வெள்ளிமணி

பொருநை போற்றுதும் - 201

தினமணி

தாமிரவருணி என்றழைக்கப்பெறுகிற பொருநை நதி குறித்து வேதவியாசர் வெகு சிறப்பாக எடுத்துரைக்கிறார். 

ஸ்மரணாத்தர்சனாத் த்யானாத் ஸ்நானாத் பானாத் அபித்ருவம்
கர்மவிச்சேதினி ஸர்வ ஜந்தூனாம் மோக்ஷதாயினீ  

நினைத்தாலும், தரிசித்தாலும், தியானித்தாலும், நீராடினாலும்,  அருந்தினாலும்,  அனைத்து விதமான உயிர்களுக்கும்,  எல்லாவிதமான கர்ம வினைகளையும் நீக்கி,  நிச்சயமாக முக்தியைத் தருபவள் என்றே இவளின் பெருமையைப் பேசுகிறார். 

பார்வதி பரமேஸ்வரரின் திருமண மாலையே தாமிரவருணியாக உருவானது என்னும் கதை,  தாமிரவருணி மஹாத்மியத்தில் கூறப்படுகிறது. ஹிமவானுடைய தலைநகரம் ஒüஷதிப் பிரஸ்தம்.  இங்குதான் பார்வதி கல்யாணம் நடந்தது.  மணப்பெண், மணமகனின் கழுத்தில் மாலையிட, அம்மாலையை  எடுத்த  சிவபெருமான் அகத்தியரின் கையில் அதைக் கொடுக்க, அக்கணமே அம்மாலையானது,  பேரழகு பொருந்திய கன்னிகையாக உருவெடுத்தது. அந்தச் செல்வத் திருமகளின் திருமேனி பொலிவையும் செம்பவள நிறத்தையும் கண்ட தேவர்கள், தாமிரா, தாமிரபர்ணி, மணிகர்ணிகா,  பரா முதலிய பெயர்களால் அவளை அழைத்தனர். 

அகத்தியரும் லோபாமுத்திரையும் தென்திசை வந்தபோது, தாமிராவும் அவர்களுடன் வர, மலையபர்வத மஹாராஜா,  தாமிராவே தமக்கு மகளாக வேண்டும் என்று வேண்டினார். மலையபர்வதத்தின் வேண்டுகோளை நிறைவேற்ற,  அகத்தியர்  ஆணைப்படி, தாமிராவும் நதிப்பெண்ணாக உருவமெடுத்துப் பிரவகித்தாள். 
வைகாசி மாதப் பெüர்ணமியில்,  விசாக நட்சத்திரம் கூடிய திருநாளில், தாமிரா என்னும் நதிநங்கை தோன்றியதாக ஐதீகம். அகிலத்தில் இருக்கும் புண்ணிய தீர்த்தங்கள் யாவும் தாமிராவுக்கு ஈடாகா.  

ப்ரஹ்மாண்ட உதரஸம் ஸ்தானி தீர்த்தானி விவிதான்ய பிதாம்ரா  தீர்த்த த்ரயை கஸ்ய கலாம் நார்ஹந்திஷோட ஸீம் தாமிராவில் மூன்றில் ஒரு பாகமெடுத்து, அதைப் பதினாறு பகுதிகளாக்கினால்,  அந்தப் பதினாறில் ஒரு பங்குக்குக் கூட, பிரம்மாண்டத்தில் இருக்கும் புண்ணிய தீர்த்தங்கள்பலவும் சேர்ந்து ஈடாகாது. 

தாமிராவின் திருநாமங்களை அன்போடு உரைப்பவருக்கு, முக்தியானது கைத் தலத்திலேயே உள்ளது. 
யேபடந்திஜனாபக்த்யாதேஷாம் முக்தி கரேஸ்திதா. 

இப்படிப்பட்ட புண்ணியத்திருநாமங்கள் வருமாறு: 
தர்மத்ரவா,  பகவதி, தாம்ரா,  மலையநந்தினி, பராபரா,  அம்ருதஸ்யந்தா,  தேஜிஷ்டா,  கர்மநாசினி, முக்தி முத்ரா,  ருத்ர கலா,  கலிகல்மஷ நாசினி,  நாராயணி, பிரஹ்மநாதா,  மாலேயீ, மங்களாலயா,  மருத்வதி, அம்பரவதி, மணிமாதா,  மகோதயா,  தாபக்னீ,  நிஷ்கலா,  நந்தா,  த்ரயீ,  த்ரிபதகாத்மிகா. 

பொருநை என்னும் தாமிரா, கடந்த 2018 அக்டோபரில் புஷ்கரப் பெருவிழா கண்டாள். இவளின் திருவிழாவை முன்னிட்டு, இவளுடைய பெருமைகளையும் பெருமிதங்களையும், மனமாரவும் வாயாரவும் சிந்திக்கிற வாய்ப்பையும் ஏற்படுத்தினாள். 

பொருநையாளின் புகழும் சீலமும் அளப்பரியன.  ஜீவ நதியாக சிலிர்த்துப் பாயும் இவளின் சிறப்புகளையெல்லாம் முழுமையாகக் கூறிவிட முடியாது.  ஆற்றங்கரையில் நிற்கும்போது, தென்றலின் வீச்சில்,  ஒரு சில நீர்த்துளிகள் மேலே பட்டவுடன்,  உடலெல்லாம் சிலிர்க்குமே,  அப்படித்தான், பொருநையாளின் சிற்சில துளிகளின் சிலிர்ப்பைக் கண்டிருக்கிறோம், அனுபவித்திருக்கிறோம். 

பொருநையாள் பாய்ந்துகொண்டிருக்கிறாள்.  சித்திரா என்னும் சிற்றாற்றாளும், தாம்ரானுஜா  என்னும் கடனாவும்,  இன்னும் துணை வரும் ஆற்றுச் சகோதரிகளும் ஆர்ப்பரித்து உடன் விளையாட,  குன்றா நலத்தோடு பாய்ந்துகொண்டிருக்கிறாள்.  மானுடத்தின் தொடக்கக் காலத்திலிருந்தே நலமும் வளமும் நல்குகிற பெருமாட்டி இவள். 

இவளுடைய கரைகளில் உலாவும்போதும், மணலில் மண்டியிட்டு கதை பேசியபோதும், அருகிலுள்ள ஊர்களுக்குள் சுற்றி வந்தபோதும்,  அன்பும் ஆதரவும் பண்பும் பெருமையும் காட்டித் தந்தாள்.  நீர்ச்சுழல் காலில் பட, இவளின் கரையில் நிற்கிறோம்;  சிரித்துக்கொண்டே இந்தச் சீமாட்டி 
விரைகிறாள்.

(நிறைவு பெற்றது)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT