வெள்ளிமணி

பொருநை போற்றுதும் - 187

25th Mar 2022 03:11 PM

ADVERTISEMENT

 

அன்று மாலையும் வந்தது. இந்தப் பெண்ணை ஆற்றங்கரைக்குச் செல்ல விடாமல் தடுக்க என்னென்னவோ முயற்சிகள் நடந்தன. இவளை மட்டும் உள்ளே வைத்துப் பூட்டிவிட்டு, அங்கே என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்காக மற்றவர்கள் போனார்கள். எப்படியோ தப்பித்தாள்; எந்தப் பெண்ணை இவளோடு பூட்டிவிட்டுப் போனார்களோ அந்தப் பெண்ணையே துணையாக அழைத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றாள். 

ஆற்றங்கரை மண்டபத்திற்கு அருகிலும் சென்றுவிட்டாள். என்ன செய்வது? எப்படிப் போய் ஐயாவாளைக் காண்பது? ஒன்றும் புரியவில்லை. அங்கேயோ ஜன நெருக்கம். உள்ள சிரத்தையோடு வந்திருந்தவர்கள் ஒரு சிலர்தாம். மீதமெல்லாம் வேடிக்கை பார்க்கவும், சிறுமியை ஆற்றங்கரைக்கு வரச்சொல்லும் சந்நியாசி எப்படிப்பட்டவர் என்று வம்பு பேசவும் வந்தவர்கள். 

மண்டபத்திற்குப் பக்கத்தில், மணல் மேடு தட்டிய ஓரிடத்தில் ஒதுங்கிச் சுருண்டு வாடி நின்றாள் ஆவுடை. தயக்கமும் அழுகையும் முட்டிக் கொண்டு வர.....திடீரென்று எதிரில் நின்றார் அந்தத் திருநீற்று மகான். அவர் கழுத்தில் புரண்ட ருத்திராக்ஷ மாலை, ஆறுதல் சொல்வதுபோல் ஆடியது. "வா குழந்தாய்' என்றவருடைய குரல் கம்பீரமாக ஒலிக்க, அப்படியே சரிந்து அவருடைய பாதகமலங்களில் வீழ்ந்தாள். கம்பீரமான திருவதனத்தில், கரிசனமான புன்னகையைப் படரவிட்டார் மகான். அபயஹஸ்தம் காட்டியவர், அதனோடேயே இவளின் தலையை வருடினார். தம்முடைய திருக்கரங்களை மெல்லத் தாழ்த்தி, ஆவுடையைத் தூக்கி எடுத்து அருகில் அமர்த்தினார். கமண்டலத்தின் புனித நீரெடுத்துச் சிறிதே இவள்மீது தெளித்தார். 

ADVERTISEMENT

மண்டபத்தின் மாடப்படி ஒன்றில் அமர்ந்து கொண்டவர், நடுங்கியபடியே எதிரில் அமர்ந்திருந்த ஆவுடையிடம் பேசத் தொடங்கினார்: "குழந்தாய், எதைப் பற்றியும் கவலைப்படாதே. உன்னுடைய குரு என்று இதோ எதிரிலிருக்கும் இந்த வடிவையே ஏற்றுக் கொள். அகக்கண்ணைத் திறந்துகொள். இப்போது உபதேசிக்கும் இந்த மந்திரத்தையே நிர்பயமாக ஜபித்து வா. தொடர்ந்து ஜபித்துக் கொண்டிரு. ஊர் உலகம் என்ன வேண்டுமானாலும் கூறட்டும். எதையும் காதில் போட்டுக் கொள்ளாதே. அவ்வப்போது வழிகாட்ட உனக்கு குருவுண்டு. 

தெய்வ வாக்காக ஒலித்த இந்தக் குரல், ஆவுடையின் அகத்துக்குள் புகுந்து, நாடிநரம்பெல்லாம் பாய்ந்து, ஊனுக்குள் கலந்து, சித்தத்தில் சேர்ந்தது. ஐயாவாள் மறைந்து அந்தப் பக்கம் தென்பட்டார். பின்னர், ஊரைவிட்டே போய்விட்டார். ஆவுடையோ உன்மத்தைபோல் ஆனாள். ஏற்கெனவே வாய்கள் கிழிய வம்பு பேசிய ஊராருக்கு, இப்போது இன்னமும் எளிதானது. பைத்தியக்காரி, பிச்சி என்றெல்லாம் ஏசினார்கள். ஏச்சையும் பேச்சையும் இவள் கடந்துவிட்டாளே, யார் என்ன பேசினால்தான் என்ன? 

ஆதரவு கொடுத்த தாயும் பெரியவர்களும் என்ன ஆனார்களோ? காலச் சக்கரத்தில் அவர்கள் கரைந்திருக்கக்கூடும். ஊர் இவளை சாதிப் பிரஷ்டம் செய்து சந்தோஷப் பட்டுக் கொண்டது. ஆத்மானுபவத்தில் திளைத்துக் கொண்டிருந்தாள் என்பதை அவர்கள் என்ன கண்டார்கள் பாவம்! உன்மத்தையாகவே உலவியவள், திடீரென்று ஒருநாள் தீர்த்தயாத்திரை புறப்பட்டாள். அகத்தில் தோன்றி வழிநடத்திய குருவின் ஆணைப்படியே, ஆங்காங்கே சென்றாள். பொருநைத் தடங்களிலும் வைகைப் பாதைகளிலும் சுற்றியவள், காவிரிக் கரையை அடைந்தாள். துலா ஸ்நானத்திற்காக மயிலாடுதுறைப் (அப்போது மாயவரம்)  பகுதிகளை அடைந்து, காவிரியில் நீராடும்போது அது நிகழ்ந்தது. 

நீரிலிறங்கி முதல் முழுக்குப் போட்டாள். பேத அபேதம் இல்லாமல் போனது. உயர்வு}தாழ்வு, பெரியது}சிறியது, உயர்திணை}அஃறிணை போன்ற எந்த பேதமும் இல்லாமல் அற்றுப்போனது. அனைத்தும் பரமமே என்னும் ஆத்ம பரமானந்தம் மேலிட்டது. பரிபூரண ஸ்வானுபோதத்திற்குள் கலந்தாள். அப்படியே ஆற்றில் நின்று நீராடிக்கொண்டிருந்தாள். 

சுற்றிலும் நிறைய பெண்கள். தீர்த்த யாத்திரையில் உடன் வந்தவர்கள். யாரோ வாயிலிட்டு மென்று குதப்பி உமிழ்ந்த மாவிலை ஒன்று மிதந்து வந்தது. எட்டத்தில் வந்த அதனை உற்றுப் பார்த்தபடி நின்றாள். "எச்சில் இலை, எட்டத் தள்ளு' என்று பிற பெண்கள் அதனை நீர் ஒதுக்கித் தள்ளிவிட முயல, இவளோ அதனருகே சென்றாள். பயபக்தியுடன் அதனைப் பற்றி எடுத்தாள். மற்ற பெண்கள் நிந்திக்கத் தொடங்கினார்கள். 

குச்சியோடு இருந்த அம்மாவிலையைக் கையில் எடுத்தாள். அதைக் கொண்டு பல் துலக்கினாள். சுற்றிலுமிருந்த நிந்தனை கூடியது. ஆவுடையோ அழகாகச் சிரித்தாள். யாவற்றையும் கடந்து யாவற்றுள்ளும் நிறைந்த சமரச பரிபூரணத்திற்குள் திளைத்துக் கொண்டிருந்தவளுக்கு நிந்தனையும் வந்தனையே, வந்தனையும் நிந்தனையே! 

கரையேறியபோது, அரச மரத்தடியில் ஐயாவாள் காட்சி கொடுத்தார். தர்ப்பைப் புல்லினால், பீஜ மந்திரத்தை இவளுடைய நாவில் எழுதியதாகவும், மேலும் உபதேசித்ததாகவும் தெரிகிறது. "ஜீவன் முக்தி பெற்றுவிட்டாய் குழந்தாய். இனி உனக்கு பிறப்புமில்லை, இறப்புமில்லை. கர்மவினைகளோ பந்தமோ இனி உன்னை அணுகா. இப்பிறவியில் நீ தோன்றிய ஊருக்கே சென்று, ஏளனம் பேசியவர்களும் எகத்தாளம் செய்தவர்களும் சீராகுமாறு பாடிக் கொண்டும் பரமானுபவத்தைக் காட்டிக் கொண்டும் இரு' என்று கூறி மறைந்தாராம். 

தீர்த்தயாத்திரை காலத்திலேயே இவள் பாடிய பாடல்கள் சிலரைக் கவர்ந்திருந்தன. அவற்றைப் பாடிக் கொண்டு இவள் பின்னோடேயே வந்தவர்கள், சீடர்கள் போலவே அணுக்கமாக ஆயினர். ஐயாவாள் பீஜாக்ஷரம் எழுதியதும், உபதேசம் செய்ததும், ஆவுடைக்குள்ளிருந்த வேத வேதாந்த மேகங்களைக் கிளறிவிட்டன போலும்! மிதந்து வந்த மாவிலையும்கூட குருவினுடையது என்றும், ஆவுடையின் பரிபக்குவத்தைக் காண்பதற்காக நிகழ்ந்த நிகழ்வு என்றும் கூறப்படுகிறது. 

வேத வேதாந்த மேகங்கள், பாடல்களையும் கண்ணிகளையும் பொழியத் தொடங்கின. பக்தியும் யோகமும் ஞானமும் வெள்ளமெனப் பொங்கி விவேகம் தந்தன. ஆவுடை, ஆவுடை அக்காள் ஆனாள். செங்கோட்டைக்கே திரும்பினாள். ஊர் மெச்சியது; பாராட்டியது; காலில் பணிந்தது. 

வெகுகாலம் அத்வைத சாகரத்தில் அனைவரையும் திளைப்பித்தாள். திருக்குற்றால அருவியில் நீராடும் ஆசையைத் தெரிவித்து, ஆடி அமாவாசை நாளில் சிஷ்யைகளோடு சென்றாள். நீராடினார்கள். அருகிலேயே கல் ஒன்றின்மீது அமர்ந்தாள். ஏதோ சிந்தித்தாள். 
(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT