வெள்ளிமணி

மனித வாழ்வில் மாறுபடாத கோயில்கள்!

இரா. இரகுநாதன்

மார்கழி முடிந்து அயனம் மாறும்போது தைப் பொங்கல் வைத்து சூரியனுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது.  நலனும் வளமும் அருளும் சூரியனை  தமிழ் வேதங்கள் ஆயுளை வளர்க்கும் அன்ன உருவமாகப் போற்றுகின்றன. சிலப்பதிகாரத்தில்  "உச்சிகிழான் கோட்டம்' என்ற  சூரியனுக்கான கோயில் இருந்தது. 

குடந்தைக்கு அருகே சூரியனார் கோயில் சூரியனை தனித்து வழிபடும் கோயிலாக கி.பி. 11- ஆம் நூற்றாண்டில், முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் அமைக்கப்பட்டது. சூரியன் பெயரால் அமைந்த தலை }ஞாயிறு, திருப்பரிதி நியமம், ஞாயிறு போன்றவையும் சூரியன் வழிபட்ட தலங்களாக அமைந்துள்ளன.  இவைத் தவிர, சில நாள்கள் சூரியக் கதிர்கள் இறைவனைத் தொட்டு வழிபடும் கோயில்களும் உண்டு. 

சூரியனோடு தொடர்புடைய பொங்கல் விழாவே பஞ்ச பூதங்களையும் வழிபடும் விழாவாகும்.  சூரிய வழிபாடு ரிக் வேத காலத்துக்கும் முன்பிருந்தே   உண்டு. 

இந்திரன் பெயரால் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.  மார்கழி மாதத்தின் இறுதி நாளே போகிப் பண்டிகை. இந்த நாள் பழையன கழிந்து புதியது புகும் நாளாகக்  கொண்டாடப்படுகிறது.  

கோயில்களில் ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. ஆண்டாளுக்கு தொண்டை நாட்டுப்  புராதன திவ்ய தேசக் கோயில்களில் மார்கழி கடைதினம் "போகி' அன்று ஆண்டாளுக்கும் பெருமாளுக்கும் திருமணம் நடைபெறும். 

நோன்பிருந்து பெருமாளை மணந்த ஆண்டாளின் பக்தியை உணர்த்தும் விதமாக  திருவல்லிக்கேணி,  திருநின்றவூர்,  திருநீர்மலை,  காஞ்சிபுரம் போன்ற இடங்களில் போகி கல்யாணம் விமரிசையாக நடைபெறுகிறது. நோன்பிருந்து,  போகி அன்று நடக்கும்  திருமணத்தில்  பெண்கள் தரிசிக்க, திருமண வரம் கிடைக்கும் என்பர்.

திருவெள்ளறை குடந்தை சக்கரபாணி,  சாரங்கபாணி போன்ற தலங்களில் மூலவரைத் தரிசிக்க,  இரண்டு வாயில்கள் உள்ளன. உத்தராயண வாயில் வழியே தை முதல் ஆனி வரையும், தட்சிணாயண வாசல் வழியே ஆடி முதல் மார்கழி வரையும் சென்று சுவாமியை தரிசிக்க முடியும்.  ஏதாவது ஒரு வாசல் தான்  திறக்கப்பட்டிருக்கும். 

உத்தராயண  புண்யகாலம் தை முதல் நாள் தொடங்குகிறது.  சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலத்தை வேத நூல்கள் சிறப்பான காலம் என்று கூறுகின்றன. இந்தக் காலத்தில் சூரியனின் உக்கிரம் அதிகரிக்கத் தொடங்கும். உத்தராயண புண்ணிய கால துவக்கமாக,  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் 10 நாள்கள் உத்ஸவம்  துவங்கும்.  நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலிலும் பூஜைகள் நடக்கின்றன .

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகேயுள்ள பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் கோயில் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலாகும். வான் கோபர், மகா கோபர் என்ற இரு முனிவர்களும் சிதம்பரம்  நடராஜரிடம் தங்கள் ஐயம் தீர்க்க வேண்டினர். பரக்கலக்கோட்டையில்  அவர்களுக்கு தீர்ப்பு வழங்குவதாக கூறினார். கார்த்திகை மாத, திங்களிரவு  சிதம்பரத்தில் பூஜைகள் முடிந்த பிறகு,  வெள்ளால மரத்தின் கீழ்  பொதுவாக, தீர்ப்புக் கூறிவிட்டு,  அதிலேயே ஐக்கியமானார். இத்தலத்தில்,  வெள்ளால மரத்தின் வடிவில் அருள் செய்கிறார்.  கோயிலின் நடை திங்கள்கிழமைதோறும் நள்ளிரவு மட்டுமே திறக்கப்படும். கார்த்திகையில் 4 சோம வார பூஜைகளும் இரவில் நடைபெறும். தை 1-இல் மட்டுமே கோயிலின் நடை பகலில் திறந்து பூஜை நடைபெறுகிறது. 

மாட்டுப்பொங்கலன்று பசுக்களுக்கு கோ பூஜை நடைபெறுகிறது. தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட பசுக்களுக்கு கோ பூஜை நடக்கும். பல்லாயிரம் கிலோ எடையுள்ள காய்கறிகள், பழங்கள், அனைத்து வகை இனிப்புகள், பூக்களைக் கொண்டு மஹா நந்திக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும். திருவண்ணாமலை கோயிலிலும் இதுபோல் கோ பூஜை  நடைபெறும்.

காணும் பொங்கலில் கனுப்பிடி வைக்கும் பழக்கம் சில கோயில்களில் நடைபெறுகின்றன.   நாங்குநேரி  வானமாமலை தாயார் அன்று தன் தந்தையாகக் கருதும்  ஜீயர் மடத்தில் எழுந்தருளி, கனு வைப்பதுடன் மகரகண்டி சேவையும் நடைபெறும்.   பெரியோரைக் கண்டு வாழ்த்துப்பெறுவது   காணும் பொங்கலாகும்.  மலை மீதுள்ள கோயில்களுக்கும், பெசன்ட்  நகர் அஷ்ட லட்சுமி கோயில், கடற்கரை  ஓரமுள்ள கோயில்களுக்கும் பக்தர்கள் சென்று தரிசித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில்  பல கோயில்களில் தை 5}இல் ஆற்றுத்திருவிழா தீர்த்தவாரி  நடைபெறுகிறது.  திருவண்ணாமலையிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள மணலூர்பேட்டைக்குச் சென்று அண்ணாமலையார் தீர்த்தவாரி செய்து வருவார் .  

கோயில்கள் பொங்கலிலும் மனித வாழ்விலிருந்து மாறுபடாமல் இணைந்தே செல்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT