உலக நாடுகளின் பெயர்களை இரண்டு நிமிடத்தில் மனப்பாடமாக ஒப்பிப்பதுடன், அந்த நாடுகளின் தலைநகரங்களையும் உடனுக்குடன் சொல்லும் திறனை ஓவிய ஆசிரியர் ஏ.ஜான் பிலிப்போஸ் என்ற குமரி தீபம் பிலிப்போஸ் பெற்றுள்ளார். தான் கற்ற கலையை மாணவர்களுக்கும் அவர் கற்பித்து வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட தக்கலை அருகேயுள்ள முளகுமூடு பகுதியைச் சேர்ந்த இவர், முளகுமூடு புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்து பார்த்து வருகிறார்.
இவரிடம் பேசியபோது:
""மேடை நாடகம் குறித்தஆய்வில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளேன். மாணவர்களுக்கு நாடகக் கலையில் நடிப்புத் திறன்களைக்கற்றுக் கொடுத்து மாணவர்களை மேம்படுத்தி வருகிறேன்.
உலக நாடுகளின் பெயர்கள், அந்த நாடுகளின் தலைநகரங்களை இரண்டு நிமிடத்தில் சொல்லும் திறன் பெற்றுள்ளேன். குறிப்பாக, இந்தியாவில் உள்ள 734 மாவட்டங்களை 420 விநாடிகளில் மனப்பாடமாகச் சொல்வேன். இதற்காக பல வழிமுறைகளை உருவாக்கி பயிற்சி பெற்றுள்ளேன். பாடல் வடிவமாக எழுதி மனப்பாடம் செய்துள்ளேன்.
மனப்பாடம் மேம்படுவதற்கு மேடை நாடகமே முக்கிய காரணம். நீண்ட வசனங்களை மனப்பாடமாக்கி மேடைகளில் நடித்த காரணத்தால் மனப்பாடம் செய்வது எளிதாக இருக்கிறது.
மனப்பாடப் பயிற்சியில் கின்னஸ் சாதனை படைப்பதே நெடுநாளைய லட்சியம்.
நாடகக் கலையை அழியாமல் பாதுகாத்து, மேடை நாடகங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதே எனது நோக்கம்'' என்றார்.