வெள்ளிமணி

நகரும் கோவில்!

DIN

திருவிழாக்களில் தேரோட்டம் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் இறைவனின் பிரதிநிதியாக உற்சவ மூர்த்தி வீற்றிருக்க,  ஊர் கூடி தேர் இழுக்க,  மாட வீதிகளில் அசைந்து வரும் தேர் பவனி அழகைக் காணும் பக்தர்கள் கோயிலே தங்களை நோக்கி வருவதுபோல் புளகாங்கிதமடைவர். இதன்பொருட்டே "நின்றால் கோயில்,  நகர்ந்தால் தேர்' என்ற பேச்சு வழக்கு ஏற்பட்டது.

திருவிழா முடிவடைந்ததும் தேர் நிலையில் நிறுத்தப்படும். தேரில் ஆரோகணித்த மூர்த்தியையும்,  கோயிலுக்குள் கொண்டு செல்வர்.  இது ஒரு பொதுவான விழா மரபு. ஆனால் ஒரு கிராமத்தில் ஆண்டு முழுவதும் ஒரு ரதத்தில் (சிறிய தேர்)  ஆண்டவனை கருவறையாகப் பாவித்து பக்தர்கள் தரிசிப்பதும்,  ஆண்டுக்கு ஒருநாள் மாசி மகத்தை ஒட்டி நடைபெறும் உத்ஸவத்தில் அந்த ரதமே வீதியில் பக்தர்களை நாடிவந்து அருளுவதும் நடைபெறுகிறது என்பது ஒரு அரிய தகவல் அல்லவா?

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போத்து ராஜாமங்கலம் எனப்படும் மங்கலம் கிராமத்தில் காமாட்சி அம்மன் கோயிலையொட்டி அமைந்துள்ள தேர் கொட்டடியில் போர் மன்னலிங்கேஸ்வரர் ரதத்தில் ஆண்டு முழுவதும் வீற்றிருந்து அருள்புரிகின்றார் என்பதுதான் அந்தச் சிறப்பு.

கிராமத்தில் கூறப்படும் புராண தகவல்கள்: 

துவாபர யுகத்தில் ஈஸ்வரனும்,  அம்பிகையும் பூலோகத்தைச் சுற்றி வந்தனர். வன்னி மரங்கள் நிறைந்திருந்த இந்தப் பகுதியில் சற்று ஓய்வு எடுத்தனர். அப்போது பார்வதி தேவி மணலால் கோட்டையையும்,  கொத்தளங்களையும் விளையாட்டுப் போக்கில் வடிவமைத்தார்.  அதன்அழகில் மயங்கிய ஈஸ்வரன் அந்த மணல் கோட்டையை மையமாக்கி சிவானந்தபுரி என்ற அழகிய நகரத்தை உருவாக்கினார். அந்த மணல் கோட்டையைக் காக்க ஈஸ்வரனால் யாக குண்டத்திலிருந்து எழுப்பப்பட்டவர்தான் ஸ்ரீபோர் மன்னன். 

வீரசாட்டை,  மல்லரி,  கொந்தம்,  கொடிசிலை போன்ற ஆயுதங்களுடன் காணப்படுபவர்.  அபார சக்தி வாய்ந்தவர்.  மகாபாரதத்தில் 18 நாள்கள் நடைபெற்ற போரில் கிருஷ்ணரின் ஆலோசனையின்பேரில் முக்கிய தளபதியாக இருந்து போரில் பாண்டவர்கள் வெற்றி பெற உதவியவர் இந்த போர்மன்னன். பாண்டவர்களின் சகோதரியாக விளங்கிய சங்குவதியை மணந்தவர்.  அன்று சிவானந்தபுரியைக் காக்கும் பணியில் ஈடுபட்டவர்தான், இன்று சிலாரூபமாக உருவகப்படுத்தப்பட்டு போர்மன்ன லிங்கேஸ்வரராக மங்கலம் கிராமத்தில் காட்சியளிக்கிறார்.  சிவாம்சமாகவே வழிபடப்படுகிறார்.

பொதுவாக, கிராமங்களில் திரெüபதி கோயில்களில் "போத்துராஜா' என்ற பெயரில் ஒரு சிறிய சிலை வடிவம் வழிபாட்டில் இடம்பெற்றிருக்கும்.  ஆனால் மங்கலம் கிராமத்தில் அளப்பறிய சக்தி கொண்டவராக உத்ஸவரே மூலவராகத் தேரில் காட்சி தரும் சிறப்பு வேறு எங்கும் இல்லை எனலாம். சுமார் 25  அடி உயரத்தில் மரத்தினால் (வேப்பமரம்) வடிவமைக்கப்பட்டவர்.  உருவமும் பெரியது;  வரலாறும் பெரியது. சுமார் 200 ஆண்டுகள் பழைமையானது. 

வலது கையில் கத்தியுடனும், இடது கையில் அசுரன் தலையுடனும்,  யாளி வாகனம் முன் நிற்க கம்பீரமாகத் தீயவர்களுக்கு கிலி ஏற்படுத்தும் விதமாக, ஆனால் அதே சமயத்தில் பக்தர்களைக் காக்க கருணை ததும்பும் வதனமுமாகவும் காட்சியைத் தரும். அதி அற்புத அழகு.  நிறைய குடும்பங்களுக்கு குல தெய்வமாக நேர்த்திக் கடன் செலுத்தி வழிபடப்படுகிறார்.

ஊரில் நடக்கும் அனைத்து முக்கிய விசேஷங்களுக்கும் வழிபாட்டில் இவருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவது சிறப்பு மேலும் மங்கலம் கிராமத்தில் அருகே அமைந்துள்ள பசுங்குன்றம் என்ற பசுமலையில் போர்மன்னன் வணங்கிய ஆதிலிங்கேஸ்வர் சமேத ஆதி அழகம்மை கோயில் உள்ளது.  அங்கும் கிராம மக்கள் பொங்கலிட்டு வழிபடுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம் முடிந்த மூன்றாவது நாள் ரத உத்ஸவம் எனும் தேரோட்டம் நடைபெறுகிறது. காலை 6 மணிக்குப் புறப்படும் ரதம் இரவு  8 மணிக்குத் தான் நிலைக்குச் செல்லும். இந்த அலங்கார ரத உத்ஸவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். விழாவின்போது நடைபெறும் கும்பப் படையலில் (அன்னக்குவியல்)வழங்கப்படும் பிரசாதத்தை வாங்கி,  மண்டியிட்டு சாப்பிட்டு மகப்பேறு வேண்டியும்,  திருமணத் தடையுள்ள பெண்கள் பலனடைகின்றனர்.

இவ்வாண்டு ரத உத்ஸவம் தொடர்ந்து 191}ஆவது ஆண்டு விழாவாக நடைபெறுகிறது. நிகழ்ச்சிகள் மார்ச் 5 விநாயகர் ஊர்வலம், மார்ச் 6 - ஸ்ரீபாலமுருகன் பூபல்லக்கு ஊர்வலம், மார்ச் 7} பராசக்தி ஊர்வலம்,  பரிவாரத் தேவதைகள் ஊர்வலம்,  மார்ச் 8 } இரவு 12 மணிக்கு முக்கியமான மகா கும்ப படையல், மார்ச்  9} மூலவராகவும்,  உத்ஸவராகவும் ரத உத்ஸவம். 

இருப்பிடம்:  திருவண்ணாமலையிலிருந்து வந்தவாசி,  சேத்துபட்டு சாலையில் சுமார் 15 கி.மீ. தூரம் (பேருந்து நிலையம் அருகிலேயே கோயில் உள்ளது)  மேல்மலையனூரிலிருந்தும் 15 கி.மீ. தூரம். தொடர்புக்கு- 9597370486

-எஸ்.வெங்கட்ராமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT