வெள்ளிமணி

ஆமருவி அமரர் கோமான்

24th Jun 2022 05:18 PM

ADVERTISEMENT

 

கருவறையில் கருடன், பிரகலாதன், பசு வடிவில்  பார்வதி,  இலக்குமி,  சரஸ்வதி, ஆகியோருடன் தோஷங்கள் நீக்கி செல்வம் அருளும் தலம் தேரெழுந்தூர். வெண்ணிப் பறந்தலையில் கரிகாலன் பதினொரு குறுநில மன்னரையும், சேர, பாண்டியரையும் ஒருங்கே முறியடித்தான். வெற்றி ஆரவாரம் முதற் கரிகாலனின் தலைநகரான  அழுந்தூரில் கொண்டாடப்பட்ட செய்தியை புறநானூறு விளக்குகிறது. அழுந்தை, அழுந்தூர். திருவழுந்தூர் எனப்பட்ட சோழர் தலைநகராகும்.

கிருஷ்ணாரண்யம் கோகுலத்தில் கோபாலர்களுடன் இருந்தார் கண்ணன்.  பசு மந்தையை, ஓரிடத்தில் மேயவிட்டு யமுனைக்கு நீராடச்  சென்றிருந்த நேரத்தில், அந்தப் பசுக் கூட்டத்தை  பிரம்மா தேரழுந்தூருக்கு ஓட்டி வந்து விட்டார்.  மாயக் கண்ணன் உண்மையுணர்ந்து  உடனே அது போலவே பசு மந்தையை அங்கேயே  உருவாக்கினான்.  தவறுணர்ந்த பிரம்மா, தாங்கள்  தேரழுந்தூரில் கோயில் கொள்ள வேண்டுமென்று ,செய்ததாகக் கூற  "ஆமருவி நிரை மேய்க்கும் அமரர் கோமானாக வந்தமர்ந்தான்' என்பது வரலாறு. இதற்குச் சான்றாக இங்குள்ள உற்சவப் பெருமாளுக்கு முன்புறம் கன்றும் பின்புறம் பசுவும் அமைந்துள்ளன.

சோழரின் தலைநகர்: திருமால் குடிகொண்ட இவ்விடத்தில் தன் தலைநகர் அமைந்தால் நலமுண்டாகும் என்பதால் இவ்விடத்தில் கரிகாலன் தன் தலைநகரை அமைத்தான் என்கிறது தொல்
வரலாறு தேர் அழுந்திய ஊர்.

ADVERTISEMENT

பிறகொரு நேரம்  உபரிஸரவசு என்ற  மன்னன்,  தன் தேரில் ஏறி  ஆகாயத்தில் வலம் வந்தான். அவன் தேரின் நிழல், படுபவை  கருகிவிடும். அந்நேரம்   கண்ணன்  மூன்று பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தான். தேரின் நிழல் பசுக்கள் மீது பட்டதும் வேதனை தாங்காமல்  அலறின. கண்ணன்   தரையில் விழுந்த தேரின் நிழலைத் தன் காலால் ஓங்கி அழுத்தினான்.  தேர் அப்படியே பூமியில்  அழுந்தி நின்று போயிற்று.  அப்படித் தேர்  அழுந்தின இடம்தான் இந்த தேரழுந்தூர்.

காவிரி தவம்: அகத்திய மாமுனிவர் ஒரு சமயம் காவிரியிடம் தன்னை மணந்து கொள்ள வேண்ட, காவிரி மறுத்தாள்.  கோபமுற்ற அகத்தியர் காவிரியைக் குடத்தில் அடைத்தார்.  தரையிலிருந்த  அக்கும்பத்தை  காகம் சாய்க்க, காவிரி வழிந்தோடியது . சினமுற்ற கும்பமுனிவர் காவிரியால் வளம் பெறும் பகுதியில் உள்ளோர் அனைவரும் துன்புற்று வறுமையடையட்டும் என்று சாபமிடடார். இதனைப் போக்க தேரழுந்தூரில் தேவாதிராஜனைக் குறித்து தவமிருந்து காவிரி சாபம் தொலைந்தாள்  என்பது வரலாறு. இப்பெருமானை 
நோக்கித்தவமிருந்த நிலையில் காவிரித்தாயாரும் இச்சந்நிதியில் இடம் பெற்றுள்ளாள்.

கருடனின் விமானம்: தேவேந்திரன் ஒரு சமயம் கருடனை அழைத்து, ஒரு வைரமுடியினையும் ஒரு விமானத்தையும் தந்து, அவைகள் எந்தப் பெருமாளுக்கு உகந்தவைகளோ அவர்களிடம்  சேர்ப்பிக்குமாறு வேண்டினான்.  திருநாராயணபுரத்து (மைசூர்) செல்லப் பிள்ளைக்கு வைரமுடியினையும்,தேரழுந்தூர் தேவாதிராஜனுக்கு விமானத்தையும் சமர்ப்பித்தார். இதனால் இப்பெருமாள் கருடனைத்தன் பக்கத்திலேயே அமர்த்திக் கொண்டார்.

கோயில்: வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் வலப்புறம் கம்பர் சந்நிதியில் கம்பரும் அவருடைய மனைவியும் உள்ளனர். அடுத்துள்ளது ஆஞ்சநேயர் சந்நிதி. அருகே பலிபீடம், கொடி மரம் . கோபுரத்தைத்தாண்டி திருச்சுற்றில் வலது புறத்தில் தேசிகர் மடப்பள்ளி, ஆழ்வார் சந்நிதிகள் உள்ளன. இடது புறம் ஆண்டாள் சந்நிதி உள்ளது. கருவறையில் சற்று உயர்ந்த தளத்தில்13 அடி உயர சாளக்கிராம  மூலவர் தேவாதிராஜன் நின்ற நிலையில் கிழக்கு நோக்கியும் இடது புறம் கருடாழ்வாரும், வலப்புறம் பிரகலாதாழ்வாரும் உள்ளனர். இடது கையில் ஊன்றிய கதை உள்ளது. இடது புறம் காவிரித்தாய் மண்டியிட்ட நிலையில் உள்ளார். கோயிலின் எதிரே குளம் உள்ளது.

மொத்தம் 11 சந்நிதிகள் உள்ள இக்கோயிலின் மூலவர்  திருநாமம் ஆமருவியப்பன் என்கிற தேவாதிராஜன் என்பதாகும். வட மொழியில் கோசகன் என்று இப்பெருமாளைக் குறிக்கின்றனர். ஆமருவியப்பன் என்றால் பசுக்களுடன் பொருந்தியிருப்பவன் என்பதாகும். ஆமருவியப்பனின் வடமொழியாக்கமே  கோசகன் என்பதாகும். இப்பெயர்  மூலவருக்குமுண்டு. விமானம்  கருட விமானம்; தீர்த்தம் தர்சன புஷ்கரிணி, காவேரியாகும்.இங்கு   தர்மதேவதை, உபரிசரவசு , காவேரி, கருடன், அகத்தியர் ஆகியோர் தரிசித்துள்ளனர். கிழக்கே திருமுக மண்டலத்துடன் தாயார் மூலவர், உற்சவர், தாயார்செங்கமலவல்லி தனி சந்நிதியில் சேவையருளுகிறாள்.

திருமங்கை மங்களாசாசனம்: திருவுக்கும் திருவாகிய செல்வா என திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள பெருமாள் மீது  45 பாசுரங்களில் துதித்துள்ளார்.மணவாள மாமுனிகளும் மங்களா சாசனம் செய்துள்ளார் எனப்படுகிறது.

கம்பரூர்: இப்பெருமாள் மீது  அளவற்ற பக்தி கொண்ட கவிச்சக்ரவர்த்தி கம்பன் பிறந்ததும் இவ்வூரேயாகும் கம்பருக்கும்அவர் மனைவிக்கும் இக்கோவிலில் சிலைகள் உள்ளன.
இவ்வூரை கம்பன் பிறந்தவூர், காவிரி தங்குமூர்   
கும்பமுனி சாபம் குலைந்தவூர் }செம்பதுமத் 
தாதகத்து நான்முகனும் தாதையும் தேடிக் காணா                                                                                        
ஒதகத்தார் வாழும் அழுந்தூர்

என்பது "புலவர் புராணம்' எனும் வரலாற்று நூற் செய்தியாகும். இங்கு கம்பர் மேடு என்றழைக்கப்படும் பகுதியே கம்பன் வாழ்ந்த இடமாக கூறப்படுகிறது.  இப்போது அழகான கம்பன் மண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை 8 மணி முதல் 12.30 வரையும் மாலை 5 முதல் 8.30 வரையும் தரிசிக்கலாம். 

பரிகாரத் தலம்: கருடனை  தோஷங்கள் நீங்க வியாழன், சனி, ஞாயிறுகளிலும், குழந்தைகள்  தோஷம் நீங்க பிரகலாதனையும் வழிபடுகின்றனர். திருமணத்தடை நீங்கவும், அனைத்து  செல்வமும் சேர வெள்ளிக்கிழமைகளில் தாயாரையும்  பிரார்த்தனை செய்கின்றனர்.

கோயில் மயிலாடு துறையை அடுத்த குத்தாலம் வட்டத்தில் அங்கிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. 
 விவரங்களுக்கு  9500780376; 9791697293.
-இரா.இரகுநாதன்
 

ADVERTISEMENT
ADVERTISEMENT