வெள்ளிமணி

பதவியும், பொறுப்பும்!

21st Jan 2022 01:35 PM

ADVERTISEMENT


தகுதியற்றவர்களும், பொருத்தமற்றவர்களும், உயர் பதவிகளிலே அமர்த்தப்படுகின்றார்கள் என்றால் அந்தச் சமுதாயம் சீரழியப் போகிறது என்று பொருள்.

உலக முடிவு நாளின்போது இதுபோன்ற தகுதியற்றவர்களை பெரிய பொறுப்புகளில் நியமிக்கின்ற விபரீதங்கள் வெளிப்படையாக நடக்கும் என்பது நபி (ஸல்) அவர்களின் வாக்கு.
ஒரு மனிதர் பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து,  "இறைவனின் தூதர் (ஸல்) அவர்களே!  கியாமத் (இறுதி நாள்) எப்போது வரும்?' என்று கேட்டார்.  அதற்கு, நபியவர்கள், "பொறுப்புகளைத் தகுதியற்றவர்களின் கைகளில் ஒப்படைக்கும் காலம் தோன்றியதும் இறுதி நாளை எதிர்பாருங்கள்!' என்று பதிலளித்தார்கள்.

அமீருல் முஃமினீன் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு மகன் இருந்தும், அடுத்த கலீஃபாவாக உமர் (ரலி) அவர்களை நியமித்தார்கள்.  அதுபோல், அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்களுக்கு மகன் இருந்தும், சூரா ஜமாத் ஏற்படுத்தி தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என உமர் (ரலி) அவர்கள், மக்களின் முடிவுக்கே விட்டுவிட்டார்கள்.

ஆனால், இக்காலத்தில் நாட்டின் உயர் பதவிகளில் ஆரம்பித்து, தீனில் வழிகாட்டியாக இருக்கும் ஷைகுமார்கள் வரை தங்கள் மகனையே தங்களுக்குப் பிறகு பதவிக்கு வாரிசாக ஆக்கி விடுகிறார்கள்.  இங்கே தகுதி பார்ப்பதைவிட உறவு முறை பார்ப்பதையே அளவுகோலாக வைத்திருக்கிறோம்.

ADVERTISEMENT

பொறுப்புகளையும், பதவிகளையும், அதிகாரங்களையும் யாரால் முறையாகவும், கண்ணியமாகவும் நிறைவேற்ற முடியுமோ அவர்களிடமே ஒப்படைத்திட வேண்டும்.  லஞ்சம் வாங்கிக்கொண்டோ, வேறு சலுகைகளைப் பெற்றுக்கொண்டோ, உறவு முறைக்காக பொறுப்புகள் தகுதியற்றவர்களின் கரங்களிலே ஒப்படைக்கப்படுமேயானால் விபரீதமே விளையும்.

பதவிகளில், பொறுப்புகளில் தகுதியற்றவர்களை நியமிக்கின்ற போது, தகுதியானவர்களை விட்டு விடுகின்றோம் என்றே பொருள்.

"தகுதியான, திறமையான ஒரு மனிதன் இருந்து, அவரைப் புறக்கணித்துவிட்டு, தகுதியற்ற ஒரு மனிதனை நியமிப்பவர், அல்லாஹ், அவனது தூதர், இன்னும் முஸ்லிம்கள் என அத்தனை பேருக்கும் துரோகம் இழைத்துவிட்டார்' என்றே பொருள் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

- ஹாஜி மு.முகம்மது அன்வர்தீன்

ADVERTISEMENT
ADVERTISEMENT