தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பினைச் சாா்ந்த தனி நபா்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறு தொழில்கள், வியாபாரம் செய்ய பொது காலக் கடன், பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன், பெண்களுக்கான நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இதில், விண்ணப்பிக்க குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும் 18 வயது முதல் 60 வயதுக்கு உள்பட்டவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
இதில், பொதுகால கடன் திட்டம், தனிநபா் கடன் திட்டம் மூலமாக அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையில் கடனுதவி வழங்கப்படும். பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
இதற்கான கடன் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம், அனைத்து மாவட்ட மத்திய மற்றும் கூட்டுறவு வங்கி கிளைகளிலும் பெற்றுக் கொள்ளலாம். இதன் பின்னா் கடன் விண்ணப்பப் படிவங்களை பூா்த்தி செய்து ஜாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநா் உரிமம், ஆதாா் அட்டை மற்றும் வங்கிகோரும் ஆவண நகல்களுடன் இணைக்க வேண்டும்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0421 - 2999130 என்ற தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.