வெள்ளிமணி

குறையின்றி வரம் அருளும் குழந்தை பாலா!

தினமணி

"சிவனுக்கு  உகந்தது சிவராத்திரி-  தேவிக்கு உகந்தது நவராத்திரி'  என்பர்.   இதில், வேணிற்காலமாகிய  (வசந்தருது)  சித்திரை மாதத்தில் வளர்பிறை பிரதமை முதல் ஒன்பது நாள் வசந்த நவராத்திரி என்றும்  கார்காலமாகிய (சரத்ருது)  புரட்டாசி மாதத்தில் வளர்பிறை பிரதமை முதல் சரத் நவராத்திரி (சாரதா நவராத்திரி) என்றும் கொண்டாடப்படுகிறது.

இந்த நாள்களில் தேவி வழிபாடு செய்வதின் அவசியம் ஏன்? வசந்தருது, சரத்ருதுவாகிய இரண்டு ருதுக்களும் யமனுடைய இரண்டு கோரைப் பற்களுக்குச் சமமாய் கருதப்படுகிறது.  இந்தக் காலங்களில் ஏற்படும் தட்ப வெப்ப நிலையில் பெருத்த மாறுதல்களும் பருவநிலை கோளாறுகளும் ஏற்படும்.  அதனால்  உண்டாகும் நோய்களின் தாக்கம்  மக்களை வாட்டும். அவற்றினின்றும் காத்துக் கொள்ளவே தேவி வழிபாட்டை முன்னோர்கள் மேற்கொண்டனர்.

அம்பிகையை பல வடிவங்களில் வழிபடுகிறோம். அவற்றில் அம்பிகை ஒன்பது வயது குழந்தை வடிவமாக,  பாலாவாக வழிபடுவது தொன்று தொட்டு வந்துள்ளது. பாலதிரிபுரசுந்தரியான அவளை "வாலை' என்றுஅழைத்து வணங்கி வழிபட்டுள்ளனர் சித்தர்கள். அந்தச் சக்தி சொரூபமான பாலாவை வணங்கினால் நோய்கள் விலகும். வாழ்க்கையில் நமக்கு வேண்டிய வரங்களை நல்குவாள்.

பாலா தோன்றிய வரலாறு:  புராணங்களின் கூற்றின்படி , மன்மதனை ஈசன் எரித்த சாம்பலிலிருந்து தோன்றியவன்  "பண்டன்'  எனும் அரக்கன்.   ஒரு பெண்ணைத்த விரதனக்கு யாராலும் மரணம் நேரக் கூடாது என வரம் பெற்றிருந்தான்.  அந்த மமதையில் தேவர்களுக்கு மிகுந்த இன்னல்களை அளித்தான். தேவர்கள் லலிதா பரமேஸ்வரியை சரணடைய, அசுரனுடன் போர் புரிய ஆயத்தமானாள்அம்பிகை. 

தேவியை வெல்ல முடியாது என அறிந்த  அவன் வலிமைமிக்கத் தனது முப்பது மைந்தர்களைப் போருக்கு அனுப்பினான் பண்டாசுரனுக்கு ஈடான அவர்களை அழிக்க  ஸ்ரீலலிதா தேவியின் உடலிலிருந்து ஆவிர் பவித்தாள் அண்டத்தைக் காக்கும் அம்பிகையின் செல்ல மகளாக ஸ்ரீபாலா. 

தனது அன்னையிடம் கவசங்களையும்,  ஆயுதங்களையும் பெற்று பண்டாசுரன் மகன்களோடு போரிட்டு அனைவரையும் போரிட்டு அழித்தாள்.  பின்பு அன்னைலலிதாவோடு அப்படியே ஐக்கியமாகிவிட்டாள் என்கிறது புராணம். "பண்ட புத்திர வதோத்யுக்த பாலா விக்ரமநந்திதா' என லலிதா சகஸ்ர நாமஸ் தோத்திரத்தில் அம்பாளை வர்ணித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீபீடம் - ஸ்ரீபாலாதிரிபுரசுந்தரி சமஸ்தானம்:  ஸ்ரீபாலாம்பிகைக்கு என தனிச் சிறப்பு மிக்க  ஆலயம்  ஒன்று  திருப்போரூர்} செங்கல்பட்டு சாலையில் வட திருவானைக்கா எனவழங்கும்  செம்பாக்கம்  கிராமத்தில்  சிவன் கோயில் அருகில் அமைந்துள்ளது.  தொடக்கத்தில் ஸ்ரீ பாலசுந்தரிக்கு சிறு சந்நிதியாகக் கட்டப்பட்ட கோயிலே சிறிது சிறிதாக விரிவடைந்து அம்பிகையின் பரிபூரண அருளாலும், எண்ணற்ற குருமார்கள், மகான்களின் அனுகிரகத்தாலும் தற்போது பாலா சமஸ்தான ஆலயமாக, லலிதா தர்பார் கோயிலாகத் திகழ்கிறது.

கீழ்தளத்தில் ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி குழந்தையாகவும்,  ஸ்ரீதருணி திரிபுரசுந்தரி குமரியாகவும் (யெüனப் பருவம்), மேல் தளத்தில் ஸ்ரீமத் ஒளஷதலலிதா மகா திரிபுரசுந்தரியாகவும் அன்னையாக ஸ்ரீ   சக்ர குண்டமும் ஸ்ரீ   சக்ர மஹாமேருவும்  சந்நிதி கொண்டு அருளும் பாங்கை விவரிக்க வார்த்தைகள் போதாது.

ஸ்ரீலலிதா திரிபுர சுந்தரி விஸ்வரூப மூலிகைத் திருமேனியாகும். இக்கோயிலைச் சேர்ந்த சுவாமிஜி இராஜசேகர இளம்பூரண சிவத்தின் கரங்களால் எட்டு ஆண்டுகளாக மூலிகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒளஷத லலிதாம்பிகையாகும். இந்தஅம்பிகைக்கு பெüர்ணமிதோறும் பிரத்தியேகமாகத் தறியில்நெய்யப்பட்ட 51 முழம் பட்டுப் புடவை சாற்றப்படுகிறது. 

இந்த அம்பாள் எதிரில் ஸ்படிக சிவலிங்கம் பிரதிஷ்டை ஆகியுள்ளது. ஒளஷத லலிதாம்பிகையின் அழகு மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும். இந்த அம்பாளைத் தரிசிக்க "திதிபடிகள்' என்று சொல்லப்படும்படிகளின் வழியே மேல்மாடிக்குச் செல்ல வேண்டும்.

வளர்பிறையில் செல்வதற்கு எனவும், தேய்பிறையில் செல்வதற்கு எனவும் இரண்டு வாயில்கள்உண்டு. இவளைத் தரிசிக்கச் செல்பவர்கள் சில வழிபாட்டு முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று இந்தச் சந்நிதியில் பிரதி பெüர்ணமிதோறும் நவாவரண பூஜை நடைபெறுகின்றது.

விழா சிறப்பு: இந்தக் கோயிலில்  முதல் பூஜைகள் ஸ்ரீபாலா திரிபுர சுந்தரிக்கே நடைபெறுகிறது. ஸ்ரீபாலா மூலவர், உத்ஸவர் திருமேனிகள் சிற்ப ஆகமம் தியான ஸ்லோக முறைப்படி அமைந்துள்ளது விசேஷம்.  ஆண்டுக்கு 4 நவராத்திரி விழாக்கள் கொண்டாடப்படும் ஒரே தலமாகத் திகழ்கிறது.

இந்த ஆண்டு விழா செப் .25 முதல் அக். 9}ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தொடர்புக்கு} 9789921152,  9445359228.

-வி.உமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT