வெள்ளிமணி

தபோவன நாயகி!

30th Sep 2022 05:54 PM

ADVERTISEMENT

 

700 ஆண்டுகளாக பாரம்பரிய பெருமையுடன் அம்மன்குடி கிராமத்தில் நடத்தப்படும் "மஹிஷாசுரசம்ஹாரம்' உத்ஸவம் சிறப்புடையது.

தல இருப்பிடம்:  கும்பகோணத்துக்கு கிழக்கே சுமார் 15  கி.மீ. தூரத்தில் அரசலாற்றுக்கு அருகில் உள்ளது அம்மன்குடி. இங்குள்ள அருள்மிகு பார்வதி தேவி உடனுறை கைலாசநாத ஸ்வாமி கோயிலில் அமைந்துள்ள  துர்கா பரமேஸ்வரி சந்நிதி பிரசித்தமானது.

தல மகாத்மியம்:  இத்தலத்தைப் பற்றி ஸ்ரீஸ்கந்த புராணம் சேஷத்திரக் காண்டத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. பிரம்மனைக் குறித்து கடுந்தவம் மேற்கொண்டு தன்னை ஒரு பெண் தவிர வேறு யாரும் வெல்ல முடியாத ஒரு அரிய வரத்தையும் பெற்றான் மகிஷாசுரன்.  தேவர்களுக்கு தீங்குகளைஇழைத்தான். 

ADVERTISEMENT

அம்பிகை பராசக்தி,  துர்கா வடிவத்தைக் கொண்டு அசுரனை வதம் செய்தாள். அதனால் ஏற்பட்ட பாவத்தைப் போக்கிக் கொள்ள சோழ தேசத்தில் உள்ள மகிமை பொருந்திய இத்தலத்தைத் தேடி வருகின்றாள் அம்பிகை. முதலில் துக்காச்சி (அம்மன்குடி அருகில்)  என்ற இடத்துக்கு வந்து சேரும் அன்னை,   தனது சூலத்தில் ஏற்பட்ட அசுரனின் ரத்தக் கறையை கழுவுவதற்கு இடம் தேடினாள்.  

அங்குள்ள குளத்தில் சூலத்தை சுத்தம் செய்ய,  உடனே பாவ விமோசனம் ஏற்பட்டது. அதனால் இப்புஷ்கரணி "பாப விமோசன தீர்த்தம்' என்று அழைக்கப்படலாயிற்று. பின்னர், இறையாணைப்படி தேவி இத்தலத்தில் தவம் புரிந்து, குடிகொண்டு, ஜீவராசிகளைக் காத்தருளுகிறாள் என்கிறது தல வரலாறு.  அம்மன்குடி கொண்ட இடமானதால் "அம்மன்குடி' என்று இவ்விடம் பெயர் பெற்றது. 

தலத்தின் இதர பெயர்கள்: தேவி இங்கு தவம்ஆற்றியதால் "தபோவனம்'  என்ற புராணப் பெயர் உண்டாயிற்று. சோழர்கள் காலத்தில் இவ்வூர் "ராஜராஜேஸ்வரம்' என்றும் "கேரளாந்தக சதுர்வேதி மங்கலம்' என்றும் "அமண்குடி' என்றும் அறியப்பட்டது. 

ஆலயத்தின் தொன்மை: ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான கோயில். முதலாம் ராஜராஜ சோழ மன்னனின் படைத் தலைவரான கிருஷ்ணன் ராமன் பிரம்மாதிராயன் வாழ்ந்த ஊர். சோழ சாம்ராஜ்யம் விரிவுபடுத்தியதில் பெரும் பங்கு இவரைச் சாரும். 

கி.பி. 944}இல் கோயிலை முறைப்படி கட்டி கும்பாபிஷேகம் நடத்தினார். ராஜராஜனும், ராஜேந்திரசோழனும் இங்கு வழிபட்டு வந்துள்ளனர். 
கல்வெட்டுச் சான்றுகள்: ஆலயத்தின் கர்ப்பக் கிரகத்துக்கு வெளியில் மூன்று திருச்சுவர்களிலும் பல கல்வெட்டுகள் உள்ளன.  அவைகளில் ஆலயத்துக்கென மன்னர்களால் எழுதி வைக்கப்பட்ட மானியங்கள்  குறித்த தகவல்கள் காணப்படுகின்றன. அக்காலத்தில் தினசரி மஹாபாரத பாராயணத்துக்கு வகை செய்யப்பட்டிருந்தது.

சந்நிதிகள் சிறப்பு:  ஸ்ரீகைலாசநாதர்,  பார்வதி தேவி,  கணபதி சிலைகள், பார்வதி தேவியே பிரதிஷ்டை செய்ததாக ஒரு ஐதீகம் உள்ளது.  சிவன் சந்நிதிக்கு இடதுபுறம் கிழக்கு நோக்கி எட்டு கரங்களுடன்,  அம்பாள் துர்கா பரமேஸ்வரி காட்சி தருகிறாள். 

மகிஷாசுரமர்த்தினியாக பக்தர்கள் வழிபடுகின்றனர்.  நவக் கிரகங்கள் கிடையாது குழந்தை வடிவில் சூரியனும்,  வீணையில்லாமல் கையில் ஏடு, எழுதுகோல் கொண்டு யோக சரஸ்வதியும், தட்சிணாமூர்த்தியும், சண்டிகேஸ்வரரும் சந்நிதி கொண்டுள்ளனர்.

வழிபாட்டு பலன்: இங்கு வருபவர்களுக்கு ஸ்ரீதுர்கா தேவி தரிசனத்தால் பாப விமோசனமும், இஷ்ட சித்திகளும் ஏற்படுகின்றன. செவ்வாய்க்கிழமை களில் ராகு கால வேளையில் அபிஷேகம், செவ்வரளியால் அர்ச்சனை,  நெய் விளக்கு தீபம் ஏற்றி வழிபடுபவர்களுக்கு கோரிய வேண்டுதல்கள் பலிதமாகுவதாக பக்தர்களிடையே அசாத்திய நம்பிக்கை நிலவுகிறது. சுவாசப் பிரச்னை, காச நோய் போன்றவைகளிலிருந்து விடுபட துர்கையம்மனுக்கு தேனபிஷேகம் செய்துஅதனைஅருந்த நிவாரணம் உண்டாவதாகச்சொல்லப்படுகிறது. பல குடும்பங்களுக்கு குல தெய்வமாக வழிபடப்படுகிறாள்.

விழா சிறப்பு: நவராத்திரி விழாவில் 8}ஆம் நாள் திருவிழாவில்துர்காஷ்டமியன்று மாலை மகிஷாசுர சம்ஹார நிகழ்ச்சி கோயிலுக்கு வெளியே நடைபெறுகின்றது. உத்ஸவ துர்கையம்மன் எட்டு கரங்களுடன் சிம்ம வாகனத்தில் இருக்க,  மகிஷாசுரன் எருமைத் தலையுடன் எதிரில் வரமகிஷாசுர சம்ஹாரம் நடைபெறுவது கண்டுகளிக்கத்தக்கது.
இந்த ஆண்டு அக்.  3}இல் (திங்கள்கிழமை))  சிறப்புப் பூஜை நடைபெறுகிறது.

தொடர்புக்கு} 9443932983,  8122443891. 
-எஸ். வெங்கட்ராமன்

ADVERTISEMENT
ADVERTISEMENT