வெள்ளிமணி

பொருநை போற்றுதும்! 197

3rd Jun 2022 05:32 PM

ADVERTISEMENT

 

பண்டைய குமரிக் கண்டத்தின் எச்சங்கள், அகத்தியரின் இருப்பிடம், தமிழ்ச் சங்க ஆய்வுகள், செப்பம்பல நடராஜரின் காளிகா சிருஷ்டி  தாண்டவம், திருக்குற்றால நடராஜரின் திரோதான தாண்டவம்,  செப்பு கலந்ததால் தோன்றிய தாமிரவருணி என்னும் பெயர், ஆதிச்சநல்லூர் நாகரிகம்,  ஆங்காங்கே கிட்டும் பண்டையத் தடயங்கள் என்று பொருநைப் படுகையின் பழமையைப் பறை சாற்றுகிற சான்றுகள் ஏராளம் ஏராளம். 

சிற்றாற்றங்கரை நகரங்களில் பிரசித்தி மிக்க தொன்று வீர கேரளம்புதூர் ஆகும்.  வீர கேரளம்புதூரைப் பற்றி வீரைத் தல புராணம், வீரைச் சிலேடை வெண்பா, வீரை அந்தாதி,வீரைநவநீதகிருஷ்ணன் பிள்ளைத் தமிழ் ஆகியவற்றைப் பாடினார் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார். 

கயல்நீர்க் கழனி வளங்களும் கமலவாவிகளும்
கடி  மதில்களும் மஞ்சடர்ந்த பொழில்களும்
மணி மாடமாளிகைகளும் நிறைந்த வீரை 
என்று புலவர்களால் பாராட்டபெற்றுள்ள 
இவ்வூரின் வரலாறும் பெருமைக்குரியது. 

ADVERTISEMENT

"சிற்றாற்றின்வடபாலில் திகழ் வீரை நகர்' என்று வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்போற்றுகிறார். வீரகேரளன் என்னும் மலையாள மன்னர் ஒருவரின் பெயரால் இவ்வூர் வீர கேரளம்புதூர் என்றழைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.  தலைசிறந்த தமிழாய்வுகளைச் செய்த பெருமகனார் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள், இவ்வூரின் பெயருக்கு வேறொரு காரணத்தைத் தருகிறார். தஞ்சைச் சோழர்களின் ஆட்சிக் காலத்தில்,  பாண்டிய நாட்டுப் பகுதிகள் பலவும் சோழர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. 

சிற்றரசர்களாகவும் குறுநிலப் பகுதிகளின் தலைவர்களாகவும் இருந்த பாண்டிய வம்சத்தினர், அவ்வப்போது சோழர்களை எதிர்க்கத் தலைப்பட்டனர்.  ராஜாதி ராஜ சோழன் காலத்தில்,  பாண்டியர்கள் மூவர் இவ்வாறு சேர்ந்து எதிர்க்க முற்பட்டனர். உள்நாட்டுக் கலகத்தை விளைவித்தனர். மூவரில் இருவரான மானாபரணனும் வீர கேரளனும் போர்க்களத்திலேயே மாண்டு போயினர். இவர்களின் பெயர்களால், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மானாபரணநல்லூரும் தென்காசிக்கு அருகேயுள்ள வீர கேரளம்புத்தூரும் தோன்றி, இவர்களின் சுதந்திர ஆர்வத்துக்குச் சான்று நிற்பதாகக் குறிப்பிடுகிறார். 

வீரகேரளம்புதூரில் எழுந்தருளியுள்ள சிவனாருக்கு அருள்மிகு இருதயாலீச்வரர் என்று திருநாமம். 11}ஆம் நூற்றாண்டிலேயே இக்கோயிலுக்குத் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. 
"இருதயாலய' என்னும் திருநாமம் உள்ளத்தைக் கவர்கிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் 
பூசலார். 

சென்னைக்கு அருகுள்ள திருநின்றவூர் என்னும் தலத்தில் வாழ்ந்த பூசலார்,  தம்முடைய உள்ளத்திலேயே சிவனாருக்கு ஆலயம் எழுப்பியவர்.  இவர் எழுப்பிய இதயக்கோயிலைப் பற்றிப் பல்லவ மன்னரிடம் சாட்சாத் சிவனாரே தெரிவித்து,  உள்ளக் கோயிலின் கும்பாபிஷேகத்துக்கு எழுந்தருளியதாக வரலாறு. 
திருநின்றவூர் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிவனாருக்கும் "அருள்மிகு இருதயாலீச்வரர்' என்றே திருநாமம்.  வீரகேரளம்புதூரிலும் இப்படி ஏதேனும் வரலாறு இருந்திருக்கக் கூடுமோ! 

தென்காசிப் பாண்டியர்களின் வம்சாவளியினராகக் கருதப்படுகிற ஊற்றுமலை ஜமீன்தார்களின் தலைநகரமாகவும் வீரகேரளம்புத்தூர் இருந்துள்ளது.  ஊற்றுமலை ஜமீன்தார்களின் பெயர்களில் "ஹ்ருதயாலய' என்னும் பதம் காணப்படுவதற்கும்,  வீரைநகரின் சிவனாரே காரணம். 

ஜமீன்தார்களின் குல தெய்வம், இவ்வூரின் அருள்மிகு நவநீத கிருஷ்ணன் ஆவார். தமிழ்த் தாத்தா உ வே.சாமிநாதய்யர் அவர்கள், ஊற்று
மலை ஜமீன் ஹ்ருதயாலயமருதப்பதேவரின் அன்பை நிரம்பவேஅனுபவித்தவர். புலவர் பெருமக்களை ஜமீன் அன்போடு நடத்துவதைக்குறித்துச்சிலாகித்துத் தம்முடைய நூலில் எழுதியுள்ளார். 

ஹ்ருதயாலய மருதப்ப தேவர், தமிழ்ப் புலவர்கள் பலரையும் ஆதரித்தவர். ஏறத்தாழ 38 புலவர்கள்,  இவருடைய காலத்தில் ஜமீன் ஆதரவில் இருந்தார்களாம். ஆஸ்தான புலவராக இருந்தவர்தாம், சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார்.
(தொடரும்) 

ADVERTISEMENT
ADVERTISEMENT