வெள்ளிமணி

காலனை வென்ற காமாட்சி விரதம்!

இரா.இராதாகிருட்டிணன்

இந்து சமயம் வெறும் வழிபாட்டு முறைகளை மட்டும் சொல்லும் சமயமல்ல. இது வாழ்வியல் முறையைத் தரும் சமயமாகும்.  எனவேதான் இறைவனை வழிபடும்போது இறைவன்,  இறைவி எனத் தம்பதியாக வழிபடும் பேற்றைத் தந்திருக்கின்றார்கள். 

"பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!' என்பார் திருஞான சம்பந்தர்.  ஆண்டுதோறும் கோயில்களில் நடைபெறும் பிரம்மோத்ஸவத்தின்போது திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. 

ஒளவ்வையார் கூறியபடி,  காதல் இருவர் கருத்தொருமித்து வாழ்வதே இல்வாழ்க்கை.  இத்தகைய வாழ்வியல் முறையைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்றோம். அதன் அங்கமாகத்தான் இல்லறத்தில் கணவன்} மனைவி கருத்தொற்றுமையுடன் வாழ்ந்திட,  கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்திட,   வயது தளர்ந்த 
பருவத்திலும் தங்களின் அன்பைக் கொண்டாடி மகிழ பல்வேறு விரத முறைகளை இந்து சமயம் வழிகாட்டுகின்றது.
இதில், தலைசிறந்த விரதமாக மாசியும்,  பங்குனியும் இணையும் நன்னாளில் 
நன்னேரத்தில் வழிபாடு செய்யும் நோன்பு சிறப்பானது.  கார்காலத்தில் விளைந்து அறுவடை செய்யும் நெல்லிலிருந்து அரிசி மாவு செய்து அதனுடன் வெல்லம், 
காராமணி பயறு சேர்த்து அடை செய்து நிவேதனப் பொருளாகப் படைப்பதால் இதற்கு "காரடையான் நோன்பு' என பெயர் வந்தது.  "உருகாத வெண்ணெயைச் சேர்த்து படைத்து உருகாத வெண்ணெயும் ஓரடையும் நான் தருவேன். ஒருக்காலும் கணவர் பிரியாது இருக்க வேண்டும்' என வழிபாடு செய்வார்கள்.
காமாட்சி அம்மனை வைத்து காமாட்சி விளக்கேற்றி வழிபாடு செய்வதால் காமாட்சி விரதம், சாவித்திரி விரதம், கெளரி விரதம் என  தென் மாநிலங்களிலும், ஜித்ய விரதம்,  கங்கார் விரதம், சர்வ மங்கள விரதம் என வட 
மாநிலங்களிலும் வழிபாடு செய்யப்படுகிறது.

தயாள குணம் மிக்க மந்திரத் தேசத்து அரசன் அஸ்வபதி,  மகாராணி மாலாதேவிக்கு நீண்ட நாள்களாக மகப்பேறு இல்லை.  வசிஷ்ட முனிவர் வழிகாட்டுதலின்படி வேதமாதா சாவித்திரி தேவியை விரதம் இருந்து வழிபாடு செய்ததால்  அழகான பெண் குழந்தை பிறந்தது.  அந்தக் குழந்தைக்கும் "சாவித்திரி' என்ற பெயர் சூட்டி நல்ல குணவதியாக அதே சமயம் வீரம் பொருந்தியவளாக வளர்க்கப்படுகிறாள்.

கானகம் செல்லும் சமயம் சாளுவத் தேசத்து இளவரசன் சத்தியவானைச் சந்திக்க காதல் கொள்கிறாள். பகைவர் சூழ்ச்சியால் நாடிழந்த கண் பார்வையற்ற பெற்றோரைப் பராமரிக்கும் அவன் குணநலன் இவளை பெரிதும் கவர்கிறது.  பெற்றோரிடம் சொல்லி சத்தியவானையே மணக்க அனுமதி வேண்டுகிறாள். 

இதற்கிடையில் நாரதர் காட்சி தர அவர் சத்தியவானின் ஆயுள் விரைவில் முடியப் போகிறது எனத் தெரிவிக்கவும்,  அம்பிகை அருளால் வாழ்ந்தால் அவருடன்தான் வாழ்வேன் எனத் தீர்மானித்து சத்தியவானையே மணக்
கிறாள். அரண்மனையைவிட்டு கானகம் வந்து கணவருடன் அன்பாக வாழ்க்கை வாழ்கிறாள். 

பார்வையற்ற மாமனார் - மாமியாருக்கும் பணிவிடை புரிகிறாள்.  காலம் சுழன்றது.  காலன் வந்தான்.  சத்தியவானின் உயிரை எடுத்தான்.  இவள் செய்த பூஜையின் பலனாக எமனையே பின்தொடர்கின்றாள்.  எமனோ, ""உலகில் பிறந்த யாருக்கும் இறுதி உண்டு. எனவே, உன் வேலையைப் பார்த்துச் செல்வாயாக'' என்கிறார். இருப்பினும் அம்பிகையைப் பிரார்த்தித்தபடி தொடர்கின்றாள். 

"உன் கணவன் உயிர் தவிர வேறு ஏதும் வரங்கள் கேள்!  தருகிறேன்'' என்கிறார். உடனே சாவித்திரி, ""எனது மாமனார், மாமியாருக்குப் பார்வையும், இழந்த தேசமும், என் பிறந்த வீட்டில் ஆண் வாரிசும், எனக்கு குழந்தைப் பேறும் வேண்டும்'' என வேண்டுகிறாள். 

"தன்னை விட்டால் போதும்' என்ற நிலையில் எல்லாவற்றையும் தந்தேன் என்கிறார்.  "எனக்கு மகப்பேறு என் கணவன் இல்லாமல் எப்படி? எனவே என் கணவன் உயிரைத் திரும்பத் தாருங்கள்!' என வேண்ட அம்பிகை 
அருளையும்,  சாவித்திரியின் பதிபக்தி,  உறுதிப்பாடு ஆகியவற்றைப் போற்றி சத்தியவான் உயிரை மீண்டும் தந்தார் என்பது வரலாறு.

பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு 
இந்தச் சம்பவம் உதாரணம். இந்த நாளில் சுமங்கலிப் பெண்கள் கணவனின் நீண்ட ஆயுளுக்காகவும்,  கன்னிப் பெண்கள் நல்ல கணவருக்காகவும் வரம் வேண்டி வழிபாடு செய்வது மரபாகும்.

இந்த ஆண்டு மார்ச் 15}ஆம் நாள்காலை 6.29 முதல் 6.47 மணி வரை நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT