வெள்ளிமணி

புகலூர் மேவிய புண்ணியன்!

25th Nov 2022 03:13 PM | -எஸ்.வெங்கட்ராமன்

ADVERTISEMENT

நன்னிலம் - நாகப்பட்டினம் சாலையில் உள்ளது திருப்புகலூர்.  முடிகொண்டான் ஆற்றின் வடகரை, திருமலைராஜன் ஆற்றுக்கு தென்கரை இவற்றுக்கு இடையில் இருக்கிறது. இத்தலத்தில் சுவாமி அக்னீபுரீஸ்வரர் கருந்தாழ்குழலியுடன் சுயம்பு மூர்த்தியாகவும், மனோன்மணி அம்பிகையுடன் சுயம்பு மூர்த்தியாகவும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.

பெயர்க் காரணம்: உயிர்கள் இறைவன் திருவடிகளைப் புகலாக அடைந்த ஊர் என்பதால் "திருப்புகலூர்' என்று அழைக்கப் பெறுகிறது.  வாதாபி, வில்வலன் என்ற இரு அசுரர்களுக்கும் அஞ்சி ஓடிவந்து தேவர்கள், அசுரர்கள், அகத்தியரால் அழிக்கப்படும் வரையில் இத்தலத்தில் அடைக்கலமாக வந்திருந்தனர் (புகல்- அடைக்கலம்). ஆதலால், இப்பெயர் உண்டாயிற்று.  வடமொழியில் சாரண்யபுரம் என வழங்குவர். தல விருட்சத்தால் அமைந்த பெயர் புன்னாக வனம். இரக்தன் என்னும் அசுரன் இத்தலத்தில் நெருங்காலம் தவமிருந்து சிவ வழிபாடு செய்தமையால், அவன் விரும்பியபடி இரக்தாரண்யம் என வழங்கப்படுகிறது.

தலப் பெருமை: ஒரு சமயம் தகாத உணவை உண்ட பாவம் அக்னி பகவானை தொற்றியது. இத்தலத்தில் தவமிருந்து இறை அருளால் நீங்கப் பெற்றார். அதனால் இத்தலத்துக்கு "அக்னீஸ்வரர்' என பெயர் உண்டானது.

காசிபர் முதலியோர் தத்தம் பாபகன்மங்கள் தொலைய ஸ்தாபித்து வழிபட்ட லிங்கங்கள் அவர்களின் பெயர்களாலே வழிபடப்படுகிறது.  

ADVERTISEMENT

"என் கடன் பணி செய்து கிடப்பதே' என அருளிய அப்பர் ஒரு சித்திரை சதயத்தில் இறைவனோடு ஐக்கியமானது இத்தலத்தில்தான்.  அதன்பொருட்டு இத்தலம் முக்தி சேஷத்திரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.  சுந்தரருக்கு இறைவன் செங்கற்களைப் பொன்னாக மாற்றித் தந்தருளிய தலம் இது. நளச் சக்கரவர்த்திக்கு இங்கு சனி பகவானின் அனுக்கிரகம் கிடைத்து, திருநள்ளாரில் விடுதலையாயிற்று என்பர்.

தீர்த்தச் சிறப்பு: 
கோயிலைச் சுற்றியுள்ள அகழ் பாணதீர்த்தமானது அக்னி பகவான் நீராடியதால், அக்னி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. தீர்த்தமே திகழும் பொய்கைத் திருப்புகலூர் என்று அப்பர், ஞானசம்பந்தர் ஆகியோர் போற்றுகின்றனர்.

இறைமூர்த்திகளின் சிறப்பு:
அக்னீசர் அருளைப் பெற்று அக்னிதேவன் ஏழு தீக்கொழுந்து எரிவது போன்ற தலையுடன், வக்கிர தந்தமும், ஏழு கைகளும் மூன்று கால்களும் நான்கு கொம்புகளும் அமையப் பெற்று சந்நிதி கொண்டுள்ளார். 

வாதாபி கணபதி,  பூதேஸ்வரர், பவிழ்யேஸ்வரர், முனிவர்கள் பிரதிஷ்டை  செய்த லிங்கங்கள், சிவகாம சுந்தரியுடன் நடராஜர், திரிபுர சம்ஹார மூர்த்தி, கல்யாண சுந்தரர், அப்பர்,  பாணாசுரன், ஐம்பொன் திருமேனிகள் தரிசிக்க வேண்டிய அம்சங்கள். இத்தலத்தில் அவதரித்த முருக நாயனாரின் வழிபாடு தெய்வமாக வர்த்தமானீச்சுரம் விளங்குகிறது. பாணம் சற்று சாய்ந்த நிலையில் இருப்பதால், புகலூர் இறைவனுக்கு கோணற்பிரான் என்ற பெயரும் உண்டு. தேவார மூவர் பாடல் பெற்ற சிறப்புடையது. 

முதலாம் இராசஇராசன் காலத்து கல்வெட்டுகள் கோயிலில் காணப்படுகின்றன. கி.பி.  ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பே வழிபடப் பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. சிற்ப, சித்திர, சுதை வேலைப்பாடுகளுடன் கலைக்கோயிலாகத் திகழ்கிறது.

விழா சிறப்பும், வழிபாட்டு பலன்களும்...:
கோயிலில் இறைவிக்கு நாள்தோறும் மாலை வேளைகளில் வெள்ளைப் பட்டாடை கட்டி அலங்கரிப்பது சிறப்பு.  சித்திரை சதய விழா, வைகாசி உத்ஸவம், தைப்பூச விழா ஆகியவை சிறப்பாக நடைபெறுகின்றன.

வாஸ்து தலமாக உள்ள இந்தக் கோயிலில் புதிய வீடு கட்டுபவர்கள் செங்கல் பூஜை செய்து மனை முகூர்த்தம் செய்வது உத்தமமானது. தல விருட்சத்தின் அருகே செய்யும் ஜபங்கள் சித்தியாகி, பல மடங்கு பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.  திருமணத் தடை அகலவும், சுகப் பிரசவம் ஏற்படவும் இங்கு வழிபடலாம். அம்பாள் சந்நிதியில் மாலை சாற்றுதல், வஸ்திரம் அணிவித்தல், அர்ச்சனை வழிபாடு போன்றவை பரிகாரங்களாகப் பக்தர்கள் மேற்கொள்கின்றனர்.

திருப்பணி:
2003-ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்துக்குப் பின்னர், தற்போது திருப்பணிகள் தொடங்கப்பட்டு, வேளாக்குறிச்சி ஆதினகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிய பரமாசாரிய சுவாமிகள் திருவுளப் பாங்கின் வண்ணம் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு- 04366-292839, 94431 13025.

ADVERTISEMENT
ADVERTISEMENT