வெள்ளிமணி

சங்கம வடிவமாகத் திகழும் ஸ்ரீசட்டைநாதர்

பொ. ஜெயசந்திரன்

தருமையாதீன அருளாட்சியில் 27 கோயில்கள் உள்ளன.  அதில்,  சீர்காழி ஸ்ரீசட்டைநாத சுவாமி தேவஸ்தானம் பெரும் சிறப்புடையது என திருஞானசம்பந்தர் போற்றுகிறார்.

முற்காலத்தில் ராஜாதி ராஜ வளநாட்டு திருக்கழுமல வளநாட்டின் வளநகரமாகவும்,  திருவாலி நாட்டு திருக்கழுமல வளநாட்டின் தலைநகரமாகவும், சிறப்புற்று விளங்கிய நகரம் சீர்காழி. 72 தேவாரப் பதிகங்கள் பெற்ற ஒரே திருத்தலமும் இதுவாகும். வடமொழியில் 4 புராணங்களும், தென் மொழியில் ஒரு புராணமும்,  ராமாயணத்தில் ஒரு சருக்கமும் இருக்கின்றன.  பேரரசர்கள், சிற்றரசர்களின் சரித்திரங்களிலும் இடம் பெற்றுள்ளது.      
                        
இத்தலத்தை பிரம்மபுரம், வேணுபுரம், புகழி, பெருவெங்குரு, நீர்ப்பொருவில், திருத்தோணிபுரம். பூந்தராய், சிரபுரம், முன் வருபுறவம், சண்பை நகர், வளர்காழி கொச்சைவயம் பரவுதிருக்கமுமலமாம் என 12  திருப்பெயர்களால் சேக்கிழார் அருளியுள்ளார். பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி உள்ளிட்டோரும் வரிசை முறையில் அருளியுள்ளனர். 

குழந்தைப்  பேறு வேண்டி,  தவமிருந்த பராசர முனிவர் மச்சகந்தியைக் காந்தர்வ மணம் புணர்ந்தபடியால் தீபாயனன் என்னும் ஒரு புதல்வன் தோன்றினார். பராசர இங்கே வழிபட துர்கந்தம் நீங்கியது. பின்னாளில் தனது புதல்வனை இங்கே இருத்தி பிரம்மபுரீஸ்வரரை வழிபடும்படி பணித்தார். இதன் பயனாகச் சிவனின் அருளைப் பெற்றுச் சிவபரத்துவமாக நான்கு வேதங்களையும் வகுத்தார். ரிக் வேதத்தை எழுகூறாகவும்,  யசூர் வேதத்தை இரு பக்கமாகப் பிரித்து நூறு கூறாகவும் சாமவேதத்தை ஆயிரம் சாகையாகவும்,  அதர்வண வேதத்தை ஒன்பது விதமாகவும் வகுத்தோதினார். 

அது முதல் தீபாயனர் "வேத வியாசர்'  என்று அழைக்கப்படலானார்.  காழியில் வழிபட்டு,  18 புராணங்களையும், இதிகாசங்களையும் எழுதினார் என்பது தலபுராணத்தால் அறிய வருகிறது.

தோணிபுறச் சிகரத்தின் விமானத் தென்புறக் கோட்டத்தில் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீசட்டைநாதர் சங்கம வடிவமாகத் திகழ்கிறார். கருவறையில் காணப்படுவது தாபரலிங்கம், எழுந்தருளும் மூர்த்தங்கள்சலலிங்கம் ஆகும். அடியார்கள் உள்ளத்தில் சிவன் வீற்றிருப்பதால் அவர்களைச் சங்கம மூர்த்தமாகக் குறிக்கின்றோம். உள்ளிருந்து இயக்குவதால் சிவனுக்கும் சங்கம வடிவம் உண்டு. 

நரசிங்கமாகிய தனது கணவர் மயக்கத்துடன் இருப்பதால், அவ்வுருவை நீக்கி பழைய உரு பெற வேண்டி திருமகள் வழிபட திருமாலின் நரசிங்க வடிவத் தோலை உரித்து தம் மேலே போர்த்தியுள்ளார். இவ்வடிவம் "சட்டைநாதர்' என அழைக்கப்படுகின்றது. 

6}ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சீர்காழியில் கவுணியர் கோத்திரத்தில் மரபிரண்டும் சைவ நெறி வழிவந்த கேண்மையராகிய சிவபாத இருதயர்க்கும், பகவதி அம்மைக்கும் சிவம் பெருக்கும் பிள்ளையாக ஞானசம்பந்தர் திருஅவதாரம் செய்தார்.  நிலவுலகில் 16 வயது வரை வாழ்ந்தார் என்பதை நயமாக 16 காரணங்களும் இவ்வுலகுறும் பயன்களும் அமையும்படி தெய்வச் சேக்கிழார் பட்டியல் இட்டுக் காட்டுகின்றார். சச்சிதானந்த சோமாஸ்கந்த வடிவமாக அமையப் பெற்றுள்ளது.   

கோயிலில் 46 கல்வெட்டுகள் அறியப்பட்டுள்ளன. இங்குள்ள ஆளுடைய பிள்ளையார் கோயிலில் முதன்முதலில் ஆளுடைய பிள்ளையார் திருவுருவத்தை தலத்துக்கு எழுந்தருளச் செய்வதாக மூன்றாவது குலோத்துங்கன் அரண்மனை அடுக்களைப் பெண்களில் மூத்தவளான இராஜவிச்சாதரி என்பவள்.

 இரண்டாம் ராஜராஜன் கல்வெட்டு கங்கை கொண்ட சோழ புரத்தான் ஒருவன் ஆளுடைய பிள்ளையார் கோயில் முதற் பிரகாரம் திருமதில் எடுக்கப் பொன் கொடுத்துள்ளார். திருநட்டப்பெருமான் என ஆளுடைய பிள்ளையாரைக் குறித்து வருவதால், ஞானசம்பந்தர் திருவுரு ஒரு காலைத் தூக்கி, ஒரு காலை ஊன்றி வலது கைச் சுட்டு விரலை நீட்டிக் கூத்தாடுகின்ற குழந்தையாக அவர் திருவுரு அமைந்துள்ளது. மூன்றாம் ராஜராஜன் ஆட்சிக் காலத்தில் திருக்கோயிலுக்கு ஆளுடைய நாயனார் பருகப் பொன் வட்டில் அளிக்கப்பட்டது. நான்காம் ஆண்டில் திருஞானசம்பந்த சுவாமிகள் கோயிலில் நெடுநாளாகவே தேவாரத் திருமுறைகள் எழுதி வைக்கப்பட்டிருந்தன.

சுக்கிர வாரத்தில் அர்த்தயாமத்துக்குப் பிறகு பலி பீடத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மலைமேல் உள்ள ஸ்ரீசட்டைநாதருக்குப் புனுகுச்சட்டம் சாத்தி வடை, பாயாசம் நிவேதித்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இவருடைய உத்ஸவ மூர்த்தியாக ஸ்ரீமுத்துச் சட்டைநாதர் அருள்பாலிக்கின்றார். கோயில் கும்பாபிஷேகம் மே 24}ஆம் தேதி காலை 9.30 மணிக்கு 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊருணியில் மூழ்கி மாணவா் பலி

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

கொட்டாரம் அருகே தொழிலாளி தற்கொலை

விளாத்திகுளத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறைப்பு -பயணிகள் தவிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT