வெள்ளிமணி

பரமன் உறையும் பல்லகச்சேரி

9th Sep 2022 06:10 PM

ADVERTISEMENT

 

இராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட பாவம் நீக்க,  ராமன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம்  ராமேசுவரம். இதேபோல, மற்றொரு தல வரலாற்றுடன் திகழ்கின்றது  "வட ராமேசுவரம்' என்று போற்றப்படும் பல்லகச்சேரி அருள்மிகு ராமநாதேஸ்வரர் கோயில். 

தல வரலாறு: முன்பு இவ்வூர் அமைந்துள்ள பகுதி "சம்புகாவனம்'  என்ற பெயரில் அடர்ந்த காடுகள் சூழ்ந்தும், சம்பு மலையுடனும் திகழ்ந்திருக்கிறது. 

இம்மலை அடிவாரத்தில் ஜம்புகாசுரன் என்ற அசுரன் கடும் தவம் மேற்கொண்டான்.  தவ உக்ரக வெப்பத்தால் பச்சிளம் குழந்தைகள் மடிந்தன.  இதையறிந்த நாரதர் அயோத்தியில் அவ்வமயம்ஆட்சி செய்த ராமபிரானிடம் தெரிவிக்க,  உடனே தென்னகத்துக்கு மேவிய தசரத மைந்தன் மகா விஷ்ணு வடிவம் கொண்டு பிரயோக சக்கரத்தால் சூரனைஅழித்தார். அதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு. 

ADVERTISEMENT

ஸ்ரீராமர் வழிபட்ட சிவலிங்கம்தான் சுயம்பு லிங்கமாக ராமநாதேஸ்வரராக அருள்புரிகிறார். 

தல இருப்பிடம்: தற்போது பல்லகச்சேரி என்று அழைக்கப்படும் ஆந்தோளிகாபுரம் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட சங்கராபுரம் வட்டத்தில் தியாகதுருகத்திலிருந்து வட மேற்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆந்தோளிகா என்றால் வட மொழியில் ஊஞ்சல் என்று பொருள். ஊஞ்சல் ஆடுதல் ஒரு உற்சாகச் செய்கையாகும்.

பொதுவாக ஆலயங்களில் ஊஞ்சல் சேவை பிரசித்தம். அவ்வகையில் இத்தலத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் எப்பொழுதும் உற்சாகம் பொங்கும் என்பது திண்ணம்.
பல்லகச்சேரி பெயர்க்காரணம்: பெரிய ஏரியின் கரைகள் பல்லக்கு வடிவில் அமைந்து காணப்படுவதால். முன்பு பல்லக்குச்சேரி எனஅழைக்கப்பட்டு,  பல்லகச்சேரியாக ஆனதாக 
தகவல்.  சோழர் காலத்தில் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்உருவாக்கப்பட்ட ஊர்.

இதர கோயில்கள்: சிவன் கோயிலைத்தவிர, இரு பெருமாள் கோயில்களும்,  இரு மாரியம்மன் கோயில்களும், சாமுண்டி அம்மன் கோயிலும் வழிபாட்டில் உள்ளது. 

சிவாலயத்தில் சந்நிதிகள்: கருவறை, அர்த்த மண்டபம்,  மகா மண்டபம் என்ற அமைப்புடன், கோஷ்ட தெய்வங்கள்,  நவக் கிரகங்கள், சந்நிதிகளுடன் ஒரு அழகான சிவாலயமாகத் தூய்மையுடன் காணப்படுகிறது. சரபேஸ்வரர், பிரத்தியங்கிரா தேவி சந்நிதிகள் அண்மையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

விஷ்ணு சிவனை பூஜிக்கும் கல் திருமேனி பிம்பமும், ப்ரயோக சக்கரத்துடன் ஸ்ரீராமர் சந்நிதியும் அமைந்துள்ளது சிறப்பு. ராமர் சந்நிதிக்கு எதிர்புறம் ஜம்புகாசுரன் சிற்பம் உள்ளது. கோயில் நுழையும் முன் நந்திகேஸ்வரரையும், விநாயகர், முருகனையும் தரிசிக்கலாம். கடல் போன்ற ஏரிக்கு அருகில் அமைந்துள்ளதால் அம்பிகைக்குத் தீர்த்தநாயகி என்று பெயர். 

தனது கரங்களில் அங்குசம் - பாசம் ஏந்தியும், அபய வரதகரங்களுடன் புன்னகை ததும்பும் வதனத்துடன் அருள் வழங்கும் அற்புத கோலம். இதைத் தவிர,  சோழர் காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட காசி விஸ்வநாதர் சந்நிதியும் உள்ளது. 

கல்வெட்டு கூறும் தகவல்கள்: பிற்கால பல்லவர்கள் காலத்திலேயே கோயில் வழிபாட்டிலிருந்து வந்திருக்கிறது.  பின்பு,  சோழ, விஜயநகர மன்னர்கள் காலத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இங்கு காணும் 13}ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று சுவஸ்தி ஸ்ரீஅருளிச் செயல் பரகேசரி உடையார்க்கு என தொடங்குகிறது.

திரு.ராமீசுவரமுடையார் கோயிலுக்கும்,  சித்திரமேழி விண்ணகர் பெருமாள் கோயிலுக்கும் வழிபாட்டுக்காக நிலம் தானம் அளித்த செய்திகளைத் தெரிவிக்கின்றன. ஆலய மகா மண்டபத்திலும், தூண்களிலும் அழகிய புடைப்புச் சிற்பங்கள் தென்படுகின்றன. 

மகா சுவாமிகள் வழிபட்டது: 1953 - 54}களில் காஞ்சி மகா சுவாமிகள் இவ்வூருக்கு விஜயம் செய்து நான்கு நாள்கள்தங்கி ஆலயத்தில் வழிபாடு பூஜைகளை மேற்கொண்டுள்ளார். 

அவ்வமயம் கோயில் மகாத்மியத்தை அனைவருக்கும் கூறியுள்ளார். கோயில் பிரதிஷ்டை செய்ய ஸ்ரீமடத்தில்லிருந்து சிவதுர்க்கை,  பிரம்மா போன்ற கற்திருமேனிகளைத் தருவித்துள்ளார்.  பின்னர் ஒருமுறை ஸ்ரீஜெயேந்திர சுவாமிகளும் விஜயம் செய்துள்ளார். 

கும்பாபிஷேக நிகழ்வுகள்:இவ்வாலய வளர்ச்சியில் கேப்டன் நாகராஜன் பெரும்பங்கு ஆற்றிவருகிறார். 1989,  2018}ஆம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.  இப்போது கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

தொடர்புக்கு 9944094877,  9443087554.

- எஸ்.வெங்கட்ராமன்

ADVERTISEMENT
ADVERTISEMENT