வெள்ளிமணி

தேவியின் திருத்தலங்கள்: குத்தாலம் பரிமளசுகந்த நாயகி - 57

21st Jan 2022 01:25 PM

ADVERTISEMENT

 

"தவாபர்ணே கர்ணே - ஜப - நயந - பைஸுந்ய - சகிதா 

நிலீயந்தே தோயே நியத - மநிமேஷா: ஸபரிகா:'

-செளந்தர்ய லஹரி 

ADVERTISEMENT

பெண்ணே இப்பிரபஞ்ச சக்தி. அவள் நெருப்பாக இருக்க வேண்டும். இந்த உலகம் இயங்குவது அவளால்தான். நல்ல பண்புகள், குணங்கள், ஒழுக்கங்களுடன் பெண் வாழ வேண்டும் என்று வலியுறுத்துகிறது அம்பிகையின் அவதாரங்கள்.

காதல் என்று வரம்பு மீறிப் போகும் பெண்கள், பெற்றோர் சொல் கேளாமல் எல்லை மீறக் கூடாது என்பதை குத்தாலம் பரிமள சுகந்த நாயகி உணர்த்துகிறாள். "காதலித்தாலும், தகுதியுடையவனை விரும்பி, அவனைப் பற்றி பெற்றோர்களிடம் கூறி, அவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்!' என்று விளக்குகிறது அம்பிகையின் வரலாறு.

பரத மாமுனிவர் "அம்பிகையே தன் மகளாகப் பிறக்க வேண்டும்!' என்று கடும் தவம் இருந்தார். அவரின் தவத்தில் மகிழ்ந்து ஈசன், பார்வதியை வேள்விக் குண்டத்தில் பிறக்கச் செய்தார். பிறந்த குழந்தையை முனிவர் ஆனந்தமாக எடுத்துச் சென்று ஆசையுடன் வளர்க்கிறார். 

அம்பிகையின் ஒரே விருப்பம், ஈசனைக் கணவனாக அடைய வேண்டும் என்பதே! காவிரிக்கரையில் மணலால் லிங்கம் செய்து வழிபாடு செய்து வருகிறாள். எட்டாவது நாள் வழிபாடு செய்யப் போகும்போது, அங்கு மற்றொரு லிங்கம் இருப்பதைக் கண்டு, ஈசனே அங்கு எழுந்தருளி இருப்பதாகப் பூரித்து, மகிழும்போது ஈசன் காட்சி அளிக்கிறார்.

பார்வதியின் கரம் பற்றி ஈசன் அழைக்கையில், "அய்யனே! என் பெற்றோர்கள் சம்மதத்துடன், அவர்கள் அறிய என்னைத் திருமணம் செய்து கூட்டிச் செல்லுங்கள்!' என்று கூறி விடுகிறாள். 

ஈசன் சம்மதித்து, நந்தியை பரத மாமுனிவரிடம் பார்வதியைப் பெண் கேட்டு அனுப்புகிறார். முனிவரும் மகிழ்ந்து சம்மதிக்க, மணநாள் குறிக்கப்படுகிறது.
கைலாயத்திலிருந்து ரிஷப வாகனத்தில் ஈசன் வர, அவருக்கு முன் விநாயகர் செல்ல, உத்தாலம் என்னும் மரம் அவர்களுக்கு நிழல் தந்து கொண்டே வந்தது. திருமணம் முடிந்ததும், தான் இங்கு வந்ததற்கு அடையாளமாக உத்தால மரத்தையும், அணிந்திருந்த பாதுகைகளையும் விட்டுச் சென்றார் ஈசன்.

எனவேதான் இத்தலம் "குத்தாலம்' என்று அழைக்கப்படுகிறது. ஈசனின் பாதுகைகளை நாம் இன்றும் இங்கு தரிசிக்க முடியும். இங்கு உத்தால மரம், தல விருட்சமாக விளங்குகிறது. பதும தீர்த்தம், சுந்தர தீர்த்தம், காவிரி தீர்த்தம் என்று மூன்று தீர்த்தங்கள் உள்ளன. 

அழகான ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளது. இதன் வலப்புறம் உத்தால மரம் உள்ளது. நந்தியைக் கடந்து உள்ளே சென்றால் இடதுபுறம் அம்மன் சந்நிதி உள்ளது. உள்ளே மகாலட்சுமி, சபாநாயகர், சந்நிதிகள், கருவறை வெளிச்சுற்றில் நவகிரகம், மங்கள சனீஸ்வரர், பைரவர், விசுவநாதர், வள்ளி, தெய்வானையுடன் முருகன் ஆகியோருடன் ஈசனின் லிங்கத் திருமேனியும் உள்ளது.

இங்கு அம்பிகை செளந்தர நாயகி, அமிர்த முகிழாம்பிகை, அரும்பன்ன வன முலையாள், பரிமளசுகந்த நாயகி என்றும் அழைக்கப்படுகிறாள்.
ஐயனை மணந்த பூரிப்பு, ஈசனால் விரும்பப்பட்ட பெருமிதம் என்ற உணர்வுகள் முகத்தில் ததும்ப, கம்பீரமாகக் காட்சி அளிக்கிறாள் அன்னை. மகிழ்ச்சியுடன் இருப்பதால் இங்கு அன்னை வேண்டிய வரம் தருவாள் என்கிறார்கள். திருமண பரிகாரத் தலம் என்பதால், இங்கு வந்து அம்மனை வேண்டினால் திருமணம் விரைவில் நடக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

சரும நோய் நீங்கும் பரிகாரத் தலம். இங்குள்ள சுந்தர தீர்த்தத்தில் நீராடி இறைவனை வேண்டினால் நோய் தீருகிறது. தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கும், இறைவிக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள். 
அக்னி தன் பழி தீர்த்தது, விக்கிரம சோழன் மனைவியின் குஷ்ட நோய் தீர்த்தது, சுந்தரரின் சரும நோய் தீர்த்தது என்ற பல பெருமைகளை உடையது குத்தாலம். காளி, சூரியன், மன்மதன், காஸ்யபர் போன்றோர் வழிபட்ட தலம் இது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இத்திருக்கோயில், சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் சோழ மன்னர்களால் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. 
சோழர் மற்றும் விஜயநகரத்தார் கல்வெட்டுகளில், இக்கல்யாண ஆலயத்திற்கு நிலம் வழங்கிய செய்தி உள்ளது. உணவளிக்க நிலம், மடம் போன்றவைகளை சோழர்கள் தந்துள்ளனர்.

அம்பிகை கருணை மிகுந்தவள். அவளால் வகுக்கப்பட்ட அற்புத நியதியின் படியே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. தன்னை நோக்கி ஒருவரை இழுப்பது கூட அவளின் சித்தம்தான்.

அவளால் உண்டாக்கப் பட்ட உலகத்தில் அவளின் நினைவுடன் ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம். பகவான், அம்பாள், கடவுள், சக்தி என்று நாம் பல்வேறு பெயரிட்டு அழைத்தாலும், அனைத்தும் ஒரே பிரமாண்டமான அம்பிகையைத்தான் குறிக்கிறது.

தன் பக்தர்கள் "அன்னையே!' என்று அழைத்தால் உடனே ஓடி வந்து அனைத்தும் அருள்கிறாள். உடனுக்குடன் கொடுப்பதால் கடன் படாதவளாக இருக்கிறாள். 

"அவள் எப்போதும் விழிப்புடன், பக்தர்களின் நலன் பற்றி, கவனமாக இருக்கிறாள். மீன் போல் துள்ளி விளையாடும் கண்கள், அடிக்கடி அன்னையின் காதருகே சென்று, பக்தர்களின் குறைகளைச் சொல்கின்றன!' என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.

எந்நேரமும் தன் குழந்தைகளின் குறைகளைத் தீர்க்கவே காத்திருக்கிறாள் அம்பிகை.

மனத்தால், வாக்கால், செயலால் நாம் ஏதேனும் காரியங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் எந்தக் காரியமும் இல்லாமல் அம்பிகை நம்மை இயக்கிக் கொண்டு இருக்கிறாள்.

அவளிடம் நம் மனதை ஒப்படைத்து விட்டால், அவளிடமே ஒன்றி விட முடியும். பக்தியால் மட்டுமே இதை  அடைய வேண்டும். அந்த நிலைத்த பக்தியையும் அவளே தருவாள்!

(தொடரும்)
 

ADVERTISEMENT
ADVERTISEMENT