வெள்ளிமணி

வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோழம்பம்: இடர் களையும் ஈசன்

தினமணி


வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோழம்பம் செளந்தர்ய நாயகி அம்பாள் சமேத  ஸ்ரீகோகிலேஸ்வரர் சுவாமி  கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 1-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இத்தலம் தேவாரப் பதிகம் பெற்ற சோழ நாட்டு காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில்  35-ஆவது தலமாக அணிவகுக்கிறது.  இத்தலத்துக்கு அப்பர், சம்பந்தர் ஆகிய இருவரின் பதிகங்கள் உண்டு.  

கும்பகோணம்- காரைக்கால் சாலையில் திருநீலக்குடியை அடுத்த எஸ். புதூருக்கு வடக்கில் 1கி.மீ. தூரத்தில் இந்தக் கோயில் உள்ளது.  மயிலாடுதுறையிலிருந்து குத்தாலம் வழியாகவும் வரலாம். 

தல வரலாறு
சிவனின் அடிமுடியைக் காண திருமாலுடன் ஏற்பட்ட போட்டியில் பொய்யுரைத்ததால் தனக்கு ஏற்பட்ட பாவ,  தோஷ நிவர்த்திக்காக பிரம்மன் பல்வேறு சிவ தலங்களில் சென்று வழிபட்டார்.  அவர் இத்தலத்திலும் தீர்த்தம் உண்டாக்கி, வழிபட்டதாக வரலாறும் உண்டு.

திருமாலுடன் சொக்கட்டான் விளையாடிய தருணத்தில் சிவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தில்,  பார்வதி தனது சகோதரனுக்காகப் பரிந்து பேசியதால் சாபத்துக்கு ஆளாகி பூமியில் பசுவாகப் பிறந்தார்.  சாப நிவர்த்திக்காக, திருவாவடுதுறை அருகே மேய்ந்த அந்தப் பசு அருகிலுள்ள திருக்கோழம்பியத்தில் சிவனை வழிபட்டது.  அங்கு அதன் குளம்பு லிங்கத்தின் மீது தவறுதலாக இடறியது.  அதன் அடையாளம் இன்றும் ஆவுடையார்மேல் பதிந்துள்ளதைக் காணலாம்.  தமிழில் "குளம்பு'  என்றால் "கொழுமம்'  என்று பொருள். அதன்பொருட்டு இத்தலத்துக்கு "கோழம்பம்'  என்றும், இறைவனுக்கு "கோழம்பநாதர்'  என்றும் பெயர் ஆயிற்று. 

கெளதம முனிவரின் சாபம் பெற்ற இந்திரன் அதனை போக்கிக் கொள்ள வழிபட்ட தலங்களுள் இதுவும் ஒன்று.

ஒருமுறை சாந்தன் என்ற வித்யாதரன் இந்திரனால் சபிக்கப்பட்டு  குயிலாக  (கோகிலம்)  மாறினான்.  சாப விமோசனம் வேண்டி இத்தலத்து ஈசனை வழிபட்டு சுய உருவை பெற்றான்.  அதனால், இத்தல இறைவனுக்கு "கோகிலேஸ்வரர்' என்ற பெயரும் ஏற்பட்டது.  இத்தலத்தின் பழங்காலப் பெயர்களில் ஒன்று  "கோகிலாபுரம்'. 

இறைமூர்த்தங்கள் சிறப்பு
மூலவர் பசுவின் காற்குளம்பு இடறியபோது வெளிப்பட்ட சுயம்பு மூர்த்தி நீண்டபாணம். அம்பிகையின் திருநாமம் செüந்தர்ய நாயகி. மிகுந்த லாவண்யத்துடன்,  சுமார் 5 1/2  அடி உயரத்தில் பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில், அபய வரத ஹஸ்தங்களுடன், அட்சர மாலை, கமண்டலத்தைத் தாங்கி தோற்றமளிக்கும் அதிஅற்புத தரிசனம் நல்குகிறாள். 

கோயில் அமைப்பு
கோயில் நுழைவில் துவஜஸ்தம்பம்,  பலிபீடத்தை அடுத்து மகாமண்டபத்தில் சந்திரன்,  சூரியனையும், கோஷ்ட தெய்வங்களாக விநாயகர்,  நடராஜர், அகஸ்தியர்,  சட்டைநாதர்,  தட்சிணாமூர்த்தி,  லிங்கோத்பவர்,  பிரம்மன்,  அர்த்தநாரீஸ்வரர்,  துர்க்கை போன்றவர்களையும்,  பிரகாரம் வலம் வருகையில் கன்னி மூல கணபதி, வள்ளி தேவசேனாவுடன் சுப்பிரமணியர்  (கோகிலசுப்பிரமணியர்) சோழலிங்கம்,  மகாலட்சுமி தாயார்,  சண்டிகேஸ்வரர் ஆகியோர் சந்நிதியைக் கொண்டு அருள்வதையும் தரிசிக்கலாம். 

முன்புவன மாதவி எனப்படும் காட்டுமுல்லை தல விருட்சமாக இருந்திருக்கிறது. (அந்திவேளையில் மட்டும் தான் பூக்கும். பூக்கும்போது மட்டும் வாசனை இருக்கும்). 
சுமார் 1,100 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான இந்தக் கோயிலில் 1925-ஆம் ஆண்டு தொல்லியல் துறையினரால் 17 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.  அதன்படி பராந்தக சோழ மன்னர் உள்ளிட்ட சோழமன்னர்கள்,  செம்பியன்மாதேவி, பாண்டிய, விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் போன்றோர் திருப்பணிகளைச் செய்துள்ளனர் எனத் தெரிகிறது.

பரிகாரச் சிறப்பு
இத்தலத்தில் கொடிமரத்தின் அருகில் நின்று ஈசனை நோக்கி வேண்டிக் கொண்டால் நினைத்தது நடைபெறுவதாகப் பலன் பெற்றோர் கூறும் வாக்கு.

27 நாள்களுக்கு ஒருமுறை நடைபெறும் "வ்யதிபாதயோக'  பூஜை ஹோமங்களில் பங்கேற்கவும்,  திருமணத் தடைகள் நீங்கவும்,  புத்திரப் பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் கோயிலுக்கு வருவது கண்கூடு. 

தொடர்புக்கு- 93810 29050. 98949 81939 
-எஸ்.வெங்கட்ராமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT