வெள்ளிமணி

அருவிக்கருகே ஆனந்த திருத்தலம்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில்,  தாமிரவருணி ஆற்றங்கரையில் அமையப் பெற்றுள்ளது பாபநாச உலகாம்பிகை சமேத பாபவிநாச நாதர் கோயில். 

பாபவிநாசநாதராக இறைவனும்,  உலகம்மையாக இறைவியும் இத்தலத்தில்அருளாட்சி செய்கின்றனர். தாமிரவருணி, வேத தீர்த்தம், பைரவ தீர்த்தம்,  கல்யாண தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள்உள்ளன.

அகத்தியருக்கு ஈசன் தன் திருமணக் காட்சியைக் காட்டியருளிய இத்தலத்தில், சித்திரை முதல் தேதியன்று இரவு 12 மணிக்கு இந்த நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுகிறது. 

இந்திரனின் பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இத்தல ஈசன் "பாவநாசநாதர்' என்றும், இத்தலம் "பாவநாசம்' என்றும் அழைக்கப்பெறுகிறது. இத்தலத்தை "இந்திரகீழ úக்ஷத்திரம்" என்றும் போற்றுகிறது தல புராணம்.

கருவறையில் பாவநாசநாதர் ருத்திராட்சம் அணிந்த மேனியராய் லிங்கத் திருவுருவில் காட்சித் தருகிறார். இவருக்கு வைராசர்,  பழமறைநாயகர், முக்களாமூர்த்தி என்ற பெயர்களும் உண்டு.அம்பாள் உலகம்மை சுவாமி சந்நிதிக்கு வடக்கில் அழகே உருவாக,  வலது கையில் மலர்ச் செண்டுடனும்,  இடது கையைத் தொங்கவிட்டும்,  நின்ற கோலத்தில்,  புன்னகை பொதிந்த திருவதனத்துடன் காட்சி தருகிறாள்.

தல விருட்சம் களாமரம், "முக்கிளாமரம்'  என்று சிறப்பிக்கப்படுகிறது. ரிக்,  யஜுர்,  சாமம்  ஆகிய மூன்று வேதங்களும் கிளாமரமாக மாறி இறைவனுக்கு நிழல் தந்தும், அதர்வண வேதம் ஆகாயமாக இருந்தும் ஈசனை வழிபட்டதாகவும் இத்தல புராணம் கூறுகிறது.

உலகம்மை சந்நிதி முன் உள்ள உரலில் பெண்கள் மஞ்சளை இடித்து அம்பாளுக்கு அபிஷேகத்துக்குக் கொடுக்கின்றனர். அபிஷேகிக்கப்படும் மஞ்சள் தீர்த்தத்தை சிறிது அருந்தினால்,  "திருமண, புத்திரப் பாக்கியங்கள் கிடைக்கும்;  பெண்கள் தீர்க்கச் சுமங்கலியாக இருப்பர்'  என்பது நம்பிக்கை.  இந்தத் தீர்த்தம் சகல ரோக நிவாரணியாகவும் இருக்கிறது.

இங்கு தினமும் உச்சிக்காலப் பூஜையின்போது,  சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பிரசாதங்களைத் தாமிரவருணி நதியில் மீன்களுக்குப் படைத்து பூஜைகள் செய்யப்படுகின்றன. இக்கோயிலில் எண்ணெய் சாதம் என்ற ஒரு வகை பிரசாதமும்,  அதற்கேற்ற துவையலும் நிவேதனம் செய்யப்படுகிறது.
கோயிலில் காட்சி அளிக்கும் நடராஜர் எப்போதும் புனுகு காப்பு சாத்தப்பட்டே காட்சியளிப்பதால் அவருக்கு "புனுகு சபாபதி' என்றே பெயர்.  அவர் அருகில்
சிவகாமசுந்தரி அழகாகக் காட்சித் தருகிறாள். சுவாமியின் கர்ப்பக் கிருகத்தைச் சுற்றிலும் அருமையான வேலைப்பாடமைந்த மிக நுண்மையான சிற்பங்கள் காணப்படுகிறன.

இந்தத் தலத்தில் அருளாட்சி செய்துவரும் உலகம்மை மிகுந்த வரப்பிரசாதி. அவளிடம் அன்புடன் பக்தி செய்தவர்களை அவள் எப்போதும் கைவிட்டதில்லை.  இதற்கு இங்கு வசித்து வந்த நமச்சிவாய கவிராயரே சாட்சி.  அவர் சிறு குழந்தையாய் இருக்கும்போது,  கோயில் திருவிழாவில் காணாமல் போக, அம்பிகை அக்குழந்தையை தன்னுடைய இடுப்பில் சுமந்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தாள்.  அவர் அறியாமல் வெற்றிலை எச்சிலைத் துப்பியபோது அது காற்றில் கலந்து அம்பிகையின் புடவையில்பட,  அதையும் ஒரு அணிகலனாக ஏற்றாள்அம்பிகை. 

கவிராயரின் வீட்டில் உள்ள பசுவை மேய்ப்பதற்கு ஒரு சிறுவனை ஏற்படுத்தித் தந்தாள்.  அவர் பொருள் இல்லாமல் கஷ்டப்பட்டபோது,  ஒரு செல்வந்தர் கனவில் தோன்றி,  நமச்சிவாயருக்கு பொருள் கொடுக்கக் கேட்டுக் கொண்டாள். 

கவிராயர் காசி யாத்திரையை மேற்கொண்டபோது,  அவருக்குத் துணையாக அவள் மகளாகவே வந்து தேவையான எல்லா உதவிகளையும் செய்தாள்.
ராமநாதபுர சேதுபதியின் ஏவலாளியின் வாயில்,  உலகம்மையை வேண்டிக் கொண்டு,  நமச்சிவாய கவிராயர்,  விபூதியையும் குங்குமத்தையும் இட, அவன் ஞான மிக்கவனாக மாறியதோடல்லாமல் பெரும் கவிஞனாக மாறினான்.


ஒருசமயம் அவர் வயிற்றுவலியால் துடிக்க,  வேறு வழியில்லாமல் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ள முனைகையில் அம்பிகை அவருக்கு நம்பிக்கையூட்டி தடுத்து  முக்தியையும்அருளினாள் என்பதும் இத்தல வரலாறு.
கோயிலுக்கு அருகில் உள்ளது அகத்தியர் அருவி.  அதற்கும் மேல் உள்ளது கல்யாணதீர்த்தம். இங்கு அகத்தியர் கயிலையில்  ஈசனுக்கும் ஈஸ்வரிக்கும் நடைபெற்ற திருமணக் காட்சியை கண்ணுற்றார்.  இங்கு நீராடினால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

-ரஞ்சனா பாலசுப்பிரமணியன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயோள்..!

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT