வெள்ளிமணி

திருமண வரம் அளிக்கும் திருத்துருத்தி

6th May 2022 05:02 PM

ADVERTISEMENT

 

காவிரியின் கருணையால் செழித்தோங்கும் மயிலாடுதுறைக்கு அருகில் அமைந்துள்ள குத்தாலம் என்ற திருத்தலத்தின் நடுவில் அமைந்துள்ளது ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி உடனாகிய உத்தவேதீஸ்வர சுவாமி கோயில். 

அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடல் பெற்றது. இங்கு முருகரை அருணகிரிநாதரும் திருப்புகழில் புகழ்ந்து பாடியுள்ளார். ஒருமுறை ஏற்பட்ட சிறு விவாதத்தால்,  ஈசனின் ஆணையை ஏற்ற பார்வதி தேவி பசுவாக மாற நேர்ந்தது. முக்காலமும் உணர்ந்த அவள் பசுவாக மாறி,  பல்வேறு தலங்களில் வழிபட்டு வரும்போது, திருவாவடுதுறை வந்து அரசமரத்தின் கீழ் இருக்கும் ஈசனை வழிபட, தன் பசு உரு நீங்கப் பெற்றாள்.

அந்தச் சமயம் பரத மகரிஷி தன் மனைவி சுபத்திரையுடன் அம்பிகையை மகளாகப் பெற வேண்டி நீண்ட தவம் செய்தார். அதன்படியே அம்பிகை மகளாகப் பிறந்து ஈசனிடம் நீங்கா பக்தியுடன் வளர்ந்து வந்தாள். இறைவன் தன்னை மணக்க வேண்டி பதினாறு திங்கள்கிழமைகள் தொடர்ந்து விரதமிருந்து,  பூஜை செய்தாள். முடிவில் இறைவன் அங்கு லிங்க வடிவில் தோன்றி அம்பிகையின் கரம்பற்றினார். 

ADVERTISEMENT

அம்பிகை நாணம் கொண்டு, சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி,  திருமணம் முடிக்க வேண்டும் என்று வேண்டினாள். இதன்படியே நடக்கும் என்று ஈசன் கூறி, தன்னுலகு சென்றார்.
நந்தி தேவர் ஈசனின் சார்பில் பெண் கேட்டு தூது செல்ல,  முனி தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட நாளன்று அதிகாலையில் தன் ஆண்டிக் கோலம் களைந்து, பல்வேறு ஆபரணங்களையும் பட்டு பீதாம்பரம் உடுத்திய சக்கரவர்த்தித் திருமகனாக எல்லா தேவர்களும் புடைசூழ, பல்வேறு மங்கல வாத்தியங்கள் முழங்க, வேத கோஷம் ஒலிக்க, பூவுலகம் வந்து, காவிரியின் கரையில் அமைந்துள்ள திருத்துருத்தியை வந்தடைந்தார்.

கயிலையிருந்து புறப்படும்போது, அங்கு தவம் செய்து கொண்டிருந்த உத்தால விருட்சம், ஈசனுக்குக் குடையாகப் பின் தொடர்ந்தது. அம்மரமே இத்தலத்தின் தலவிருட்சமாக விளங்குகிறது. பின்னர்,  ஈசன் அக்னி சாட்சியாக அம்பிகையின் திருக்கழுத்தில் மங்கலநாணை அணிவித்தார். எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு அருள்புரிந்த ஈசனிடம் முனிவரும் அவர் மனைவியும், திருமணம் கண்ட மணமக்கள் என்றும் இத்திருக்கோலத்துடன் இத்தலத்திலேயே எழுந்தருளி அருள்பாலிக்க வேண்டும் என்று பிரார்த்தினர்.  

இதற்கு ஈசனும் மகிழ்வுடன் இசைந்தார்.  பின்னர்,  அம்பிகையுடனும் தன் பரிவாரங்களுடனும் திருக்கயிலாயம் திரும்பினார். இத்தலத்தை தரிசித்தால் திருமணபாக்கியம்  கிடைக்கும் என்பது ஐதீகம். 

இந்தக் கோயில் 62 ஆண்டுகளுக்குப் பிறகு புணருத்தாரணம் செய்யப்பட்டு, திருக்கயிலாயப் பரம்பரைத் தருமையாதீனம் 27}ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் மே 8 (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணியிலிருந்து 8.30}க்குள் திருக்குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.

- அபிராமி மைந்தன் 

ADVERTISEMENT
ADVERTISEMENT