வெள்ளிமணி

பொருநை போற்றுதும் - 193

6th May 2022 05:04 PM

ADVERTISEMENT

பழைய காலத்து நெல்லை ஜில்லாவின் வட மேற்குப் பகுதியில், சங்கரநயினார் கோயிலும், பிற ஊர்களும் வெகு பிரபலம்.  நெற்கட்டுஞ்செவ்வலின் பூலித்தேவனும்,சொக்கம்பட்டி, ஊற்றுமலை, தலைவன்கோட்டை, சிவகிரி, சேத்தூர் ஜமீன்களும் கட்டியாண்ட பகுதி.

சங்கரநயினார் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனாரைக் குறித்து சுவாரசியமான தலப் புராணம் உண்டு. கொற்கை பாண்டியனான உக்ரபாண்டியர்,ஒவ்வொரு நாளும் மதுரைக்குச் சென்று சொக்கேசரை வழிபடுவது வழக்கம். இவ்வாறு செல்கையில்,  குறிப்பிட்டதொரு நாளில், பெருங்கோட்டூர் பகுதியை அடைந்தவுடன், அரசர் பயணித்துக் கொண்டிருந்த அம்பாரி யானை நகர மறுத்தது.  தடங்கலை எண்ணி அரசர் கலங்கியபோது, அரசரின் அகக்கன் முன்னர் காட்சி கொடுத்த ஐயனார், இனி நாள்தோறும் மதுரை செல்ல வேண்டாமென்று அருளினார். 

இதே சமயம், அருகிலுள்ள கரையான் புற்றுப் பகுதியில், பாம்பொன்று படமெடுத்து நிற்பதாகவும், நகர மறுப்பதாகவும் அரச பரிவாரங்களில் ஒருவர் வந்து தெரிவிக்க, ஆவல் உந்த அவ்விடம் சென்று அரசர் நோக்கினார். பாம்பின் படத்திற்கு அடியில் சிவலிங்கம் ஒன்று காணப்பட்டது.  உக்ரபாண்டியர் இங்கேயே கோயில் எழுப்பியதாக வரலாறு. சிவலிங்கத்துக்கு சங்கர நயினார் என்னும் திருநாமம் ஏற்பட்டது.  நயினார் என்னும் சொல், தலைவர், அரசர் என்னும் பொருள்களைத் தரும். இறைவனே தலைவர் என்பதே உள்ளுறைத் தகவல். காலப்போக்கில் இங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றும் செவிவழிக் கதையாக வழங்கப்படுகிறது.

ஏற்கெனவே இது பாம்புகள் நிறைந்த பகுதி என்பது, ஊரின் தோற்ற வரலாற்றிலிருந்தே தெரிகிறதல்லவா! சங்கன், பதுமன் என்று இரண்டு நாகர்கள். இவர்களுள் பெரிய வாக்குவாதம். சிவன் பெரியவரா விஷ்ணு பெரியவரா என்று வாக்குவாதம். இருவருக்கும் உண்மையைப் புரிய வைப்பதற்காக, ஒரு பக்கத்தில் சிவனாகவும், ஒரு பக்கத்தில் திருமாலாகவும் கடவுள் காட்சி கொடுத்தாராம்.

ADVERTISEMENT

சங்கரனாகவும் நாராயணனாகவும் சேவை சாதித்ததால், சங்கரநாராயணர் ஆனார். சங்கரநாராயணர் என்னும் பெருமை இருப்பினும், இத்திருத்தலத்திற்குப் பெருமை சேர்ப்பவள் அருள்மிகு அன்னை கோமதி. சங்கரரையும் பெருமாளையும் ஒருசேர தரிசிப்பதற்காக இவள் மேற்கொண்ட தவமே, ஆடித் தபசு. எந்த வகையான நோயாக இருந்தாலும், ஆடித் தபசு காலத்தில் அம்மனை தரிசித்தால் நிவர்த்தியாகிவிடும் என்பது நம்பிக்கை. மாவிளக்கு இடுவதுபோன்றதொரு வழக்கமும் உண்டு.

வெற்றிலையில் அல்லது வேறேதேனும் இலையிலும்கூட அரிசி மாவைக் குழைத்து, எந்தப் பகுதியில் உபாதையோ நோயோ வலியோ, அந்த உடல் பகுதியின் மீது வைத்து, குழித்துத் திரியிட்டு விளக்குப் போடுவார்கள். விளக்கின் நெய் தீரும்போது,  நோயும் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம். உடல் பாகங்களின் உருச் செய்து போடுவதும் உண்டு. இந்தத் தலத்தின் மண்ணைச் சிறிதளவு எடுத்துக் கொண்டுபோய் வீட்டில் வைத்தால், நோயும் துன்பமும் அணுகா. இந்தப் பகுதி பஞ்சபூதத் தலங்களில் சங்கரநயினார் கோயிலும் ஒன்று. 

தமிழகத்தைப் பொறுத்தவரை, பஞ்சபூதங்களுக்கான தலங்கள் என்று திருவாரூர் (அல்லது)  காஞ்சிபுரம், திருவானைக்கா, திருவண்ணாமலை, திருக்காளத்தி, தில்லைச் சிதம்பரம் ஆகியவற்றை முறையே மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயத் தலங்களாகப் போற்றுகிறோம். இத்தலங்களில், இந்திந்த பூதங்களின் வடிவில் இறைவனார் அருளாட்சி செய்கிறார். பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருள்கள், வடிவங்கள், நிலைகளில் இறைவனார் இருந்தாலும், வழிபாட்டுப் பெருமைக்காக இப்படியொரு அமைப்பு. நெல்லைப் பகுதியிலும், இப்படியான அமைப்பு உண்டு. பிரதான பஞ்சபூதத்தலங்களுக்குச் செல்லமுடியாதவர்கள், இப்படிப்பட்ட உள்ளூர்த் தலங்களில் தங்களின் வழிபாட்டைச் சிறக்கச் செய்யலாம்.

இந்த வகையில், சங்கரநயினார் கோயில்தான் நிலத்துக்கான தலம். மண் வடிவில் அருள்மிகு சங்கரநாராயணர் அருள்கிறார். இந்த வரிசையில், தாருகாபுரம், நீருக்கான தலம்; தென்மலை, நெருப்புக்கானது; கரிவலம் வந்த நல்லூர், காற்றுக்கானது. சற்றே தொலைவில் அமைந்துள்ள தேவதானம், ஆகாயத் தலம்.

தென் தமிழ்நாட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ளதால், சங்கரநயினார் கோயிலைத் தங்களின் படைத்தளமாக கிழக்கிந்தியக் கம்பெனியினர் கொண்டிருந்தனர்.
பாளையக்காரர்களின் நகர்வுகளை நோட்டம்விடவும் உள்ளூர்க்காரர்களை ஏவவும், 1767}லிருந்து இங்கொரு படை நிறுவப்பட்டது. கட்டபொம்மனின் மரணத்துக்குப் பின்னர், நெல்லை ஜில்லாவின் முக்கியப் படை, இங்குதான் இருந்தது.

சங்கரன்கோயில், நெற்கட்டும் செவ்வல் ஆகியவற்றுக்கு வடமேற்காகவும், தென்மலைக்கு மேற்காகவும், வாசுதேவநல்லூருக்கு வடக்காகவும் இருக்கிறது சிவகிரி.
ஒருகாலத்தில், செலவின மற்றும் சொத்து மதிப்பீட்டில், எட்டையபுரத்திற்கு அடுத்தபடியாக இருந்த ஜமீன். இந்த ஜமீனின் ஆதித் தலைமையிடம் சுந்தன்குளம்.
சில காலத்திற்குப் பின்னர், அங்கிருந்து தென்மலைக்கு மாறிய மையம், பின்னர் சிவகிரியில் அமைந்தது. தலைமையிடமானது தென்மலையிலிருந்து சிவகிரிக்கு மாறியது. 1733}34 வாக்கில் என்பதாக ஜமீன் வம்சாவளி ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

தொடரும்

ADVERTISEMENT
ADVERTISEMENT