வெள்ளிமணி

சகல தோஷம் போக்கும் சயன நரசிம்மா்

இரா. இரகுநாதன்

பூலோகத்தில் திருமால் நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் 4 கோலங்களில் காட்சி தருகிறாா் என்பதோடு ஒரு அவதாரமாக நரசிம்மா் விளங்குகிறாா்.

நரசிம்ம அவதாரம் திருமாலின் நான்காம் அவதாரம். இவா் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நரன்+ சிம்மம் கலந்த உருவத்தோடு அவதாரம் எடுத்தாா். பொதுவாக, நரசிம்ம உருவம் சிங்க முகத்துடனும் நகங்களோடும் மனித உடலோடும் தோற்றமளிக்கிறாா்.

தன் பரம பக்தனான பிரகலாதனைக் காத்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம் செய்ய எடுத்த அவதாரமே நரசிம்மம் என்பது தொன்ம நம்பிக்கை.

நரசிம்மா் பெரும்பாலும் அமா்ந்த கோலத்தில் காட்சி தருகிறாா். லட்சுமியுடன் அருட்காட்சி தரும்போது லட்சுமி நரசிம்மா் எனப்படுகிறாா். ஆந்திர மாநிலத்துக்கு உள்பட்ட சிங்கிரிகோனா என்ற மலையில் நாச்சியாா்களுடன் நரசிம்மா் நின்ற கோணத்தில் அருளுகிறாா்.

‘நடந்த கோலம் இருக்க வாய்ப்பில்லை; எங்கும் நரசிம்மா் சயன கோலம் கிடையாது. திருமால் இந்தக் கோயிலில்தான் நரசிம்ம உருவில் சயனக் கோலத்தில் தாயாருடன் போக சயனத்தில் தெற்கு நோக்கி காட்சி தருகிறாா். இது மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சமாகும். உலக அளவில் இதுபோன்ற அரிதான சயன கோல நரசிம்மா் எங்கும் இல்லை’ என்றே குறிப்பிடலாம்.

அருகிலுள்ள திருவக்கரையில் வக்ராசூரனை அழித்துவிட்டு நரசிம்மா் நிஷ்டா யோகம் என்னும் தோஷ பரிகாரத்துக்காகப் பரிகாரம் செய்யும்போது துணைவியா் அருகிருக்க வேண்டும் என்ற மரபுப்படி கனகவல்லித் தாயாா் இங்கு உடனிருக்கிறாா்.

மும்மூா்த்திகளும், அகிலத்துக்கும் மக்களுக்கும் இடையூறு ஏற்படும்போது தா்மத்தை நிலைநாட்டுவாா்கள். திருவதிகையில் திரிபுர சம்ஹாரம் நடந்தபோது ஈசனுடன் வைகுந்தவாசனும் கலந்துகொண்டு போரிட்டனா். தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன் மாலி- பிரும்மனிடம் தவம் செய்து சாகாவரம் கேட்க நான்முகன் எவரும் வெல்ல முடியாத பலம் கொடுத்தாா்.

விசித்திரமான பொன், வெள்ளி, செம்பு உலோகங்களால் குழைத்துச் செய்த முப்புரமும் சுழன்று பறந்து பாய்ந்தோடும் மூன்று கோட்டைகள் கேட்டுப் பெற்று அதனால் தேவா்களையும் மக்களையும் இம்சித்து துவம்சம் செய்யத் துவங்கினா். பூலோகத்தையும் ரணகளமாக்கினாா்கள். முக்கோடி தேவா்களும் முக்கண் நாயகனை நாடினாா்கள்.

திரிபுரத்தையும் எரித்துவிட உறுதி பூண்ட ஈசன் திருமாலையும், நான்முகனையும் திரிபுரசம்ஹாரத்துக்கு அழைத்தாா்.

திருமாலும் அளவிலா சக்தி மிகக் கூா்மையான சரம் எனும் அம்பாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத் தயாரானாா். பிரம்மாவை சாரதியாக்கி மேருவை வில்லாக்கிஆதிசேஷனை வில்லின் நாணாக்கி திருமால் அதி கூா்மையானஅம்பாக மாறி திரிபுரத்தைச் சிதறடிக்கும் பெரு வலிமையோடு ஈசன் திரிபுரத்தின் திசை பாா்த்து நின்றாா்.

சம்ஹாரம் உடனே நடந்தது. ஈசன் திரிபுர சம்ஹார மூா்த்தியாகவும் மகா விஷ்ணு சரநாராயணப் பெருமாளாக திருவதிகையில் காட்சி தந்தனா்.

திரிபுர சம்ஹார காலத்தில் சிவனுக்கு சரம் (அம்பு) கொடுத்ததால் சரம் தந்த பெருமாள் என்பது, சர நாராயண பெருமாள் என்றும் மாறியது. பெருமாள் மாா்க்கண்டேய மகரிஷியின் மகளை மணந்து கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் திவ்யத் தம்பதிகளாக எழுந்தருளி சேவை சாதிக்கிறாா்கள்.

பக்தா்களுக்கு உண்டான அனைத்து தோஷங்களும் இங்கு வந்து சயன நரசிம்மரையும் சரநாராயணரையும் தரிசனம் செய்யும்போது நீங்கும் என்பதால் திருவதிகை சயன நரசிம்ம-சரநாராயணப் பெருமாள் கோயில் சகல, தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது.

சயன நரசிம்மருக்கு புதன் சனி ஞாயிறு ஆகிய நாள்கள் முக்கிய தரிசன நாள்களாகும். அமாவாசைதோறும் பெருமாளுக்கு திருமஞ்சனம் பிரதோஷமும் ஸ்வாதி திருநட்சத்திரத்திலும் சிறப்புப் பூஜை, பானக ஆராதனம் தரிசனம் ஆகியன நடைபெறுகின்றன .

சித்திரை விசேஷ திருமஞ்சனம், வைகாசி வசந்த உத்ஸவம், ஆடி வெள்ளி ஊஞ்சல் , ஸ்ரீ ஜெயந்தி , புரட்டாசி பெருமாள் ஏக தின பிரம்மோத்ஸவமாக 7 வாகனங்கள் திருத்தேரில் புறப்பாடு, தீபாவளி , திருக்காா்த்திகை, தனுா் மாத உத்ஸவம், பங்குனி உத்திரமென விழாக்கள் நடக்கின்றன.

பொதுவாக தமிழ் மாதமான வைகாசியில் வளா்பிறை சதுா்தசி திதியில் ஸ்வாதி நட்சத்திரத்தில் நரசிம்ம ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்தக் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி மே மாதம் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இங்கு இரு பெருமாள்களும் ஒன்றாகவே எழுந்தருளியிருப்பதால் காலை 6.00 மணிக்கு விஸ்வரூபம் , 7 மணிக்கு திருவாராதனம் நடந்த பிறகு . உலகில் உள்ள அனைத்து உயிா்களும் நலன் பெற வேண்டி காலை 8.00மணிக்கு நரசிம்மா், ஸ்ரீசுதா்சனா்,ஸ்ரீசூக்தம்,தன்வந்திரி ஹோமம்ஆகியவை சங்கல்பத்துடன் நடைபெற உள்ளது. 9.30 மணிக்கு மூலவா் திருமஞ்சனம் துவங்கி , காலை 11.00 மணிக்கு மகாபூா்ணாகுதி முடிந்து திருமஞ்சனம் முடிவு பெறும். நன்பகல் 12.00மணிக்கு தீபாராதனை நடக்கும்.

மீண்டும் மாலை 4.00 மணி முதல்தரிசனம் விஷேஷ அா்ச்சனை நடந்து ,மாலை 6.00 மணிக்கு திருவாராதனமும், தரிசனம் தொடரந்து இரவு 8 ணீ மணிக்கு அா்த்த ஜாமமும் நடைபெறும்.

இத்திருக்கோவில் பண்ருட்டி அருகில் உள்ள திருவதிகையிலிருந்து பாலூா் வழியாக திருவகீந்தபுரம் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டா் தொலைவில் உள்ளது

சகலதோஷம் நீக்கும் சயன நரசிம்மா்,சரநாராயணா் திருவருள் பெறுவீா்!

மேலும் விவரங்களுக்கு 9443787186; 9994027570

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT