வெள்ளிமணி

புத்துயிர் பெறும் பரமன் கோயில்!

9th Jun 2023 04:34 PM | சாருலதா ராஜகோபால்

ADVERTISEMENT

 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் கட்டிய அநேக கோயில்கள் காலப்போக்கில் பராமரிப்பின்றி முற்றிலும் சிதிலமடைந்தும்,  தீர்த்தங்கள் மாசடைந்தும் காணப்படும் நிலையில் உள்ளன. அத்தகைய பழைமை வாய்ந்த ஒரு சிவன் கோயில் ஆன்மிக அன்பர்கள் முயற்சியால் பொலிவு அடைந்து வருகிறது.

திருவாரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மன்னார்குடி அருகே காரியமங்கலம் எனும் கிராமம் உள்ளது. காஞ்சி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவதரித்த இருள்நீக்கி கிராமத்துக்கு அருகில் உள்ள இந்தக் கிராமத்தைச் சுற்றி சுமார் பத்து கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் பல பாடல்பெற்ற தலங்கள் உள்ளன.

ஹரிச்சந்திரா புண்ணிய நதியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் பெரிய திருக்குளத்துடன் சிவன் "அகஸ்தீஸ்வரர்'  என்று திருநாமத்துடன் குடி கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

தல வரலாறு:  ஸ்ரீராமர் சீதா தேவியுடன் இலங்கையிலிருந்து திரும்பும் வழியில் இந்தத் தலத்துக்கு வந்து சிவ வழிபாடு செய்ததாகவும்,  குறுமுனி அகஸ்தியர் முதலான 18 சித்தர்கள் அகஸ்தீஸ்வரரை போற்றி வழிபட்டு மகிமை சேர்த்துள்ளதாகவும் தல வரலாறு கூறுகிறது.  இந்தத் தலத்தில் செவ்வாய் மற்றும் பெயரிலேயே கரிய நிறமுடைய "காரி' எனப்படும் மங்கலம் தரும் சனி பகவான் இருவரும் உச்சமாக இருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தக் கிராமத்தில் ஆதிவிநாயகர், சிவன் கோயிலுக்கு அருகில் பல குடும்பத்துக்கு குல தெய்வமாக உள்ள மந்தைக்கரை மாரியம்மனும், ஈசான்யத்தில் காத்தவராயன் கோயில்களும் வழிபாட்டில் உள்ளன.

கிழக்கு திசை நோக்கிய கோயில்.  அம்பாள் அழகும், அருளும் ஒருங்கிணைந்து "செüந்தர்ய நாயகி'  என்ற திருநாமத்துடன் விளங்குகிறாள்.  மதுரை மீனாட்சிக்கு ஒப்பானவள்.  "காரிய சித்தி விநாயகர்'  என்ற பெயருடன் விநாயகரும், மயிலுடன் தனியாக முருகன் "சுப்பிரமணிய சுவாமி'  என்ற பெயருடனும் காட்சியளிக்கின்றனர்.

வழிபாட்டுச் சிறப்பு: திருமணம், குழந்தை வரம், கல்வியில் மேன்மை, வேலைவாய்ப்பு உள்பட பல தேவைகளுக்காக காத்திருப்பவர்கள் செவ்வாய்க்கிழமைகளிலும்,  உடல்நலப் பிரச்னை உள்ளவர்கள் சனிக்கிழமைகளிலும் வேண்டி அருள் பெறலாம்.  மனமார நம்பிக்கையுடன் வேண்டிக் கொண்டு ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்துவைக்க, காரியங்கள் சித்தியடைவதாகப் பலன் அடைந்தவர்கள் கூறுகின்றனர்.

திருப்பணி: ராமேசுவரத்துக்கு ஒப்பான "தீர்த்த úக்ஷத்திரம்'  என்று புகழப்படும் காரியமங்கலம் அகஸ்தீஸ்வரர் கோயிலில் காஞ்சி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுடன் "காரியமங்கலம் செüந்தர்ய நாயகி சமேத அகஸ்தீஸ்வர சுவாமி கைங்கரிய சபா' என்ற ஆன்மிக அமைப்பு ஏற்படுத்தப்பட்டு,  பக்தர்கள் பேராதரவுடன் 2022}ஆம் ஆண்டு செப்டம்பரில் பாலாலயம் செய்யப்பட்டு,  திருப்பணி நடைபெறுகிறது.

சிதிலமடைந்த கோயில்களைச் செப்பனிட்டு புதுப்பிக்க உதவி செய்பவர்கள், புதிதாகக் கோயில் கட்டுபவர்களை விட நூறு மடங்கு புண்ணிய பலன்களை நிச்சயமாகப் பெறுவார்கள் என்கிறது "சிவ புண்ணியத் தெளிவு' என்னும் உப ஆகம நூல்.  இதில் சொன்ன பலன்கள் யாவும் சிவனால் நந்தி தேவருக்கு கூறப்பட்டவை.

மகளிர் முன்னின்று நடத்தும் மகத்தான பணியில் பங்கேற்போம்.
தொடர்புக்கு: 94442 61854,  93821 08050. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT