வெள்ளிமணி

பொருநை போற்றுதும்! - 195

டாக்டா் சுதா சேஷய்யன்

1767-இல் கேம்ப்பெல் வாசுதேவநல்லூர் கோட்டையை முற்றுகையிட்டார்.  ஒரு வார காலத்துக்கு முற்றுகை;  பீரங்கிகளாலும் குண்டுகளாலும் துளைக்கப்பட்ட நிலையிலும், கோட்டையின் பாதுகாப்பும் உள்ளிருந்தவர்களின் தளராத எதிர்ப்பும் கேம்ப்பெல்லை அசர வைத்தது. 

சாவைப் பார்த்துக் கவலைப்படாத துணிவு வியக்கச் செய்தது.  பீரங்கிகளின் இடைவிடாத துளைப்புகளுக் கிடையிலும், கோட்டைச் சுவர்களிலும் பிற இடங்களிலும் ஏற்பட்ட ஓட்டைகளை,  பனை மரங்களைக் கொண்டும், வைக்கோலைக் கொண்டும் அடைத்துக் காபந்து செய்த விதம்,  நீங்காத மதிப்பைத் தோற்றுவித்தது.  அழிவும் அவசரமும் கழுத்தைக் கட்டிக் கொண்டு நெருக்கித் தொங்கிய நேரத்திலும், இப்படியொரு வீரமா!  இத்தகைய பதற்றமின்மையா!! 

திடீரென்று கொட்டிய பெருமழை நேரத்தில், கோட்டையின் மூன்று பகுதிகள் வழியாக வெகுவேகமாக வெளியேறி,அருகிருந்த காடுகளுக்குள் ஒளிந்து கொண்டனராம். அளவில் சிறியதாக இருந்தாலும், நெல்லைப் பகுதிகளில் தாம் படையெடுத்த கோட்டைகளிலேயே,  ஆகச் சிறந்த வலிமை கொண்டதாக வாசுதேவநல்லூர் கோட்டையையே கேம்ப்பெல் குறிக்கிறார்.

மலையடிவாரக் காடு - இதுவே கோட்டையின் முதல் பாதுகாப்பு.

அடுத்தக்கட்டப் பாதுகாப்பு -கருவேல முள்களை இடைகொடுத்துப் பின்னப்பட்ட வேலி.

வாசுதேவநல்லூரின் மிகப் பெரிய ஈர்ப்பு,  அருள்மிகு  சிந்தாமணிநாதர் திருக்கோயில்.  சற்றே விநோதமான பெயர்.  பிற ஊர்களில் உள்ளதுபோல்,  இவர் சிவலிங்கத் திருமேனிக்காரர் இல்லை; அம்மையும் ஐயனுமாகக் காட்சி தரும் அர்த்தநாரீச்வரர். இவர் இங்கு எழுந்தருளிய கதைதான் என்ன?

பிருங்கி என்றொரு முனிவர்.  சிவ பெருமானை நிறைந்த பக்தியோடு வழிபட்டவர்.  ஆனாலும்,அம்பிகையை வழிபட மாட்டேன் என்னும் பாரபட்சம் கொண்டவர். திருக்கைலைக்குச் சென்ற பிருங்கி, ஐயனை மட்டும் வழிபட்டார். சிவனாரைச் சுற்றிலும் வலம் வருவதற்குயத்தனிக்கிறார் என்பதைக் கண்ட அம்பிகை, வேண்டுமென்றே இடம் கொடுக்காமல், ஐயனோடு ஒட்டி நின்றாள். 

பிருங்கியா விடுவார்?  வண்டு வடிவம் எடுத்தார்; அம்பிகைக்கும் ஐயனுக்கும் இடையில் புகுந்து, ஐயனை மட்டும் வலம் வந்தார்.  அம்பிகைக்கு ஆத்திரமோ ஆத்திரம்.  கயிலையிலிருந்து புறப்பட்டவள்,  பூலோகம் வந்தாள்.  

கோபத்தைத் தணித்துக் கொள்ளவும், பிருங்கி போன்றோருக்குப் பாடம் கற்பிக்கவும் முடிவு செய்து, தவம் கொண்டாள்.  சிந்தை மரங்கள் (புளிய மரங்கள்)  நிறைந்த காட்டில் சிவனாரை எண்ணித் தவமியற்ற, எழில் கோலத்தில் காட்சி கொடுத்த சிவபெருமான், அம்பிகையைத் தமது இடபாகத்தில் ஏற்றுக் கொண்டார்.  வாமபாக நாயகியோடு மாதொரு பாதியனாகத் தோற்றம் கொண்டார். சிற்றாற்றங்கரை அடைந்த பிருங்கியும், தமது தவறை உணர்ந்து, அர்த்தநாரீச்வரரை வழிபட்டார். 

சிந்தாமணிநாதர் என்னும் திருநாமத்துக்குப் பலவிதமாக விளக்கம் கூறலாம். அம்பாளும் ஐயனும் உறைகிற இல்லத்துக்குச் சிந்தாமணி கிருஹம் என்றே பெயர்.  சிந்தாமணிக் கல் என்றொன்று இருந்ததாகப் பண்டைய இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. 

இந்தக் கல்லின் எதிரில் நின்று வேண்டிக்கொண்டால், வேண்டியதையெல்லாம் இது கொடுத்துவிடுமாம். அன்பர்கள் கேட்பதையெல்லாம் நிறைவேற்றுபவர்கள் என்பதால், ஐயனுக்கும் அம்மைக்குமே "சிந்தாமணி' என்னும் திருநாமங்கள் உண்டு.  அன்பர்களுக்கு அருள் புகலிடம் அளிப்பதால், இவர்கள் உறையும் இடமும் சிந்தாமணி கிருஹம் என்றே அழைக்கப்படுகிறது. 

சிந்தைக் காட்டில் தோன்றினார் என்றால், நம்முடைய சிந்தைக் (சித்தம்) காட்டில் தோன்றி,  அம்மையும் ஐயனும் அருள்கிறார்கள் என்பதே ஆழ்பொருள். அருள்மிகு சிந்தாமணிநாதராகச் சிவனாரும், அருள்மிகு இடபாகவல்லியாகப் பார்வதியும் வாசுதேவநல்லூரில் காட்சி தருகிறார்கள். கிழக்குப் பார்த்த கருவறையில், இருவரும் இணைந்த சிலாரூபம்.  ரூபத்தின் வலது பக்கத்தில், சிரசில் கங்காதேவியும் பிறைச்சந்திரனும், செவியில் தோடு,  கரங்களில் கபாலமும் சூலமும்,  கால்களில் தண்டையும் சதங்கையுமான ஆண் வடிவம். இடது பக்கத்தில்,  பின்னல் ஜடை, தாடங்கம், பாசஅங்குசப் பூச்செண்டு, கொலுசு என்று பெண்மைக் கோலம். நான்குத் திருக்கரங்கள் கொண்ட வடிவத்துக்கு அலங்காரம் செய்யும்போது, வலது பக்கத்துக்கு வேட்டியும் இடது பக்கத்துக்குச் சேலையும் அணிவிக்கிறார்கள். இக்கோயிலின் தலமரம், புளிய மரமேதான்!

ஆனித் திருவிழாவில்,  பிருங்கியின் பாரபட்சமும் மன்னிப்புக் கோரலும் நடித்துக் காட்டப்படும். பிற சிவன் கோயில்களில் ஐப்பசி அன்னாபிஷேகம் என்றால், இங்கோ சித்திரையில் அன்னாபிஷேகம். 

2021-ஆம் ஆண்டில், 2000 ஆண்டு காலத் தொன்மை வாய்ந்த பொருள்கள் சில, இங்கு பூமிக்கடியில் கிட்டின. வாசுதேவநல்லூர்க் கோட்டைக்கு அருகே முதுமக்கள் தாழிகளும் கிட்டியதாகவே பிரிட்டிஷ் பதிவுகள் செப்புகின்றன. 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT