வெள்ளிமணி

திருமலையில் ஒருநாள்

30th Sep 2022 05:52 PM

ADVERTISEMENT

 

கொங்கு மண்டலத்தில் காவிரியின் வட கரையில் மேற்கிலிருந்து கிழக்காகப் பாயும் காவிரியாறு, கோபாலன் பிரசன்னமாவதற்காக இடம் நகர்ந்து தடம் மாறி வடக்கில் இருந்து தெற்காகப் பாய்ந்தது .

காவிரியின் வேண்டுதல்: திருமாலிடம் காவிரி நதியும்  பிரம்மாவும் இத்தலத்தில் பக்தர்களுக்கு  நல்லவை  நடக்கவும், வேண்டியது கிடைக்கவும் காட்சி தந்தருள  வேண்டினர்.  "கலியுகத்தில்  என் பக்தனுக்காக வில்வாரண்யமான இத்தலத்தில் காட்சி தரப் போகிறேன். அங்கு என்னைத் திருமணக் கோலத்தில் தரிசித்து பலன் பெறலாம்' என்றார்.  இந்தக் காட்சி தந்த ஊர் "மோகனூர்'.  கரூரிலிருந்து 13 கி.மீட்டரிலும்,  நாமக்கல்லிலிருந்து 18 கி.மீட்டரிலும் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீட்டருக்குள் கோயில் அமைந்துள்ளது. மோகனூரில் ரயில் நிலையமும் உள்ளது.

பரம பக்தனுக்கு சோதனை: அவ்வூரில் திருமலை மலையப்பசுவாமி மீது வற்றாத அன்பு கொண்ட  ஒரு பக்தர் வாழ்ந்தார். திருமலைக்கு பிரம்மோத்ஸவத்தின்போது சென்று தங்கி தரிசித்து  வருவார். அவருக்கும் வாத நோய் தாக்கி  நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் " உன்னைக் காணாத கண்  கண்ணே இல்லை'  என எண்ணி அன்றிரவு தன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்தார்.

ADVERTISEMENT

காவிரிக்கு அருகில் சென்று  தன்னை மாய்த்துக் கொள்ள வருவதைக் கண்ட காவிரி பிரம்மனிடம் சொல்ல,  அவரும் நாராயணனை வேண்டினார். அவர் ஆதிசேஷனுக்கு சைகை தர காவிரிக்குள்ளிருந்து ஒரு பெரிய பாம்பு வடிவமாக   ஆதிசேஷன் வெளியானார். பாம்புக்கு பயந்து பக்தர் மெல்ல பின் நகரலானார். அவர் வீட்டு வரைக்கும் துரத்திச் சென்ற பாம்பு திண்ணையில்  ஏறியதும் காணாமல் போனது. அவரும் அயர்ந்து தூங்கி விட்டார். விடியற்காலை கனவில் மலையப்பசாமி  தோன்றி,  "உன் திருப்திக்காக நானே இங்கு  காட்சி தருவேன். அருகில் உள்ள புற்றில் நான் ஐக்கியமாகியுள்ளேன்' எனக்கூறி மறைந்தார்.

திடுக்கிட்டு எழுந்தார். ஊராரிடம் தெரிவித்தார்.  அனைவரும் புற்றிடம் சென்றனர்.  திருமலைவாசன் அர்ச்சாவதார உருவில்  மணக்கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடரமணப் பெருமாளாக வசீகரப் புன்னகையுடன் மோகனமாக பிரசன்னமாகியிருந்தார். சிவன், பிரம்மா, காவிரி நதி, அனைவரும் பக்தருடனும் ஊராருடனும் சேர்ந்து தரிசித்தனர். மோகனன் தோன்றிய ஊராதலால் மோகனூர் எனப்பெயர் ஏற்பட்டது. புற்றிலே பிரசன்னமானப் பெருமாளாதலால் இன்றும் சன்னதியில் மருத்துவகுணத்தோடு   வெளிப்படும் புற்றுமண் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

பிரசன்னமாகி காட்சியளித்த  புற்று இருந்த இடத்திலேயே  அவரை பிரதிஷ்டை செய்து சந்நிதி அமைத்து வழிபடத்துவங்கினர்.  இவர் பெயர் ஸ்ரீ கல்யாண பிரசன்ன வெங்கட்டரமண பெருமாள் என்பதாகும்.  கோயிலும் சந்நிதிகளும்..:  விஜய நகர காலத்தைச் சார்ந்த இக்கோயில்,காலை 7  முதல் 12 மணி வரையும் மாலை 5  முதல் இரவு 8 மணி வரையும் தரிசிக்கலாம். மூன்று நிலை ராஜகோபுரம்  உள்ளே கொடிமரம் பலிபீடம் பிரகாரத்தில் ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ அலர்மேல் மங்கைத்தாயார், வைத்ய நாராயணன் எனப்படும் தன்வந்திரி ஆண்டாள், நரசிம்மர் நவனீத கிருஷ்ணன் ஆகிய சந்நிதிகள்  அமைந்துள்ளன, ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர், சீதாராமர், ஸ்ரீலக்ஷ்மி வராஹர் ஆகியோரும் எழுந்தருளியுள்ளனர்.

பலன்கள்: பெருமாளுக்கு வேண்டுதல் செய்து  திருமணம் முடிந்ததும் வந்து வணங்குவதும் திருக்கல்யாணம் செய்வதும் பழக்கத்தில் உள்ளது. பரிகாரக் கோயில்: ஸ்ரீ லக்ஷ்மிவராஹரை பிரதோஷ காலத்திலும், குழந்தைகள் கல்வி, நாவன்மை  பேச்சாற்றலுக்காக ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவரை வியாழக்கிழமையிலும் வழிபடுகின்றனர். ஸ்ரீ ருக்மணி சத்ய
பாமாவுடனுறை ஸ்ரீ நவநீத கிருஷ்ணரை குழந்தை வரம் வேண்டுவோர் வழிபடுகின்றனர். ஆனியில் பிரம்மோத்ஸவமும் ஆவணி அல்லது ஐப்பசியில் பவித்ரோத்ஸவமும் வைகுண்ட ஏகாதசியும் முக்கிய விழா நாள்கள்.

திருமலையில் ஒருநாள்: திருமலையில் காட்சி தரும் திருமால் இங்கு புரட்டாசி ஞாயிற்றுக்கிழமையில்  ஒருநாள் மட்டும் திருப்பதியிலிருந்து எழுந்தருளி இங்கு காட்சி தருவதாக ஐதீகம். ஆதலால்,  திருமலை பூஜை முறை மாறாமல் உத்ஸவம்  நடைபெறுகிறது.

இவ்வாண்டு உத்ஸவம் அக்டோபர் 9}இல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.  அதிகாலை 5-  சுப்ரபாதம், கோ பூஜை, 6 மணி- நவநீத ஆரத்தி, 7 மணி- தோ மாலை சேவை,  8 மணி- அர்ச்சனை சேவை,  9  மணி- பூஜை சேவை சாற்றுமுறை,  9.45- தரிசனம் திருமஞ்சனம், மாலை 4 முதல் 6 வரை-  திருக்கல்யாணம்,  இரவு 7 மணி- வாகனப் புறப்பாடு, 8 மணி வரை ஒய்யாளி சேவை, 9 மணிக்கு மேல் ஏகாந்த சேவை.

தொடர்புக்கு} 9442957143; 9965996100
}இரா.இரகுநாதன்

ADVERTISEMENT
ADVERTISEMENT