வெள்ளிமணி

ஆதி அனந்தபுரத்து அரங்கன்!

DIN

418  ஆண்டுகளுக்குப் பிறகு, மலைநாட்டு வைணவத் திவ்ய தேசங்களில் ஒன்றானதும், மிகப் பழைமையான ஸ்தலமுமான திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக வைபவம் இறையருள் கூட்ட, ஜூலை 6}இல் நடைபெறுகிறது.

தலசிறப்பு: இந்தத் திருத்தலத்தைச் சுற்றி கோதையாறும், பரளியாறும் வட்டமிடுவதால் திருவட்டாறு என அழைக்கப்படுகிறது.  திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப சுவாமி கோயில் கட்டப்படுவதற்கு வெகுகாலம் முன்பே இத்தலம் அமையப்பட்டதால் இது ஆதி அனந்தபுரம் எனவும்,  மலைநாட்டுத் திருப்பதிகளில் ஆற்றின் இடைப்பட்ட பகுதியில் பெருமாள் சயனக் கோலம் கொண்டு அருளுவதால் "சேரநாட்டுத் திருவரங்கம்' எனவும் சிறப்பித்து அழைக்கப்படுகிறது.

பெயர்க் காரணம்: ஒரு சமயம் கேசன் என்னும் அரக்கன் பிரம்மாவிடம் வரம் பெற்று முனிவர் களுக்கும், தேவர்களுக்கும் பலவித இன்னல்கள் செய்தான். திருமால் அவனை வீழ்த்தி ஆதிசேஷ படுக்கையில் அடக்கி, அதன் மேல் பள்ளிகொண்டார். அதனால் ஆதிகேசவன் என்ற பெயர் பெருமாளுக்கு வழங்கலாயிற்று.

வழிபட்டு பேறு பெற்றவர்கள்: 

வசிஷ்ட மகரிஷி இந்தத் தலத்தில் தங்கி இறைவனை வழிபட்டு ஐந்து மடங்களை உருவாக்கினார் என பத்ம புராணம் குறிப்பிடுகிறது. சந்திரனும், பரசுராமரும் தங்களது குறைகள் நீங்க இந்தத் தலத்து பெருமாளை வணங்கி பாவதோஷ நிவர்த்தி பெற்றனர். சோமயாஜி என்னும் ரிஷி இத்தலத்தில் தவம் செய்து யாகம் ஒன்று செய்கையில் அக்குண்டத்திலிருந்து ஒரு புத்திரன் தோன்ற அவனை சப்தரிஷிகளும் வளர்த்தனர். "ஹாதலேயன்' என்னும் பெயர் கொண்ட அந்த சிறுவனுக்கு பெருமாளும், பிராட்டியுமே "அஷ்டாட்சர மந்திரம்' உபதேசித்தனராம். இவ்வாறு இத்தல பெருமைகள் பலவற்றை பிரும்மாண்டபுராணம், கருடபுராணம் விவரிக்கின்றது.

பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மகாபிரபு திருவட்டாறுக்கு வருகை தந்து ஸ்ரீ ஆதிகேசவனை வணங்கி "ஸ்ரீ பிரம்ம சம்ஹிதை' என்ற தத்துவ நூலைப் பெற்றதாகவும் கூறுகின்றனர். திருவிதாங்கூர் மன்னர்களின் குல தெய்வமாக இத்தல பெருமாள் வழிபடப்பட்டிருக்கிறார்.

மங்களாசாசனம்: நம்மாழ்வார் இத்தலத்தை தனது பாசுரங்களால் மங்களா சாசனம் செய்திருக்கிறார். அவர் அப்பாசுரங்களில் "வாட்டாறு' எனவும் "வாட்டாற்றான்' எனவும் ஊர்ப்பெயர், இறைவன் பெயர், அவரை வணங்குவதால் கிடைக்கும் பலன் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார்.

கோயில் அமைப்பு:  இந்தக் கோயில் "தந்த்ரா சமச்யம்' என்ற நூல் கூறும் பஞ்சப்பிராகார விதியின் அடிப்படையிலான அர்த்த மண்டபம், நாலம்பலம், விளக்கு மாடம், ஸ்ரீ பலிபுரா, புறமதில் என ஐந்து நிலைகளில் அமைந்து தமிழக /கேரள கோயில்கள் அமைப்பைக் கொண்டது. தாந்திரீக முறை பூஜைகள் நடைமுறையில் உள்ளன. ஆலயத்தில் கல்வெட்டுச் சான்றுகள் ஏராளமாக உள்ளன.

மூலவர் திருமேனி சிறப்பு: ,கிடந்த திருக்கோலத்தில், மேற்கு பார்த்து காட்சி தருகிறார். கல்லால் வடிக்காத திருமேனி. 16008 சாளக்கிராமத்தால் கடுசக்கரை யோகம் என்னும் கலவையால் வடிவமைக்கப்பட்டு, 22 அடி நீளம் பாம்பணையில் பள்ளிகொண்டுள்ள மிக அழகிய கோலம். திருமாலின் "பஞ்சாயுத புருஷர்கள்' என அழைக்கப்படும் சக்கரம், வாள், வில், கதை, சங்கம் என்ற ஐந்தும், தொடர்ந்து சூரியன் மற்றும் கருடாழ்வார் ஆகியோர் உருவங்களில் காட்சி தருகின்றனர். திருவடிக் கீழ் சிவலிங்கமும், இடக்கரம் தொங்கும் இடத்தில் ஹாதலேய மகரிஷியும், ஸ்ரீதேவியும், பூதேவியும் அமர்ந்த கோலத்தில் அருளுகின்றனர். மற்ற இடங்களில் இருப்பது போல் நாபியில் பிரும்மா இல்லை, பத்மமும் கிடையாது. மூலவரை திருமுகம், திருக்கரம், திருப்பாதம் என்னும் 3 நிலைகளை கருவறை முன் உள்ள மூன்று வாயில்கள் வழியாகத்தான் தரிசிக்க முடியும்.

இதர சந்நிதிகள்: தாயார் மரகதவல்லி என்ற திருநாமம் கொண்டு தனி சந்நிதி கொண்டு அருளுகின்றாள். இந்தக் கோயில் திருச்சுற்றில் திருவம்பாடி ஸ்ரீ 
கிருஷ்ணனுக்கும், ஸ்ரீ சாஸ்தாவுக்கும் தனித்தனியே சந்நிதிகள் உள்ளன. இக்கோயிலுக்கு அருகில் ஸ்ரீவழிப்பிள்ளையார் கோயிலும், ஸ்ரீ குல சேகரப்பெருமாள் கோயிலும் அமைந்துள்ளன.
நடைபெற உள்ள கும்பாபிஷேகம்:  வேணாட்டு அரசர் வீரரவிவர்மாவால் கடைசியாகத் திருப்பணிகள் செய்யப்பெற்று 1604}ஆம் ஆண்டில் குடமுழுக்கு நடந்திருக்கிறது. தற்போது ஜூன் 29}இல் தொடங்கி ஜூலை 9}ஆம் வரை மகாகும்பாபிஷேக வைபவங்கள் நடைபெறுகின்றன.

தல இருப்பிடம்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலிருந்து 30 கி.மீ தொலைவில் திருவட்டாறு உள்ளது.  

தகவல்களுக்கு:  9442577047, 9442935735, 9443375175.

- எஸ்.வெங்கட்ராமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT