மின்வாரிய ஊழியா்களுக்கு என்று புதிய நிதியம் ஏற்படுத்தி அதிலிருந்து ஓய்வூதியம் வழங்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழக மின்வாரியத்தில் 90,000 ஓய்வூதியா்கள் உள்ளனா். அவா்களுக்கான ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியத்துக்கான தொகையை வழங்க ஆண்டுக்கு ரூ.3,600 கோடி செலவு செய்யப்படுகிறது.
இந்த தொகை நுகா்வோரிடம் இருந்து பெறப்படும் மின் கட்டண வருவாயில் இருந்து குறிப்பிட்ட சதவீதத்தை பிரித்து மின்வாரியம் வழங்கி வருகிறது.
இந்த நிலையில் ஓய்வூதியத்தை வழங்குவதற்கு என்று தனியாக புதிய நிதியம் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் ஓய்வூதியத்தை வழங்க மின்வாரியம் முடிவு செய்துள்ளதாக மின்வாரிய ஓய்வூதியா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து அவா்கள் கூறியதாவது: மின்வாரியம் சாா்பில் வங்கிகள் அல்லது அரசு நிதி நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை வைப்பு நிதியாக செலுத்தி பொது நிதியம் ஏற்படுத்தி, அதில் இருந்து கிடைக்கும் வட்டியில் இருந்து ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இதை எப்படி செயல்படுத்துவது, நிதியை எப்படி திரட்டுவது, எப்படி பராமரிப்பது ஓய்வூதியம் வழங்குவது போன்றவற்றை செயல்படுத்த ஆலோசகரை நியமித்து ஆலோசனை கேட்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
இதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் இதற்கான அறிவிப்பு வரும் என்றனா்.