வெள்ளிமணி

கடல் மல்லை கரும்பு!

20th May 2022 03:52 AM | எஸ்.வெங்கட்ராமன்

ADVERTISEMENT

 

ஆலயங்களில் பெருமாளை சயன கோலத்தில் திருவடியில் திருமகள் அமர்ந்திருக்க சாதாரணமாக சேவித்திருப்போம். ஆனால் ஒரு திருத்தலத்தில் வித்தியாசமாக முனிவர் ஒருவர் கை கூப்பி திருவடியில் அமர்ந்திருக்க பெருமாள் தரிசனம் தரும் அழகை திருகடல் மல்லை என்ற புராணப் பெயருடன் திகழும் மாமல்லபுரம் ஸ்தல சயனப் பெருமாள் கோயிலில் அபூர்வமாக பார்க்கலாம்.

பல்லவ வேந்தர்களின் கலைக்களஞ்சியம் என்று போற்றப்படும் மாமல்லபுரம் சென்னைக்கு தெற்கே 58 கி.மீ. தூரத்தில் கடற்கரை அருகிலேயே உள்ளது. விஜய நகர மன்னர்களின் வரலாற்றிலும் இவ்வூர் பேசப்படுகிறது. தமிழ் இலக்கியங்களில் ஏராளமான குறிப்புகள் காணப்படுகின்றன.

ராமேசுவரத்துக்கு இணையான அதே சாந்நித்யத்துடன் இத்தலம் திகழ்வதால் "அர்த்த சேது' என்றும் அழைக்கப்படுகிறது. 108 வைணவ திவ்ய தேச தலங்களுள் ஒன்று. முதலாழ்வார்களிலே இரண்டாமவர் என்று குறிப்பிடப்படும் பூதத்தாழ்வாரின் அவதாரத்தலமாகும்.

ADVERTISEMENT

தல வரலாறு:  புண்டரீக முனிவர் என்னும் தவசீலர் தாமரை மலர்களைக் கொண்டு பாற்கடலில் பள்ளிகொண்டருளும் பரந்தாமனை அதே கோலத்தில் வழிபட நினைத்தார். அதற்காக கூடை நிறைய கமலங்களை (தாமரை மலர்கள்) பறித்துக் கொண்டு செல்லுகையில் மல்லையில் (மாமல்லபுரம்) உள்ள உவர் நீர்கடலே முனிவரின் பக்திக் கண்களுக்கு பாற்கடலாகத் தெரிந்தது. சமுத்திரம் வழி அடைத்துக் கொண்டிருந்ததைக் கண்ட முனிவர் அதீத பக்தி மேலீட்டால் சமுத்திரத்திலுள்ள நீரை கைகளால் இறைத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டு அவ்வாறே செய்யலானார். முனிவரின் அறியாமையையும், பக்தியையும் மெச்சிய எம்பெருமான், அவர்படும் துயர் நீக்க திருவுள்ளம் கொண்டார். ஒரு வயதான முனிவர் வேடம் பூண்டு. முனிவரை அணுகி தனக்கு உணவு கொடுக்குமாறு கேட்டார். முனிவரும் அவர் கொண்டு வந்த மலர்க்கூடையை முதியவரிடம் கொடுத்துவிட்டு ஆகாரம் கொண்டு வரச் சென்றார். அவரை மேலும் சோதிக்க விரும்பாத திருமால் அவ்விடத்திலேயே தாமரை மலர்களை தனது திருவடியில் இருத்திக் கொண்டு தரையிலேயே சயனக் கோலம் கொண்டார். திரும்பி வந்த முனிவர் இத்திருக்காட்சியைக் கண்டு பேரானந்தம் அடைந்து, எம்பெருமானிடம் அவர் திருப்பாதத்தருகில் அமரும் பாக்கியத்தை அருளும்படி வேண்டினார். திருமாலும் அந்த வரத்தை அருளினார். பாகவத புராணத்தில் புண்டரீக மகரிஷியின் வரலாற்றை சொல்லிவரும் போது இவ்வரலாறு இணைந்து வருகிறது.

கோயில் சிறப்புகள்: பூமிலேயே படுத்துக் கொண்டதால் ஸ்தல சயனப் பெருமாள் (ஸ்தலம் - பூமி) என்ற திருநாமத்துடன் மூலவர் அழைக்கப்படுகிறார். உத்ஸவர் உலகுய்ய நின்றான்' என்ற திருநாமத்துடன் கையில் தாமரை மொக்குடன் காண்பதற்கரிய கோலத்தில் திகழ்கின்றார். தாயாருக்கு "நிலமங்கைத் தாயார்' என்று திருநாமம் புன்னை மரம் தல விருட்சமாகவும், "புண்டரீக புஷ்கரணி' என்ற பெயரில் தல தீர்த்தமும் அமைந்துள்ளது. மாசிமக தீர்த்தவாரி சிறப்பாக நடைபெறும் திருத்தலங்களில் இதுவும் ஒன்று.

மங்களாசாசனம்:  பூதத்தாழ்வார்,  திருமங்கையாழ்வார் தலசயனப் பெருமாளை தங்கள் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்கள். ஆழ்வார் பாசுரங்களில் "கடல் மல்லைக் கரும்பு' என்று இத்தலபெருமாள் குறிப்பிடப்படுகிறார். பிள்ளைப் பெருமாளய்யங்கார். தனது நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் இத்தல பெருமானையும் பாடியுள்ளார். திருமங்கை ஆழ்வார் திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாளை இத்தலத்தில் வைத்து மங்களாசாசனம் செய்துள்ளார்.

தரிசனபலன்: இத்தல பெருமாளை தரிசித்தால் திருப்பாற்கடல் வைகுண்ட நாதனையே தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமணத்தடைகள் நீக்கும் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. 

திருப்பணித் தகவல்கள்:  இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற மகா சம்ப்ரோஷணத்துக்குப் பிறகு, தற்போது சுமார் ரூ.1 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர்புக்கு: 044 - 27443245 , 9840408650

ADVERTISEMENT
ADVERTISEMENT