வெள்ளிமணி

அமாவாசையிலும் அருளும் ஆண்டவர்!

16th Sep 2022 05:57 PM

ADVERTISEMENT

 

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் சந்நிதியில் தங்கி,  அமாவாசையைத் தர்ப்பணம் செய்து முன்னோர்களை நினைத்து வழிபடுவது பண்டைக்காலந்தொட்டு நடைபெறுகிறது.

சாலிஹோத்திரர் தவம்:  பத்ரிகாச்ரமத்தில்  புரு புண்யர் என்ற அந்தணர் தனது மனைவியுடன் வசித்துவந்தார். அவருக்கு புத்திரப் பாக்கியம் இல்லாததால் "சாலியங்ஞம்' என்ற யாகம் செய்ய ,பெருமாள் அருளால் "சாலிஹோத்திரர்' என்ற பிள்ளையைப் பெற்றார்.  வளர்ந்ததும் திருமணம் செய்துகொண்டு தீர்த்த யாத்திரை சென்றனர். வீட்சாரண்யம் என்னும் பகுதிக்கு வந்ததும் சாலிஹோத்திரர் தவம் செய்தார்.  அன்று காலையில் சேகரித்த நெல் சமைத்து நான்கு பாகமாக்கி விருந்தினர்  வருகைக்காக காத்திருந்தார். 

திருமால்  முதிய அந்தணராக வர, சாலிஹோத்திரர் வரவேற்று உபசரித்தார். அவர் அளித்த உணவு போதாமல் நான்கு பாக உணவையும் அவரே உண்டுவிட்டார். மகிழ்ந்த சாலிஹோத்திரர் ஹிருத்தாப நாசினிதீர்த்த வடகரையில் ஒரு வருடம் உணவின்றி தவம் செய்தார்.  ஒராண்டுக்குப் பின்னர் முன்போலவே நெல்லை சேகரித்து  உணவு சமைத்து நான்கு பாகமாக்கி அதிதியின் வருகைக்காக காத்திருந்தார். பகவானும் கிழவுருவில்  வந்து உணவு முழுவதையும் உண்டுவிட்டு களைப்பு மேலிட எவ்வுள்ளில்  படுத்து உறங்கலாம் என  சாலிஹோத்திரரிடம் கேட்டர்.

ADVERTISEMENT

பர்ண சாலையில் படுத்த பெருமாள்: சாலிஹோத்திரர் தன் பர்ணசாலையில் சயனிக்கக் கூறினார். பெருமாள் தெற்கு தலைவைத்து சாய்ந்து படுக்க சுபசகுனங்கள் தோன்றின தன் சுய உருவை சாலிஹோத்திரருக்கு காட்ட, மகிழ்ந்து பெருமாளை இன்று முதல் இங்கேயே தங்கி பக்தர்களுக்கருள வேண்டினார்.

திருமாலும் மகிழ்ந்து தங்க ஒப்புக்கொண்டு "எவ்வுள்'என கேட்டு சயனம் கொண்டதால்  "திருஎவ்வுள்ளூர்'என்ற பெயரில் இந்தத்தலம்  வழங்குமென அருளினார். பகவான் சாலிஹோத்திர மகரிஷியிடம்  வந்து தங்கிய தினம் அமாவாசை என்பதால் இத்தலம் அமாவாசை விரதச் சிறப்பு பெற்றது. இத்தலம் பற்றி மார்க்கண்டேய புராணத்தின் 100 முதல் 111 வரையிலானஅத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருவறையும் கடவுளும்: திருவள்ளூர் 108 வைணவத் திருப்பதிகளில் ஒன்றானது.  அகோபிலமடம் நிர்வாகத்திலிருக்கும் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கருவறையில் புஜங்க சயனத்தில் பப்டி என்னும் கட்டம் போட்ட துணி சார்த்திக் கொண்டு   காட்சி தருகிறார். அவரின் கையின் கீழே சாலிஹோத்திர மகரிஷி எழுந்தருளியுள்ளார்.எம்பெருமான் இங்கே சயனித்துவிட எம்பெருமானைச் சேர மகாலெட்சுமி வசுமதியாக தர்மசேனபுர  திலிப மகாராஜாவுக்குப் மகளாக அவதரித்து வாழ்ந்தாள். பெருமான் வீரநாராயணன் என்ற திருப்பெயருடன் வேட்டைக்குச் செல்ல, தேவியைக் கண்டு மணமுடித்ததாக வரலாறு. இங்கே தாயார்  வசுமதி கனகவல்லி என்னும் திருநாமத்துடன் எழுந்தருளி தனி சந்நிதியில்  அருள்பாலிக்கிறார்கள். அதற்கு முன் கிங்கிருஹேசன் (எவ்வுள் கிடந்தான்) என்பதே முக்கியமாக இருந்தது.

சிவனுக்கு தோஷம் நீங்கியது: சிவன் தட்சனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் அடைந்தது.  அவனை விடாது பின்னர் தொடரவே மீள்வதற்கு பலவழிகளில்  முயன்றும் இறுதியில் இவ்விடம் வந்து சிவனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது என்ற வரலாறு உள்ளது.

பக்தனுக்கு அருளும் பரமன்: தூய்மையான பக்தர்களுக்கு அருள்வதில் இப்பெருமான் எல்லையற்ற அருள்குணம் கொண்டவர்.   இத்தலம் மோட்சகதி நல்கும்  தலமாக விளங்குகிறது.

அமாவாசையில் அருள்:  கெüசிகன் என்னும் அந்தணன் ஒருவன் யாத்திரை புறப்பட்டு  சகல புண்ணிய நதிகளிலும்  நீராடி தண்டகாரண்யத்தின் மத்தியப் பிரதேசத்தை அடைந்தான். அங்கு உணவின்றி வாடி பசியால்  களைத்து சோர்ந்தபோது,  அந்தவழிச் சென்ற சண்டாளனைக்  கண்டு தனக்கு உணவு அளிக்குமாறு வேண்டினான்.  முகத்திலிருந்த ஒளியைக் கண்ட அவன் தன் தோள் மீது ஏற்றிச் சென்று கெüசிகனுக்கு உணவளித்தான்.  அயர்ந்து தூங்கிய கெüசிகனுக்குப் பணிவிடைகள் செய்யுமாறு சண்டாளன் புத்திரியை அனுப்பினான். அவளது பணிவிடைகளில் தன்நிலை மறந்த கெüசிகன் சண்டாளன் மகளுடன் இன்புற்றான்.

நெடுநாள்கழிந்து நிலையுணர்ந்த கெüசிகன்  தீர்த்த யாத்திரை தொடர்ந்து   கிழப்பருவ நிலையில் இங்குள்ள ஹிருத்த பாபநாசினியினில் நீராடி உயிர் நீத்தான். அன்று  தை அமாவாசையாக இருந்தது . யமதூதர்கள்  இவனை யமனுலகிற்கு  இட்டுச்செல்ல இவன் செய்த பாபங்களின் காரணத்தால்  இங்கு கொணர்ந்தோம் என்றனர். இதைக் கேட்டு நகைத்த எமன் இவன் தை அமாவாசையன்று ஹிருத்த பாப நாசினியிலில் நீராடியதால் இவனுக்கு பாபங்களே இல்லை. இவனை மோட்சவாயிலில் கொண்டு சென்றுவிட்டு வாருங்கள் என்று  உத்திரவிட்டான்.

தொடர்புக்கு 04427660378 ;9789419330

-இரா.இரகுநாதன்

ADVERTISEMENT
ADVERTISEMENT