீட்சிதர்கள்)  வைத்து யாகம் நடத்தி,  சிவனால்  ஸ்ரீந்ருஸிம்மனைக் குறித்து செய்த  ஸ்ரீலட்சுமி "மந்திரராஜபதம்' என்னும் ஸ்ரீலட்சுமி நரசிம்ம மந்திர ஸ்தோத்திரத்தை 7 கோடி ஜெபம் செய்து,  நரசிம்ம சமுத்திரம் என்று கிராமத்துக்குப் பெயர் சூட்டி குடியேறினர். 

ADVERTISEMENT

ராணிமங்கம்மாள் காலத்தில் மிக முக்கியமானதாகத் திகழ்ந்த இந்தக் கிராமத்தில் சென்னப்ப ரெட்டி என்ற அதிகாரியால் நிர்வகிக்கப்பட்டு வந்து,  காலப்போக்கில் அந்த அதிகாரி செய்த நற்காரியங்களால் மக்களால் அவரது நினைவை கூறும் வகையில் "சனப்பிரட்டி' என்று மாறி அழைக்கப்பட்டுவருகிறது. 

இவ்வூரின் கண் அமைந்துள்ள கோயில்கள்:  கிராமம் தோன்றியது முதல் அன்னை செல்லாண்டி அம்மன் கோயிலும்,  கருப்புசாமி கோயிலும் உள்ளது.  பின்பு சென்னப்ப ரெட்டி காலத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டது.  பின்பு குடிபெயர்ந்த அந்தணர்களால் ஏற்படுத்தப்பட்ட கன்னி மூல கணபதி கோயிலிலும்,  விருதாசலேஸ்வரர் சிவன் கோயிலிலும் இருந்துவந்தன. 

இத்துடன் ஸ்ரீலட்சுமி  தேவியுடன்  கூடிய  யோக நரசிம்ம மூர்த்தி வழிபாடும்  இருந்து வந்திருக்கிறது.  கோயில்கள் வழிபாட்டுடன் சாமவேத பண்டிதர்களை உருவாக்கி எந்த நேரமும்  வேதபாராயணம்  ஒலித்துக் கொண்டிருக்கும்படி  செய்தனர். 

ஆனால்  காலப்போக்கில் அந்நியர்கள் படையெடுப்பால்  ஸ்ரீயோக நரசிம்மர் மூல விக்கிரகத் திருமேனி பூமிக்குள் மறைத்துவைக்கப்பட்டு,  நதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மறைந்து விட்டதாக தெய்வ பிரசன்ன தகவல்கள், ஓலைச்சுவடி விவரங்கள் மூலம் அறியப்பட்டன. 

யோக நரசிம்மர் கோயில்:  "நரசிம்ம சமுத்திரம்'  என்ற பழைய பெயருடன் இன்றும் புகழ்ந்து பேசப்படும் இந்தக் கிராமத்தில் மீண்டும் நரசிம்மர் கோயிலை உருவாக்கும் எண்ணத்தில் நரசிம்ம சமுத்திரம் நற்பணி மன்றம் என்ற அமைப்பு கிராமத்து பெரியோர்களால் ஏற்படுத்தப்பட்டு அதற்கான திருப்பணிகளில் இறங்கியுள்ளது.

இந்த முயற்சிக்கு இந்தக் கிராமத்துக்கு  2017-ஆம் ஆண்டு விஜயம் செய்த சிருங்கேரி ஆச்சார்யர்கள் ஸ்ரீபாரதி தீர்த்த மஹா சந்நிதானம்,  ஸ்ரீவிதுசேகரபாரதி சந்நிதானம் ஆகியோர்  இங்குள்ள நரசிம்மசதனம் என்ற சத் சங்கக் கட்டடத்துக்கு எழுந்தருளி இவ்வாலயம் வருவதற்கு அனுக்கிரகம் செய்துள்ளனர்.  அவர்களுக்கு முன் ஏற்கெனவே பட்டத்தில் இருந்த 4 ஆச்சார்யர்கள் பாத துளிகள் பட்ட புண்ணிய பூமி,  சனப் பிரட்டி.

ஸ்ரீயோகப் பட்டையுடன் அமர்ந்த கோலத்தில் ஸ்ரீலட்சுமி பிராட்டியை தன்னுடன் அமர்த்திக் கொண்டு சுமார் 4 3/4 அடி உயரத்தில் கூர்ம பீடத்தின் மேல் திருவடி கீழ் கருட பகவானும்  (பெரியதிருவடி)  சேர்ந்து இருக்க, ஆதிசேஷன் குடையாய் இருக்க,  காட்சி நல்கும் அதிஅற்புத தரிசனம்  (லட்சுமி தேவியுடன் யோக நரசிம்மர் விக்ரகத்தை கர்நாடகத்தின் ஹம்பியில் சேவிக்கலாம்) ஒரு வைதீக பிரதிஷ்டையாகும்.  ஆஞ்சனேயர், பிரகலாதனுக்கும் சந்நிதிகள் உண்டு.

இந்தத் தலம்  கரூரிலிருந்து 5 கி. மீ. தூரத்தில் பழைய திருச்சி நெடுஞ்சாலையில் பசுபதிபாளையத்துக்கு அடுத்துள்ளது. அருள்மிகு யோக லட்சுமி நரசிம்மர் கோயில் கும்பாபிஷேகம் மே 31-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு மேல் 7. 25 மணிக்குள் நடைபெறுகிறது. 

தொடர்புக்கு:  98949 32184, 94440 27334.
-எஸ்.வெங்கட்ராமன்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT