வெள்ளிமணி

லட்சம் வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம்!

29th Jul 2022 03:38 PM

ADVERTISEMENT

 

ஆடி என்பது அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தெய்வீக மாதம். ஆடி 18, ஆடிப் பூரம், ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோயில்களுக்குச் சென்று அனைவரும் நலமுடனும், செழிப்பாகவும் இருக்க அம்மனை வழிபட்டு கொண்டாடுகிறோம்.  முதல் குழந்தையைப் பெற்றெடுத்து தாயாவதற்கு 2 முதல் 3 மாதங்களுக்கு முன்பு, கருவுற்ற பெண்களுக்கு 7 அல்லது 8-ஆவது மாதத்தில் கங்கண தாரணம் (வளைகாப்பு) நடத்துவது நமது பாரம்பரியம்.

ஜகன் மாதா நம் அனைவருக்கும் தாய். இந்தத் தாய் புரட்டாசி மாதத்தில் நவராத்திரிக்கு ஒரு நாள் முன்னதாக ஜகத்தை (உலகத்தை) படைத்தாள்.  எனவே நவராத்திரிக்கு ஒரு நாள் முன்பாக அவள் குழந்தையுடன் இருக்கும் தாயைப் போல அலங்கரிக்கப்படுகிறாள். இந்த அலங்காரம் "ஜகத் ப்ரசூதிகா'  என்று அழைக்கப்படுகிறது. நவராத்திரிக்கு சில மாதங்களுக்கு முன்பு, ஆடி மாதம் பூரம் நட்சத்திர நாளில் வளையல்களால் அலங்கரிக்கப்படுகிறாள்.

அனைத்து அம்மன் கோயில்களிலும் ஆடி ப்பூர விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி கோவையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சாரதாம்பாள் கோயிலில், ஆடிப் பூரம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தேவி சாரதா மாதா குறைந்தபட்சம் 50 ஆயிரம் வளையல்களால் அலங்கரிக்கப்படுகிறார். இந்த அலங்காரம் கடந்த சில ஆண்டுகளாக தனித்தன்மை வாய்ந்ததாக விளங்குகிறது.

ADVERTISEMENT

அம்பாளுக்கு சேலை, கோபுரக் கலசம், தாமரை, கும்பம், வீணை முதலியவை கண்ணாடி வளையல்களால் மட்டுமே அலங்காரம் செய்யப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 15}ஆம் தேதிக்குப் பிறகு இதற்கான பணிகளை கோயில் நிர்வாகத்தினர்  தொடங்குகின்றனர். இந்த ஆண்டு ஆகஸ்ட் 1}இல் ஆடிப் பூரம் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு ஒரு லட்சம் வளையல்களைக் கொண்டு விழாவைக் கொண்டாட கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அம்மனுக்கு வளையல்களைக் காணிக்கையாக செலுத்த விரும்பும் பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் கொடுக்கலாம் அல்லது 0422} 2220760 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ஆகஸ்ட் 1, 2 ஆகிய இரண்டு நாள்களுக்கு அம்மன் முழு வளையல் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் வளையல்கள் அகற்றப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

 இந்தக் கோயிலில் நவராத்திரி விழாவும் கொண்டாடப்படுகிறது. செப். 25 முதல் அக்.  5}ஆம் தேதி வரை நவராத்திரி கொண்டாடப்படும். இதில் செப். 30 முதல் அக். 3}ஆம் தேதி வரை சத சண்டி பாராயணம், செப். 4-ஆம் தேதி சண்டி ஹோமம் ஆகியன நடைபெறவுள்ளன.

- ஆர்.வைத்தியநாதன்

ADVERTISEMENT
ADVERTISEMENT