வெள்ளிமணி

பொருநை போற்றுதும் - 199

18th Jun 2022 05:02 PM

ADVERTISEMENT


இந்தச் சிவலிங்கத்தைத் திருமலை தம்பதியினர் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இப்போது இக்கதை சொல்லப்படும் இடத்தில் பூரணை புஷ்கலை உடனாய சாஸ்தா குடிகொண்டுள்ளார்.  மேகம் திரை கொண்ட சாஸ்தா என்றே சுவாமிக்குத் திருநாமம். சுயம்புச் சிவலிங்கமாகத் தோன்றியிருந்தாலும், வெகு காலத்திற்கு எந்தவித உருவத் திருமேனியும் இல்லாமல் இருந்ததாகவும், பின்னர், மக்களே சாஸ்தா திருமேனியைப் பிரதிஷ்டை செய்து விட்டதாகவும் கூறுகிறார்கள். எப்படியாயினும், வரலாற்றுப் பெருமையும் ஆன்மிகப் பெருமிதமும் கொண்டு பாவூர்ப் பகுதிகள் பிரகாசிக்கின்றன. 

பொருநைக் கரை ஊர்களும் சரி, பேர்களும் சரி, இயல்புகளும் சரி, தனித்தன்மை வாய்ந்தவை. குறிப்பிட்ட சில தெய்வங்களும் தெய்வத் திருமேனிகளும் இப்பகுதிக்கே உரித்தானவை.  இப்படிப்பட்ட தெய்வங்களில் "முப்பிடாதி' அம்மனைச் சிறப்பாகக் குறிப்பிடலாம்.  கடையம், ஆழ்வார்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், சுத்தமல்லி ஆகிய ஊர்களின் முப்பிடாதித் திருக்கோயில்கள் பிரசித்தி பெற்றவை. 

நெல்லை,  கன்னியாகுமரி,  விருதுநகர், தூத்துக்குடி பகுதிகளில் முப்பிடாதி அம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.  பற்பல குடும்பங்களுக்கு, இவளே குல தெய்வமும் கூட! இவளைப் பற்றிய தகவல்களும் சங்கதிகளும் ஆங்காங்கே வெவ்வேறு விதமாக வழங்கப் பெறுகின்றன. காலப்போக்கில்,அந்தந்தப் பகுதிகளின் உள்ளூர் சங்கதிகளும் சேர்ந்து பலவிதமான கலவைகளில் முப்பிடாதியைத் தரிசிக்கலாம். 

மூன்று கோட்டைகளுக்கு நாயகியாகத் திகழ்பவள்.  தங்கம்,  வெள்ளி,  இரும்பு  ஆகிய  மூன்று  உலோகங்களில் கோட்டைகளைக் கட்டிக் கொண்டு, பலரையும் துன்புறுத்தியவர்கள் முப்புர அரக்கர்கள் என்றழைக்கப்பட்ட வித்யுன் மாலி,  ஹிரண்யாக்ஷன்,  தாரகாக்ஷன் சகோதரர்கள்;  இவர்களுக்குத் தெய்வமாக இவளே திகழ்ந்தாள் என்றும்,  எனவே  இப்பெயர் என்றும் கூறுகிறார்கள். இந்த வகையில், முப்புராரி என்னும் பெயர் மருவி,  முப்புடாதி,  முப்பிடாதி,  முப்பிடாத்தி,  முப்பிடாரி என்பனவாக ஆகிவிட்டனவாம். பார்வதி,  லட்சுமி,  சரஸ்வதி ஆகிய  மூவரின் அம்சங்களும் இணைந்த வடிவினள்; எனவே, மூவரின் இணைப்பு என்னும் வகையில் முப்பிடாரி எனப்படுகிறாள். 

ADVERTISEMENT

முப்பிடாதி அம்மனைப் பற்றிய வரலாறு ஒன்றும் நெல்லைவட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் வழங்கப் பெறுகிறது. தானாவதி என்றொரு அரக்கர் குலப் பெண்.  தனக்கொரு ஆண் குழந்தை வேண்டும் என்று தவம் செய்தாள். பிரம்மாவின் அருளால் பலசாலியான ஆண் குழந்தையைப் பெற்றாள். அவனே மகிஷன் என்று பெயர் பெற்றான்.  கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய மகிஷன்,  சிவனாரை எண்ணித் தவம் செய்தான். தவத்தின் பயனாகச் சிவனார் அவனுக்குப் பற்பல வரங்களை அள்ளி வழங்கினார். அசுரத்தனத்தையும் இடையே காட்டினான். எந்தவொரு உயிராலும் தனக்கு மரணம் நேரக் கூடாது என்று வேண்டியவன்,  பெண் வயிற்றில் பிறக்காத இன்னொரு பெண் மட்டுமே தன்னை அழிக்கக்கூடும் என்றும் வேண்டிக்கொண்டான். சிவனாரும்அளித்துவிட்டார். 

வரங்களோடு தன்னுடைய ஆட்சியை அமைத்துக் கொண்டான். மகிஷன்ஆண்ட ஊர் மகிஷூரு என்றாகி, மைசூரு என்றும் ஆகிவிட்டது. அசுரத்தனத்தோடும் சுயநலத்தோடும் ஆட்சி செய்தான். இதற்கிடையில், திருக்கைலாயத்தில் விநாயகனும் முருகனும் தாயோடு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  சிவனார் தியானத்தில் இருந்தார். அரைக் கண் மட்டுமே மூடி, மீதியைத் திறந்து அவர் தியானிப்பதைக் கண்ட சிறுவர்கள், "இதென்ன கண்மூடா தியானம்' என்று வினா எழுப்பினர்.  ஐயன் கண் மூடினால், அகிலமும் இருட்டாகும் என்று அம்மை விடை சொன்னாள். பிள்ளைகளுக்கோ வேடிக்கை.  அப்பாவின் கண்களை மூடிப்பார்ப்பதாக அவர்கள் கூற, பிள்ளைகளைப் பிரச்னைக்குள்ளாக்க விரும்பாத அம்பிகை, தானே ஐயன் கண்களைப் பொத்தினாள். 

சினத்தோடு சிவனார் எழ, காரணத்தையும் விளக்கினாள். இருந்தாலும், ஐயனின் கோபம் ஆறவில்லை.  பூமியில் போய் பிறக்க வேண்டும் என்றவர் ஆணையிட்டபோது, "இதற்குப் போய் இப்படியொரு தண்டனையா'என்றவள் மறுகினாள்.  சினம் அதிகப்பட, நெற்றிக்கண்ணைத் திறந்தார் சிவனார். நெருப்பு வெளிப்பட்டு அம்பிகையின் மேனியை எட்டுத் துண்டுகள்ஆக்கியது.  எட்டுத் துண்டுகளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டார். 

நாக லோகத்தில் நாக கன்னிகை, பிள்ளை வரம் வேண்டித் தவம் இருந்தாள். எட்டுப் பிண்டங்களையும் சிவனார் அவள் முன் வைக்க, எட்டு முட்டைகள் உருவாகின.  நாக கன்னி அவற்றை அடைகாத்தாள். ஆடிப்பூரத் திருநாளன்று, முட்டைகளிலிருந்து எட்டுப் பெண்கள் வெளிவந்தார்கள்.  இவர்களேஅஷ்டகாளியர்.  முதலாமவள் முத்துமாரி என்னும் முத்தாரம்மன்.  

இரண்டாமவள் மாகாளி என்னும் பத்திரகாளி.  மூன்றாமவளே, மூன்று முகங்களுடன்தோன்றிய நம்முடைய முப்பிடாதி. மூன்று தலைகள் என்பதால், முப்பிடரி (பிடரி=கழுத்து) என்றழைக்கப்பட்டு, பின்னர் முப்பிடாதி ஆனவள்.  நான்காமவள் உலகளந்தாள் என்னும் உலகநாயகி,  ஐந்தாமவள் அரியநாச்சி  என்னும்  நாகாத்தம்மன்,  ஆறாமவள் செண்பகவல்லி என்னும் செல்லியம்மன்,  ஏழாமவள் சந்தனமாரி என்னும் சடைமாரி, எட்டாமவள்காந்தாரி. 

(தொடரும்)

ADVERTISEMENT
ADVERTISEMENT